தேவனுக்கு பிரியமான சிறிய கூட்டம் (லூக்கா12:32)
தேவனுக்கு மகிமை
தேவனுக்கு பிரியமான சிறிய கூட்டம்
பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு இராஜ்ஜியத்தை கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். லூக்கா12:32.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய பிரசங்கத்தினிடையில் தனக்குள்ளவர்களைப் பற்றிக்கூறும்போது சிறியர் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினார் என்று (மத்தேயு 10:42/18:6,10,14/25:40,45.) இவ்வேத பகுதிகளில் காணலாம். இயேசு சொன்ன மிகவும் சிறியவர்கள் என்ற கூற்றை இயேசுவிலிருந்து கவனித்த அப்போஸ்தலனாகிய பவுல் தன் ஜீவிய அனுபவத்தில் அப்போஸ்தலர் எல்லோரையும் விட நான் சிறியவன் என்றும்(1கொரிந்தியர் 15:9) பரிசுத்தவான்கள் எல்லாவரிலும் நான் சிறியவன் என்றெல்லாம் எடுத்துரைக்கிறார்( எபேசியர் 3:8). நாமும் மற்ற எல்லோரை காட்டிலும் சிறியவர்களாக மாறினால் மட்டுமே பெரியவர்களாக மாற்றப்படமுடியும் (லூக்கா 9:48). தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாய் இருக்கிறவன் எவனோ அவன் யோவான் ஸ்நானனிலும் பெரியவனாயிருக்கிறான் (லூக்கா 7:28). அதுமட்டுமல்லாமல் நாம் ஒரு சிறிய கழுதைக்குட்டியாக மாறினால் மட்டும்தான் நம்முடைய இந்த பூலோக வாழ்வில் கர்த்தராகிய இயேசு இராஜாவாக நம்மில் ஏறி வெளிப்பட முடியும்(யோவான்12:14,15).
சிறுமந்தை என்று கூறும்போது பெரிய மந்தையும் இருக்கிறது என்பது உறுதியாகிறது. தேவனுடைய வசனத்தை நாம் படிக்கும்போது பெரிய கூட்டத்திலல்ல சிறு கூட்டத்தாரில்தான் தேவன் பிரியப்படுகிறார். இஸ்ரவேல் ஜனங்களுடைய வனாந்திர பிரயாணத்தில் பாரான் வனாந்தரத்தில் காதேசில் ஜனங்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்துப் பேசினபோதும் மிகவும் சிறியகூட்டமான யோசுவாவும் காலேப்பும் அந்தப் பெரிய கூட்டத்தாரோடு கூறினது கர்த்தர் நம்மில் பிரியமாயிருந்தால் அந்த தேசத்தை நமக்கு தருவார் என்பதாகும்(எண்ணாகமம் 14:1-9). இவர்கள் சிறு கூட்டமாக கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றியதினால் அந்த தேசத்தை அவர்களுக்கு கொடுக்கும்போது பெரும்கூட்டமான ஜனங்கள் அத்தேசத்தில் பிரவேசிப்பதில்லை என்று கூறுகிறார்(எண்ணாகமம் 32:11,12). ஒரே ஞானபோஜனத்தை புசித்தும் அவர்களை பின்பற்றின ஞானக் கன்மலையாகிய கிறிஸ்துவிலிருந்து ஞானபானத்தை குடித்திருந்த போதிலும் அதிகமான பேரிலும் தேவன் பிரியமாயிருக்கவில்லை ஆதலால் வனாந்தரத்தில் அவர்கள் அழிக்கப்பட்டார்கள் (1கொரிந்தியர்10:2-5).
இது நமக்கு ஓர் முன்னறிவிப்பாக இருப்பதால் நாமும் சிறுமந்தையோடு சேர்ந்து தேவனை பிரியப்படுத்துபவர்களாக இருப்போமாக. கேட்டுக்குப்போகிற வாசல் வழியாய் போகிறவர்களாகிய அநேகரை போல அல்ல, ஜீவனுக்குப் போகிற வாசல் வழியாய் போகிறவர்களாகிய சிலராக இருக்க வேண்டும்(மத்தேயு7:13,14). இடுக்கமான வாசல் வழி உட்பிரவேசிக்கப் பிரயாசப்பட்டு பிரவேசிக்க முடியாமல் போன பலராக அல்ல, நல்ல போராட்டம் போராடி உட்பிரவேசிக்கும் சிறு கூட்டமாக மாற்றப்பட வேண்டும் (லூக்கா 13:24). அழைக்கப்பட்ட அநேகராக அல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட சிலராக இருக்கவும் வேண்டும் (மத்தேயு22:14). இராஜஸ்திரீகள் மறுமனையாட்டிகள் கன்னியர்களுமாக எண்ணமில்லாத கூட்டத்தில் அல்ல இயேசுவின் புறாவும் உத்தமியுயமான மனைவியான ஒருத்தியாக காணப்படுவோமாக (உன்னதபாட்டு6:8,9) அப்படியானால் தேவன் நம்மில் பிரியப்பட்டு இராஜ்யத்தை நமக்கு கொடுக்க இயலும்.
சிறுமந்தை என்று கூறும்போது மீண்டும் மந்தை என்று அழைக்கப்படும் அந்த கூட்டத்தாரை குறித்தே சொல்லப்பட்டு இருக்கிறது என்று நாம் சிந்திக்க வேண்டியதாயிருக்கிறது. இயேசு தன் ஆடுகளுக்காக ஜீவனை கொடுக்கிறவரான நல்ல மேய்ப்பனாக இந்த உலகத்துக்கு வந்தார் (யோவான் 10:11,15). மனிதனின் முழு உலகத்தை பார்க்கிலும் விலையேறப்பெற்றஜீவனை மீட்டுக்கொள்ளும்படியாக (மத்தேயு16:26) இயேசு தன் ஜீவனை மீட்கும்பொருளாக கொடுக்கிறார்(மத்தேயு 20:28) இப்படி ஒருகூட்டம் மனிதர்களை தன் ஆடுகளாக மாற்றி ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பபனுமாக்கினார்(யோவான்10:16) இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள் தான் இந்த மந்தை(1பேதுரு1:18,19). அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அந்த ஜீவன் பரிபூரணமுடையதாக்கவுமே இயேசு வந்தார்(யோவான்10:10). இந்த நோக்கத்தை நிறைவேற்றும்படியாகவே இயேசு தன் மந்தையிலுள்ள ஆடுகளுக்கு தன் சத்தத்தை கேட்கப்பண்ணி அவைகளுக்கு முன்னில் நடக்கிறார். அவைகள் இயேசுவின் சத்தத்தை மாத்திரம் கேட்டு இயேசுவுக்குப் பின்செல்கிறது அந்நியர்களின் சத்தத்தை அறியாதபடியால் அந்நியர்களை விட்டு ஓடி இயேசுவை மட்டும் பின்பற்றுகிறது(யோவான்10:3-5). ஆகவேஅவைகள் ஒருக்காலமும் கெட்டுப்போகாமலிருக்க இயேசு அவைகளுக்கு நித்திய ஜீவனை கொடுக்கிறார் (யோவான்10:26-28). கெட்டுப்போக பின்வாங்குகிறவர்களாக அல்ல நம் ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களின் கூட்டத்தில் உள்ள இயேசுவை பின்பற்றுகிற ஆடுகளில் தேவன் பிரியமாய் இருக்கிறார்( எபிரேயர் 10:38,39) நாம் இந்த ஆட்டின் கூட்டத்துக்கு உட்பட்டவர்கள்தானா என்று நம்மை நாமே பரிசோதித்து பார்க்க வேண்டும்.
இந்த சிறுமந்தையின் தனித்துவம் என்பது தேவன் அவர்களிடத்தில் பிரியமாய் இருக்கிறார் என்பதே ஆகும். இந்த உலகத்தில் வரும் இயேசுவை குறித்து நான் ஆதரிக்கிற என் தாசன் என் ஆத்துமாவுக்கு பிரியமானவர் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது(ஏசாயா42:1). பூமியில் அந்த தீர்க்கதரிசனம் இயேசுவில் நிறைவேற்றப்பட்டதாக நாம் வாசிக்கிறோம்(மத்தேயு12:17-21). அதற்காக வாழ்ந்த இயேசுவை நாம் கவனிக்கும் போது இயேசு ஞானஸ்நானம் பெற்று கரையேறின உடனே இவரில் பிரியமாயிருக்கிறேன் என்ற சாட்சியை பெற்றுக்கொண்டார்(மத்தேயு3:16,17). அது மட்டுமல்ல இயேசு தம் ஜீவியகாலமெல்லாம் பிதாவுக்கு பிரியமானவைகளையே செய்து ஜீவித்தேன் என்று சாட்சிகூறுகிறார் (யோவான் 8:29). கிறிஸ்துவ வாழ்வின் இறுதி அனுபவமாகிய மகிமைப்படுதலை இயேசுபெறும்போது தேவன் மீண்டும் இயேசுவில் பிரியமாயிருக்கிறேன் என்று கூறுகிறார்(மத்தேயு17:5). நாமும் நம்முடைய ஞானஸ்நானத்தினால் தேவனுக்கு பிரியமான ஒரு கிறிஸ்துவ ஜீவியம் செய்ய ஆரம்பிக்கும் போது இயேசுவைப் போல எப்போதும் தேவனுக்கு பிரியமான கிரியைகளை செய்கிறவர்களாக இருக்க வேண்டும்(யோவான்8:29). அது மாத்திரமல்ல நாம் புத்தியுள்ள ஆராதனையாக நம் சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்கு பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் (ரோமர்12:1). அவைகளோடு சேர்த்து நம் ஜீவியத்தில் மற்றவர்களுக்கு நன்மை செய்தும் தானதர்மம்பண்ண மறவாமலுமிருக்கவும் வேண்டும் இப்படிப்பட்ட பலிகளின்மேல்தான் தேவன் பிரியமாயிருக்கிறார்(எபிரேயர்13:16). தேவனுடைய ராஜ்ஜியம் புசிப்பும் குடிப்புமல்ல அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. இந்த தேவ இராஜ்ஜியத்தின் அனுபவத்தில் கிறிஸ்துவுக்கு ஊழியஞ் செய்கிறவன் தேவனுக்கு பிரியனும், மனுஷரால் அங்கீகரிக்கப்பட்டவனுமாய் இருக்கிறான் (ரோமர்14:17-18). இப்பிரகாரமாக நம் ஜீவியத்தில் நன்றியுள்ளவர்களாக பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்கு பிரியமான ஆராதனை செய்கிறவர்களாக இருந்தால் தேவன் நம்மில் பிரியமுள்ளவராய் இருப்பார் நாம் அசைவில்லாத ராஜ்யத்தை பெற்றுக் கொள்கிறவர்களாகவும் இருப்போம்(எபிரேயர்12:28).
நாம் தேவனுக்கு பிரியமாய் இருந்து தேவனுடைய ராஜ்ஜியத்தை பெற்றுக் கொள்வதைப் பற்றி அதிகமாக நாம் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அல்ல பரலோகத்தில் இருக்கிற பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்கள்தான் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பார்கள் என்று இயேசு கூறினார்(மத்தேயு7:21). ஆகையால் நாம் பரலோக ராஜ்யத்திற்கு உட்பட்டவர்களாக இந்தபிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷந்தரியாமல் நன்மையும் பிரியமும் பரிபூரணமான சித்தம் இன்னதென்று அறிய மனதை புதுப்பித்து மறுரூபப்பட வேண்டியதாக இருக்கிறது (ரோமர்12:2).
எபேசியர் 1:5-10 வசனங்களில் தம்முடைய தயவுல்ல சித்தத்தின்படி என்றும் தம்முடைய தயவுல்ல சித்தத்தின் இரகசியம் என்றும் நாம் காண்கிறோம். தேவ சித்தத்தின்படியுள்ள ஜீவியம் செய்வதுதான் தேவனுக்குப் பிரியமானது என்று நாம் இவைகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். ஆகவே தேவனுக்குப் பிரியமுள்ளவர்களாக இருக்கும்படி கிறிஸ்துவின் ஊழியக்காரராக மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவர்களாய் இருக்கவேண்டும் (எபேசியர் 6:6). காரணம் இயேசுவும் பிதாவுக்கு பிரியமானவைகளை எப்பொழுதும் செய்கிறார் என்று சொல்லும்போது(யோவான்8:29), தன்னை அனுப்பின பிதாவின் சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியைகளை முடிப்பதே என காண்கிறோம்(யோவான்4:34). சரீரத்தில் பிதாவின் சித்தம் செய்ய உலகத்தில் வந்த இயேசுவைப்போல (எபிரேயர் 10:5-7) நாமும் தேவனுடைய சித்தத்தை செய்து வாக்குத்தத்தத்தை பெறக்கூடியவர்களாகவும் இருப்போம்(எபிரேயர்10:36). தேவன் தம்மிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கு தான் வாக்குத்தத்தம் பண்ணின இராஜ்யத்தை சுதந்தரிக்கிறவர்களாக நாம் மாற்றப்பட வேண்டும்(யாக்கோபு2:5). ஆகவே தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களாகும்படிக்கு கற்பனைகளை பெற்று அதன்படி ஜிவிக்கிறவர்களாக வேண்டும் (யோவான் 14:21). அந்தப்படியே தேவனுடைய கற்பனைகளை கைக்கொண்டு அதன்படி செய்கிறவர்களே தேவனுக்கு பிரியமானவர்கள் ஆவார்கள்(1யோவான்3:22).
சுருக்கமாக தேவனை நேசிக்கிறவர்கள் என்பதின் அளவுகோலாகிய தேவனுடைய வசனத்தை பெற்றுக்கொண்டு கைக் கொள்ளுகிறவர்களாக (யோவான் 14:21) பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தம் முழுமனதோடு செய்து ஜீவித்துக்கொண்டு பிதாவுக்கு பிரியமுள்ளவர்களாக பிதாவின் ராஜ்யத்தில் பிரவேசிக்க நமக்கு இயல வேண்டும். நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு உதவி செய்து அதை சாத்தியமாக்கி தருவாராக.