கிரியைகள் நம்முடன் பின் செல்லுமா? (வெளிப்படுத்துதல் 14:13)

தேவனுக்கு மகிமை.

கிரியைகள் நம்முடன் பின் செல்லுமா?

"
பின்பு பரலோகத்திலிருந்து ஒரு சத்தம்  உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்;" வெளிப்படுத்துதல் 14:13

தேவன் மனிதனைப் சிருஷ்டித்தபோது ​​அவர்கள் சிருஷ்டிபின் ஆரம்பத்தில் நிர்வாணமாக இருந்தபோதிலும், அவர்கள் வெட்கப்படாதபடிக்கு தேவனுடைய மகிமையினால் மூடப்பட்டிருந்தார்கள் (ஆதியாகமம் 2:25). ஆனால் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களானபோது (ரோமர் 3:23) தாங்கள் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதை அறிந்தார்கள் (ஆதியாகமம் 3:7). ஆகையால், துர்குணத்தில் உருவாக்கப்பட்டு, பாவத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் (சங்கீதம் 51:5) இவ்வுலகில் நிர்வாணமாகக் காணப்படுகிறார்கள். இவ்விதமாக, பாவத்தில் நிர்வாணமாக வாழும் ஒருவன், வாழ்க்கையில் நிர்வாணமாக இருக்க விரும்பாமல் வஸ்திரம் தரித்துக்கொள்ள வாஞ்சையுள்ளவனாக இருக்க வேண்டும் (2 கொரிந்தியர் 5:2). ஏதேன் தோட்டத்தில் அத்தியிலைகளைத்  தைத்து தங்களுடைய நிர்வாணத்தை மறைக்க விரும்பி அரைக்கச்சைகளை உண்டாக்கிய மனிதனுக்கு தேவன் தோல் உடைகளை உண்டாக்கி உடுத்தினார் (ஆதியாகமம் 3:7,21). அதை போல, மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறுகிற ஒருவர் பாவ மன்னிப்பைப் பெற்று (அப்போஸ்தலர் 2:38) இயேசுவுடன் இணைந்த ஒரு நபர் கிறிஸ்துவை தரித்தவனாக தேவனால் உடையுள்ளவனாக மாற்றப்படுகிறான் (கலாத்தியர் 3:27).

ஆனால், இயேசுவிடம் வந்து உடையுள்ளவனாக இருக்க விரும்பாத ஒரு நபர் நிர்வாணமாக அல்லது பாவத்தில்  வாழ்ந்து அவர்களுடைய பாவத்திலேயே மரிப்பான் (யோவான் 8:21). இவ்வாறு, உலகத்திற்கு நிர்வாணமாக வந்து, உலகத்தை விட்டு நிர்வாணமாகவே திரும்புகிறார்கள் (யோபு 1:21). துர்குணத்தில் உருவாக்கப்பட்டு பாவத்தில் பிறந்த மனிதன் (சங்கீதம் 51:5) மீறுதல்களிலும் பாவங்களிலும் வாழ்ந்து, பாவத்தில் மரிக்கும்போது (எபேசியர் 2:1) அவன் நிர்வாணமாகத் திரும்புவது மட்டுமல்லாமல், தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு போவதில்லை (பிரசங்கி 5:15-16). அவர்களுடைய வாழ்நாள் முழுவதுமான உள்ள பிரயாசம் வீணாகி தேவனுக்கு முன்பாகப் பலனுக்குத் தகுதியான எதையும் அவர்களால் கொண்டு செல்ல முடிவதில்லை. ஊருக்குள்ள, தேவனிடம் செல்லும் வழியான இயேசுவை (யோவான் 14:6) அறியாமல் வாழ்ந்ததினால், அவர் தங்களுடைய பயனற்ற பிராயசத்தில் இளைத்துப் போகிறார்கள் (பிரசங்கி 10:15). மட்டுமல்லாமல் மீறுதல்களிலும் பாவங்களிலும் மரித்த அவர்கள் (எபேசியர் 2:1) காலத்தின் முடிவில் பெரிய வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப்பில் மரித்தவர்களாகக் கொண்டுவரப்படுகிறார்கள். அவர்களுடைய பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் காணப்படாததினால், புஸ்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறபடி, அவர்களுடைய தவறான பலனற்ற கிரியைகளின்படி நியாயந்தீர்க்கப்பட்டு, இரண்டாம் மரணமாகிய பாதாளத்தில் அக்கினி ஏரியில் தள்ளப்படுகிறார்கள் (வெளிப்படுத்தல் 20:11-15) .

கர்த்தருக்குள் மரிக்கும் ஒரு நபர் பாக்கியவான் என்று சொல்லப்படும் வண்ணம் அவர்களுடைய பலனுக்குத் தகுதியான நற்கிரியைகள் அவரைப் பின்தொடர்கின்றன (வெளிப்படுத்தல் 14:13). காரணம் ஞானஸ்நானத்தில் கிறிஸ்துவுடன் இணைந்து, கிறிஸ்துவை தரித்துக்கொண்ட ஒரு நபர், தங்களுடைய கிரியைகளையெல்லாம்  கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்து சுதந்திரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவான் என்று அறிந்து கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறான் (கொலோசெயர் 3:23-24). ஆகையால், அப்படிப் பட்டவர்கள் கர்த்தருக்குள் தங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து  கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாக இருப்பார்கள் (1 கொரிந்தியர் 15:58). ஆகையால், முதல் கூட்டத்தாருக்கு அவர்களுடைய தவறான பலனற்ற கிரியைகளின்படி நியாயத்தீர்ப்பு வந்தபோது ​​இந்தக் கூட்டத்தாருக்கு அவனவனுடைய நற்கிரியைகளின்படி தங்கள் பலனை பெற முடியும் (வெளிப்படுத்தல் 22:12).

மேலும் இயேசுவை தரித்தவர்களாக ஆடையுள்ளவர்களை நாம் கவனமாக படிக்கும்போது, ​​அங்கும் ஒரு வேறுபாட்டைக் காண்கிறோம். ஒரு குழுவினர் இயேசுவிடம் வந்து, அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி செய்கிறவர்கள். மற்றொரு குழுவினர் இயேசுவிடம் வந்து, அவருடைய வார்த்தைகளைக் கேட்டாலும், அவருடைய வார்த்தையின்படி செய்யாதவர்கள் (மத்தேயு 7:24-27). அவர்கள் தேவனுடைய ஜனங்களாக தேவனுடைய சந்நிதியில் வந்து, தேவனின் வார்த்தைகளைக் கேட்டாலும், அதன்படி செய்கிறதில்லை, அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய் பேசுகிறார்கள் அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப் போகிறது (எசேக்கியேல் 33:31). தங்கள் உதடுகளினால் கனப்படுத்தினாலும், தங்கள் இருதயங்களைத் தூர விலக்கி வைத்திருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் தங்களுக்குப் போதிக்கப்பட்ட மனப்பாடங்கள் அல்லது தங்கள் பாரம்பரியங்களின்படி பழகிய மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைக்கு அவர்கள் கீழ்படிகிறார்கள் (ஏசாயா 29:13). அவர்கள் இயேசுவின் வார்த்தைகளாகிய உபதேசங்களுக்கு மனப்பூர்வமாக கீழ்ப்படிவதில்லை (ரோமர் 6:17). சுருக்கமாக, அவர்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்: தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறவர்கள் மற்றும் அதற்குக் கீழ்ப்படியாதவர்கள். தேவனுக்கு ஊழியஞ் செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசம் (மல்கியா 3:18) நாம் காணும்படி நல்ல மேய்ப்பராகிய நமது இயேசு தம்முடைய மகிமையின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்போது அவர்கள் இரண்டு தனித்துவமானக் குழுக்களாக மாறுகிறார்கள். இயேசுவின் சத்தத்தைக் கேட்டு ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாக வாழ்ந்தவர்கள் என்றாலும் (யோவான் 10:16) அவர்கள் கீழ்ப்படிதலுள்ள செம்மறியாடுகளாகவும் கீழ்ப்படியாத வெள்ளாடுகளாகவும் பிரிக்கப்படுகிறார்கள் (மத்தேயு 25:31-46). இயேசு கட்டளையிட்டக் கிரியைகளை முடிவுபரியந்தம் கைக்கொள்ளுகிறவன் இயேசுவைப் போல அதிகாரத்தைப் பெற்று (வெளிப்படுத்தல் 2:26-27) தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்கிறார்கள் (மத்தேயு 25:34). கானான் தேசத்திற்குள்ள வனாந்தர பயணத்தில் தேவனுடைய வார்த்தையாகிய மன்னாவை வெறுத்து (எண்ணாகமம் 21:5)  அது தங்களுக்குத் தேவையில்லை என்று கூறி, அதற்குப் பதிலாக உலகப்பிரகாரமான நன்மைகளும் ஆசீர்வாதங்களும் தங்களுக்குப் போதும் என்று கேட்ட இஸ்ரவேல் ஜனங்கள்  (எண்ணாகமம் 11:4-6) தேவனுடைய கோபத்தின் அக்கினி மூண்டு மகா பெரிய வாதையால் வாதித்தார் (எண்ணாகமம் 11:33). அவ்வாறே, அவருடைய இடது பக்கத்தில் இருப்பவர்களை அக்கினியால் மூட்டப்படும் நித்திய அக்கினியில் தள்ளப்படுகிறார்கள் (மத்தேயு 25:41). நீங்கள் மனம்பொருந்தி கீழ்ப்படிந்தால், தேவனுடைய ராஜ்யத்தின் நன்மையை அனுபவிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களாகில் வசனம் ஆகிய பட்டயத்துக்கு இரையாகி (ஏசாயா 1:19-20) நரகத்திற்கு, நித்தியமான நாசத்திற்கு போவார்கள்.

மேலும், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றுக்குக் கீழ்ப்படிந்து, தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் மேலே குறிப்பிடப்பட்ட முதல் குழுவினரை நாம் பார்த்தால், அவர்களிடையே இரண்டு விதமான அனுபவங்களைக் காண்போம். நாம் ஒன்று கொரிந்தியர் மூன்றாம் அதிகாரத்தைக் கவனிக்கும்போது, ​​இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி செய்து, கன்மலையின் மேல் கட்டுகிற புத்தியுள்ளவர்களை (மத்தேயு 7:24), கிறிஸ்துவாகிய அஸ்திபாரத்தின்மேல் மட்டுமே கட்டுகிறவர்களை காண்கிறோம். அவர்களில் சிலர் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல் போன்ற விசேஷமானதும்  நிலைக்கக்கூடியதுமான பொருட்களைக் கொண்டு கட்டுகிறார்கள். மற்று சிலர் அதே அஸ்திபாரத்தின் மேல் மரம், புல், வைக்கோல் போன்ற மலிவானதும் அழுகக்கூடியதுமான பொருட்களைக் கொண்டு கட்டுகிறார்கள் (1 கொரிந்தியர் 3:10-15). நமது கிறிஸ்தவ வாழ்க்கையை நாம் கருத்தில் கொண்டால், தேவன் நம்மை அருமையானவர்களாக நேசித்தப்படியால் (ஏசாயா 43:4) நமக்கு அருமையான மீட்பைக் கொடுப்பதற்காக (சங்கீதம் 49:9) இயேசுவின் விலையேறப் பெற்ற இரத்தத்தால் நம்மை மீட்டுள்ளார் (1 பேதுரு 1:19). நம் வாழ்நாள் முழுவதும் நாம் அருமையானவர்களாக வாழ வேண்டும் என்று விரும்பும் தேவன், நமக்குள்ளே நற்பலனை பெற காத்திருந்து (யாக்கோபு 5:7) நமது மரணம் அவருக்கு அருமையானதாக காணப்படுகிறது (சங்கீதம் 116:15). நாம் அருமையானவர்களாகவும் தனித்துவமானவர்களாகவும் இருப்பதற்காக, இயேசுகிறுஸ்துவாகிய பரீட்சிக்கப்பட்டதும் விலையேறப்பெற்றதுமான மூலைக்கல்லாகிய அஸ்திபாரக்கல் தேவன் நமக்கு தந்திருக்கிறார் (ஏசாயா 28:16). இயேசுவை விசுவாசிக்கிற நாம் பதறிப்போகாமல் பொறுமையோடு நிற்கும்படிக்கு அருமையான விசுவாசத்தைத் தந்த தேவன் (2 பேதுரு 1:1) திவ்வியமான அனுபவத்திற்கு பங்குள்ளவர்களாகும் பொருட்டு மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களையும் நமக்கு அளித்திருக்கிறார் (2 பேதுரு 1:4). அதற்கு ஏற்றதான ஒரு மேன்மையும் உன்னதமுமான வாழ்க்கை நமக்கு உண்டாக வேண்டும். மட்டுமல்ல நாம் பொன்னைப் போல விலையேறியவர்களாக இருக்கும்படிக்கு அதிக விலையேறிய விசுவாசத்தின் சோதனை நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. (1 பேதுரு 1:7). அதன்மூலம், நாம் நல்லவராக தேவனை நேசித்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து (யோவான் 14:21)  ஜீவகிரீடத்தைப் பெறுவோம் (யாக்கோபு 1:12). சுருக்கமாக, தேவனுடைய வார்த்தையின்படியே வாழ்ந்து அதற்கு ஏற்றதான மேன்மையான கிரியைகளைச் செய்கிறவர்களின் கிரியைகள் நிலைத்திருந்து கர்த்தருடைய வருகையின்போது பலன்களை பெறுவதற்கு தகுதியானவர்களாய் (வெளிப்படுத்தல் 22:12) நிறைவான பலனைப் பெறுவார்கள்  (ரூத் 2:12).

ஆனால் மற்றொரு கூட்டத்தினர், இயேசு கிறிஸ்துவின் அஸ்திபாரத்தின் மீது மலிவான மற்றும் அழிந்துபோகக்கூடிய மரம், புல் மற்றும் வைக்கோலைக் கொண்டு கட்டுகிறார்கள். அத்தகையவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் இயேசுவையும் (லூக்கா 23:11) தேவனுடைய கட்டளைகளையும் அற்பமானதாகக் கொண்டு (லேவியராகமம் 22:9) தேவனுடைய வார்த்தையின் மேன்மைக்கு ஏற்ப வாழாமல் தங்கள் வாழ்க்கையை முக்கியமற்றதாகவும் விலையற்றதாகவும் ஆக்குகிறார்கள். அவர்களுடைய கிரியைகள் வெந்துபோனதால் அவர்கள் நஷ்டமடைவார்கள். ஆனால் அவர்கள் நரகத்திற்குச் செல்லாமல் இரட்சிக்கப்படுவார்கள் (1 கொரிந்தியர் 3:15). அதாவது, தேவனுடைய வார்த்தையை முக்கியமற்றதாக ஆக்கி, அவ்வாறு போதித்து வாழ்பவர் தேவனுடைய ராஜ்யத்தில் மிகச் சிறியவராகக் காணப்படுகிறார்கள். ஆனால், உள்ளபடியே போதித்து, தேவனுடைய கட்டளைகளை அவ்விதமாக கைக்கொள்ளுகிறவன் தேவனுடைய ராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான் (மத்தேயு 5:19). நாம் இங்கே செய்த  நன்மையாவது தீமையாவது அதற்கு ஏற்ற வண்ணம் பெறுவதற்கு கிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன்பாக  வெளிப்படும் போது (2 கொரிந்தியர் 5:10) நமது நற்கிரியைகளுக்குத் தக்கபடி நாம் பலனை பெற முடியும். தேவன் நமக்காக நியமித்திருக்கிறதான விசேஷித்த நன்மையைப் பெற்றுக்கொள்ள விரும்பி, திருவசனத்தின்படி வாழ்ந்து, நல்ல ஊழியர்களாக மாறுவோம் (எபிரேயர் 11:40). சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்பவர்களாக  மகிமையைப் பெறுவோம் (ரோமர் 2:7). கர்த்தராகிய தேவன் நம் அனைவருக்கும் உதவி செய்து, நம்மை ஆயத்தப்படுத்துவாராக.