பூரண சமாதானத்துடன் காக்கும்படி (ஏசாயா 26:3)

தேவனுக்கு மகிமை!!!.

பூரண சமாதானத்துடன் காக்கும்படி

"
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்."  ஏசாயா 26:3

நமது கிறிஸ்தவ வாழ்க்கை சமாதானத்தால் நிறைந்திருப்பது மட்டுமல்லாமல், நாம் பூரண சமாதானத்தில் வாழவும் வேண்டும். ஏனென்றால், சமாதானத்தில் வாழும்படி தேவன் நம்மை அழைத்திருக்கிறார் (1 கொரிந்தியர் 7:15). இயேசு அவளுடன் இருந்தபோதிலும், மார்த்தாள் அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டு கலங்கி காணப்பட்டாள் (லூக்கா 10:41). அதை போல, இயேசு நம் வாழ்வில் இருந்தபோதிலும், நம் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளும் எதிர்ப்புகளும் எழும்போது, ​​நாம் அறியாமலேயே பாரப்பட்டு, கலக்கமடைந்து, ஏமாற்றமும் துக்கமும் அடைகிறோம். அதன் காரணமாக, நம் வாழ்வில் சமாதானத்தை இழந்தவர்களாக நாம் மாற்றப்படுகிறோம். இரண்டு காரணங்களினால் இந்த சமாதானமின்மை நமக்கு  ஏற்படுகிறது. முதலாவதாக, நாம் தேவனை நம்புவதாகச் சொல்கிறோம், ஆனால் பெரும்பாலும் மனிதர்களையும் பிரபுக்களையும் நம்புகிறோம். அது நமக்குத் தோல்வியில் முடிகிறது. ஏனென்றால் அவர்கள் நமக்கு உதவி செய்ய முடியாது (சங்கீதம் 146:3). எனவே, மனுஷனையும் பிரபுக்களையும் நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தரில் பற்றுதலாயிருப்பது நலம் என்று நாம் உணர வேண்டும் (சங்கீதம் 118:8-9). மட்டுமல்ல நாம் மனிதனை நம்புவதால் கர்த்தரை விட்டு விலகுகிற இருதயம் உள்ளவர்களாக சபிக்கப்பட்டவர்களாக மாறுவார்கள் (எரேமியா 17:5). இந்த சாபத்தின் காரணமாக, நாம் நமது சமாதானத்தை இழந்து, கலக்கமடைந்தவர்களாக துன்மார்க்கர்களாக மாறுகிறோம். எப்படியென்றால் நமக்கு யார் உதவுவார்கள் என்று தெரியாததால், உதவிக்காக அங்கேயும் இங்கேயும் அலைந்தவர்களாக அனைவரையும் நம்புகிறோம். இவ்வாறு  சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிப்பட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அவன் இருமனமுள்ளவன் ஆகையால் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாம் என்று நினையாதிருப்பானாக (யாக்கோபு 1:6-8). இதன் காரணமாக, சமாதானமில்லாத துன்மார்க்கர்களைப் போல, அமர்ந்திருக்கக் கூடாமல் கலக்கமுள்ளவர்களாக அலைகிறான் (ஏசாயா 57:20-21). அவர்களுடைய துன்மார்க்கம் என்னதென்றால் இவர்கள் ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கு ஏதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உள்ளவர்கள் என்பதே (எபிரேயர் 3:12). எனவே, அவர்களால் தேவனை நம்ப முடியாமல் போகிறது.

மேலும் இரண்டாவது விஷயம் தேவனை நம்புகிறவர்கள் என்று கூறப்படுகிறவர்களை நாம் கவனித்தால் அவர்களுக்கு உறுதியாக தேவனை பற்றிக்கொள்ள முடியவில்லை என்பதே. நாம் கர்த்தரில் நம்பிக்கை வைப்பது அல்ல கர்த்தரில் மட்டுமே நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும் (எரேமியா 17:7). உறுதியான மனதை உடையவர்களுக்கு தான் கர்த்தரில் மட்டுமே நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க முடியும் (ஏசாயா 26:3). நம் மனம் உறுதியாக இல்லாவிட்டால், அது ஒரு குரங்கைப் போல அங்கேயும் இங்கேயுமாக  அலைபாய்ந்துகொண்டே இருக்கும். நாம் ஜெபிக்க உட்காரும்போதுகூட, பல்வேறு எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் கவனத்தை இழந்து, சரியாக ஜெபிக்க முடிவதில்லை. உறுதியான மனதுடன் தேவனை நம்பியிருக்கிறவனுக்கு பூரண சமாதானம் கிடைக்கும்.

உண்மை என்னவென்றால், மனிதர்களாகிய நமக்கு இது எளிதானதல்ல. தாவீதின் வாழ்வில் வந்த சோதனையின் மத்தியில், அவன் இருமனதுள்ளவானாக தேவன் மீதான தனது உத்தம இருதயத்தை இழந்து பாவம் செய்தான் (2 சாமுவேல் 11:2-5). அப்போது அவன் தேவனிடம் ஜெபித்தது சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் என்பதே. அதனுடன் நிலைவரமான ஆவியை தனக்கு புதுப்பிப்பதற்கும் ஜெபித்தார். உற்சாகமுள்ள ஆவியினால் தேவன் தன்னை தாங்கும் போது தனக்கு தேவ சமூகத்தில் உறுதியுள்ளவனாக காணப்படலாம். அதோடுகூட தேவன் தமது பரிசுத்த ஆவியைத் தன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளாதபடிக்கும் அவர் ஜெபித்தார் (சங்கீதம் 51:10-12). எனவே, நமது உற்சாகமான  ஆவியும் தேவனுடைய பரிசுத்த ஆவியும் இணைந்து, தேவன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து ஜெபிக்க முடியும்.

நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால் உறுதியாக தேவனில் மட்டும் நம்பிக்கை வைத்து சமாதானம் பெறுவதற்கு முடிவதில்லை. எனவே, ஆவியானவர்தாமே நமது பலவீனங்களில் உதவி செய்து வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (ரோமர் 8:26). நாமும் அல்லது உற்சாகமுள்ள நமது ஆவியும் நமக்குள்ளே தவிப்பதாக நமக்கு வேதவாக்கியத்தில் காணலாம் (ரோமர் 8:23). அப்படியாக, தேவனிடமிருந்து வரும் பரிசுத்த ஆவியானவரும், உற்சாகமுள்ள நமது ஆவியும் அல்லது நமது மனதும் இணைந்து ஒன்றாக தேவனில் நம்பிக்கை வைத்து ஜெபிக்க முடியும். இரண்டு பேர் ஒருமனதாக ஜெபிக்கும் காரியங்களில் தேவன் நமக்கு பதிலளிக்கிறார் (மத்தேயு 18:19).

நாம் துக்கப்படும்போது பெருமூச்சு விடுகிறோம். நமது தேவைகள், பிரச்சனைகள் மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில், மனதை ஒருமுகப்படுத்தி, மனமுடைந்து, பெருமூச்சு விட்டு, ஒடுக்கப்பட்டவர்களாக வேண்டும். இயேசுவும் வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு ஜெபித்ததாக பார்க்கலாம் (மாற்கு 7:34). அப்படியானால் நொறுங்குண்ட இருதயத்தை புறக்கணிக்காமல் அவர்களுக்கு சமீபமாயிருந்து அவர்களை இரட்சிக்கும் தேவன், நமக்கும் உதவுவார் (சங்கீதம் 34:18, 51:17). மிகுதியான விசாரித்தினாலும் கிலேசத்தினாலும் மனக்கிலேசமுள்ளவளாக கர்த்தருடைய சந்நிதியில் அன்னாள் இருதயத்தை ஊற்றி ஜெபிக்கிறாள் (1 சாமுவேல் 1:15-18). தேவன் அவளுடைய ஜெபத்தைக் கேட்டு பதிலளித்தது நிமித்தம் மனக்கிலேசம் நீங்கி (நெகேமியா 2:2) அப்புறம் அவள் துக்கமுகமாக இருக்காதப்படிக்கு தேவன் உதவுகிறார்.

நாம் உத்தம இருதயமுள்ளவர்களாக, உறுதியாய் பற்றிகொள்பவராக, தேவனிடம் நம்பிக்கையுடன் ஜெபத்தோடு தேவசந்நிதியில் காணப்படும்போது தேவன் நமக்கு வேண்டி தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணுகிறார்  (2 நாளாகமம் 16:9). அதனால் நாம் இரண்டு காரியங்களை பெற்றுக் கொள்வோம். முதலாவதாக, நாம் தேவசந்நிதியில்  ஜெபிக்கும்போது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நமது இருதயங்களையும் நமது சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ள முடியும் (பிலிப்பியர் 4:6-7). நமக்கு பூரண சமாதானத்தைத் தருவார். இரண்டாவதாக, நம் ஜெபங்களைக் கேட்கிற தேவன் நமது சந்தோஷமும் சமாதானமும் நிறைவாகுப்படிக்கு நமது ஜெபங்களை கேட்டு ஜெபத்தின் காரியங்களில் நமக்காகக் கிரியை செய்கிறார் (யோவான் 16:24). நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ள தேவன் (ஆதியாகமம் 17:1). அந்த சர்வ வல்லமையுள்ள தேவன் நமக்காகக் கிரியை செய்து, தேவனிடமிருந்து மகிமையானவைகளைப் பெற்றுக்கொள்ள நமக்குத் தகுதியளிக்கிறார் (லூக்கா 1:49). மனுஷரால் கூடாத காரியம் தேவனால் கூடும் என்று இயேசு கூறுகிறார் (மாற்கு 10:27). ஆகையால், நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின் படியே செய்ய வல்லவரான தேவன், நம்முடைய தேவைகளுக்கேற்ப நமக்குச் செயல்படுகிறார் (எபேசியர் 3:20). நம்முடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி தேவன் நம்முடைய ஜெபங்களைக் கேட்டு, நமக்கு உதவி செய்து நாம் பரிபூரண சமாதானத்தை பெற்றுக் கொள்கிறோம். இந்த விதத்தில் நாம் அனைவரும் சமாதானத்தைக் கண்டடைய கர்த்தராகிய தேவன் உதவுவாராக.