நித்தியத்திலுள்ள ஜீவவிருட்சம் (வெளி 22:14)

நித்தியத்திலுள்ள ஜீவவிருட்சம்  (வெளி 22:14)
: :

ேவனுக்கு மகிமை

நித்தியத்திலு ள்ள ஜீவ விருட்சம்

ஜீவ விருட்சத்தின் மேல் அதிகாரம் உள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். வெளி 22:14

தேவன் மனிதனை சிருஷ்டித்த போது, மண்ணினால் உண்டாக்கிய மனுஷனுடைய நாசியில் ஜீவசுவாசத்தை ஊதி அவனை ஜீவனுள்ளவனாக்கினார். (ஆதி 2:7) பின்பு அவன் ஜீவனில் வளர்ந்து ஜீவனின் பரிபூரணத்தை என்றென்றைக்கும் அடையும்படியாக ஏதேன் தோட்டத்தில் தேவன் ஜீவ விருட்சத்தை உண்டு பண்ணினார். (ஆதி 2:9, 3:22) பின்பு பாவம் நிமித்தமாக அவன் இந்த ஜீவனை இழந்துபோய் ஜீவனற்றவனானான். அந்த ஜீவனில் வளரமுடியாததினல் ஜீவ விருட்சத்தையும் தேவன் அவனுக்கு விலக்கினார். மனிதன் இழந்து போன இந்த ஜீவனை திரும்ப கொடுக்கும்படியாக வந்த இயேசு மனிதன் ஜீவன் உள்ளவனாகவும் பரிபூரணம் அடையும் படியாகவும் மனிதனுக்கு உதவி செய்கிறார். (யோவான் 10.10) அதற்காக மனிதனை இயேசுவினுடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகிய சாயலோடு இணைக்கிற ஞானஸ்நானத்தால் ஜீவனின் புதுமையுள்ளவர்களாக மாற்றுகிறார். (ரோமர் 6:3-5) ஜீவனின் புதுமையைப் பெற்ற மனிதனுக்கு தேவையான ஆவிக்குரிய அனுபவங்களை சபையாகிய தோட்டத்தில் கொடுத்து அவனை ஜீவனின் பரிபூரணத்திற்கும், (யோவான் 10:10) நித்திய ஜீவனிலும் நடத்துகின்றார்.  (யோவான் 6:27) இப்படி இயேசு அவனை என்றென்றைக்கும் சாவாமையுள்ளவனாக மாற்றுகிறார் (யோவான் 11:25-26).

நாம் நன்றாக கவனித்தால் ஆதியாகமத்தில் ஏதேன் தோட்டத்தில் காணப்படுகிற மனுஷனும் ஜீவவிருட்சமும் நித்தியத்தில் புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தில் காணப்படுகிறது. (வெளி 22:14) ஆனபடியால் தேவனுடைய செருஷ்டிட்டிப்பில் நித்தியமானது மனிதனும் ஜீவவிருட்சமும் மட்டுமே என காண முடிகிறது. மனுஷனையும் ஜீவ விருட்சத்தையும் ஒப்புமை செய்து நாம் படிக்கலாம். ஆகவே இது  நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் ஜீவனின் பரிபூரணத்தை அடைந்து நித்திய ஜீவனை உடையவர்களாய் நித்தியத்தில் சென்றுசேர நமக்கு உதவிசெய்யும்.

 நித்தியத்தில் ஜீவத்தண்ணீரின் இருகரையில் ஜீவவிருட்சத்தை நாம் காண்கிறோம் (வெளி 22:1-2). எசேக்கியேல் தீர்க்கதரிசன புத்தகத்திலும் நதியின் கரையில் நிற்கிற ஜீவவிருட்சத்திற்கு சமமான விருட்சங்களையும் காண்கிறோம். (எசேக்கியேல் 47:12) ஆதியாகமத்திலும்   ஜீவ விருட்சத்தை நனைக்க ஒரு நதி புறப்படுகிறதைக் காண்கிறோம். (ஆதியாகாமம் 2:9-10) ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் ஜீவவிருட்சமாய் வளரருவதற்கு இயேசு பரிசுத்த ஆவியாகிய ஜீவ தண்ணீரின் நதிகளை வாக்குத்தத்தம் செய்கிறார் (யோவான் 7:37-39). கிறிஸ்துவ ஜீவியத்தின் துவக்கமாகிய தண்ணீர் ஞானஸ்நானத்துக்கு பிறகு பரிசுத்த ஆவி என்ற வாக்குத்தத்தத்தை இயேசு பிதாவினிடத்தில் வாங்கி நமக்கு தருகிறார். (அப்போஸ்தலர் 2:33-38). இந்த பரிசுத்த ஆவியானவர் நம்மை கொழுமையாய் வளர பண்ணுகிறார்.

 மீண்டும் நாம் ஜீவ விருட்சத்தை பார்க்கும் போது அது கனிகள் உள்ள விருட்சமாக நாம் பார்க்கிறோம். (வெளி 22:1,2) இந்த அனுபவங்களை மூன்று விதமாக நாம் புரிந்து கொள்ளலாம்.

 முதலாவதாக:- நம்மை தெரிந்தெடுத்த இயேசு நாம் கனிகள் கொடுக்கிறவர்களாகும்படி தம்முடைய சபையாகிய தோட்டத்தில் வைத்திருக்கிறார். (யோவான் 15:16) ஆகையால் திராட்சைத் தோட்டத்தில் நடப்பட்டிருந்த அத்திமரத்தில் கனியைத் தேடின போது ஒன்றையும் காணவில்லை என்பதினால்  அதனை வெட்டி போடும்படியாக சொன்னது போல, நாமும் கனியற்றவர்களாக இருந்து வெட்டப்பட்டு போகக்கூடாது. (லூக்கா 13:6-7) யோவான் 15:2 லும் திராட்சைச் செடியில் கனி கொடுக்காத கொடி எதுவோ அதை அறுத்துப்போட சொன்னதாகவும் வாசிக்கிறோம். நாம் ஜீவவிருட்சமாக மாற்றப்படும்படி கனி கொடுக்கிறவர்களாக இருக்கவேண்டும். நாம் கவனித்துப் பார்த்தால் இதில் முக்கியத்துவம் என்பது ஜீவவிருட்சத்துக்கு அல்ல அதின்  கனிகளுக்குத் தான் என்று புரிந்து கொள்ளலாம். ஜீவ விருட்சத்தின் கனியை புசிப்பதினால் என்றென்றைக்கும் ஜீவனிலிருக்க முடியும். (ஆதியாகமம் 3:22) நாம் கனியற்றவர்களாக இருந்தால் நித்தியத்தில் காணப்பட முடியாமல் நித்திய நரகமாகிய அக்கினியில் தள்ளப்படுவதற்கும் ஏதுவாகும் என்று நாம் வாசிக்கிறோம். (யோவான் 15:4-6 வெளிப்படுத்தல் 20:15)

 இப்பொழுது நாம் கனியுள்ளவர்களாக இருந்தாலும் மத்தேயு 3:10 ல் நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் எண்று யோவான் ஸ்நானன் சொல்லுகிறார். மரம் நல்லதென்றால் அதன் கனியும் நல்லதென்று சொல்லுங்கள் மரமானது அதன் கனியினால்  அறியப்படும். (மத்தேயு 12:33-35). ஆகையால் நல்ல கனி கொடாதவர்களாக இருந்தாலும் வெட்டுண்டு தீயில் போடப்பட நேரிடும். ஆகவே நாம் நல்ல மனிதர்களாக இருந்து நல்ல கனி கொடுக்கிறவர்களாக காணப்பட வேண்டும்.

 இரண்டாவதாக:- நாம் கனியுள்ளவர்களாக இருந்தால் மட்டும் போதாது நிலைத்திருக்கிற கனியுள்ளவர்களாக காணப்பட வேண்டும். (யோவான் 15:16) மாற்கு 11:13 ல்  நாம் பார்க்கிற அத்திமரம் கனி கொடுக்கின்ற மரமாக இருந்திருக்கலாம். ஆனால் அத்திப்பழக்காலம்  இல்லாத சமயத்தில் இயேசு அதில் கனியை தேடினார். ஆகவே தான் அதில் கனிகள் இல்லாமலிருந்தது. ஆகையால் இயேசு அதை சபித்தார் அந்த மரம் வேரோடு  பட்டுப்போனது. நாமும் சிலநேரங்களில் மட்டும் கனியுள்ளவர்களாக காணப்படாமல் எப்பொழுதும் எல்லா நேரங்களிலும் காலங்களிலும் சூழ்நிலைகளிலும் நிலைத்திருக்கும்  கனி கொடுக்கிறவர்களாக காணப்பட வேண்டும். நாம் பெற்றுக் கொள்ளுகிற ஆவிக்குரிய அனுபவங்களினாலே நிலைத்திருக்கிற கனிகள் உள்ளவர்களாகவும்,  அவைகளை வெளிப்படுத்தி காண்பிக்கிறவர்களாகவும்  ஜீவிக்க வேண்டும்.

 மூன்றாவதாக:-நாம் ஜீவவிருட்சத்தை கவனிக்கும் போது அது பந்திரன்று விதமான கனிகளை கொடுக்கும் விருட்சமாகவும் மாதந்தோறும் புதிய கனிகளை கொடுத்துக் கொண்டே இருக்கும். (வெளி 22:2 எசேக்கியல் 47:12) நம்முடைய ஆவிக்குரிய ஜீவத்தில் நாம் வளர வளர புதிய புதிய கனிகளை கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளை கொடுங்கள் (மத்தேயு3:8) என்று சொல்லும்போது 2கொரிந்தியர் 7:10-11 இல் சொல்லப்பட்ட அனுபவங்களாகிய கனிகள் நம்மில் காணப்பட வேண்டும். மீண்டும் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும்போது யாதொரு வித்தியாசமும் இல்லாதவர்களாக எல்லாரும் கிறிஸ்துவில் ஒன்றாயிருக்கிற அனுபவம் நம்மில் உண்டாகவேண்டும். (கலாத்தியர்3:27) நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற்று தேவனுக்கு  அடிமைகளானபடியால்  பரிசுத்தமாகுதல் என்ற பலன் கிடைத்திருக்கிறது. (ரோமர் 6:22) நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்று ஆவியினால் நடத்தப்பட்டு ஜீவிக்கும்போது ஆவியின் கனிகள் நம்மில் உண்டாகின்றது (கலாத்தியர் 5:22-23) மெய்யான தேவவசனத்தின்படி ஜீவிக்கும் போது நீதி, பரிசுத்தம் என்னும் பலன் உண்டாகிறது (எபேசி 4:24). இப்படி பலவிதமான ஆவிக்குரிய  அனுபவங்களாகிய  புதிய பலன்களைப் பெற்றுக் கொண்டும்   முன் நாட்களில் நாம் பெற்றிருந்த ஆவிக்குரிய அனுபவங்களையும் விட்டுவிடாமலும் இருந்தால் நம்முடைய மணவாளனாகிய இயேசுவுக்காக  உன்னதபாட்டு  7:14 ல் வாசிக்கிறது போல புதியவைகளும் பழையவைகளுமான சகல விதமான அருமையான கனிகளால் நிறைந்தவர்களாய் மாற முடியும். தேவத்துவத்தின் பரிபூரணம் எல்லாம் சரீரபிரகாரமாக கிறிஸ்துவுக்குள் வாசமாயிருப்பதால் (கொலோ 2:9). நாம் எல்லாரும் கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியின் அளவுக்குதக்க பூரணபுருஷராகமுடியும். (எபேசியர்4:11). பூமியின் நற்பலனை அடைய வேண்டுமென்று நீடிய பொறுமையோடு காத்திருக்கிற பயிரிடுகிறவராகிய நமதருமை ஆண்டவர் தாமே நாம்ற்பலன்களாக மாறுகிறதினால் தம்முடைய சம்பத்தாக நம்மை தம்மோடு சேர்த்துக் கொள்வார்  (மல்கியா 3:17).

இதை நாம் ஆழமாக கவனித்தால் ஜீவவிருட்சம் செழிப்போடு வளரவும் கனிகொடுக்கவும் காரணம் அது தண்ணீரண்டையில் நடப்பட்டிருக்கிறது என்பதே ஆகும். தேவனோ நம்மை தம் திராட்சைத்தோட்டத்தில் மிகுதியான  நீர்பாய்ச்சலால், கனிதரவும் தழைக்கவும் தண்ணீர் ஓரமாய் நட்டிருக்கிறார். (எசேக்கியல் 19:10). கனி உண்டாகும்படிக்கு மிகுந்த தண்ணீர் ஓரத்தில் நல்ல நிலத்தில் பத்திரமாய் நட்டிருக்கிறார். (எசேக்கியல் 17:5-8) ஆகவே நாம் வளர்ந்து பெருகி அலங்கரிக்கப்பட்டவர்களாக (எசேக்கியல் 31:5-7)  நூறத்தனையான பலன் கொடுக்கிறவர்களாயிருக்க வேண்டும். (லூக்கா 8:8) ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய தேவனை விட்டுவிட்டது போல நாம் தேவனை விட்டுவிடக்கூடாது (எரேமியா 17:13). ஏனென்றால் நம்மை விளையச்செய்வது தேவனே ஆவார். (1ொரி 3:6) நாம் அவரே விட்டுவிட்டால் திராட்சை செடியாகிய நாம் வாடிப்போக ஏதுவாகும். (எசேக்கிய 15:5-10) இது நம்மில் உண்டாகாமலிருக்க சில காரியங்களை கவனிக்க வேண்டும்.

முதலாவதாக:- எரேமியா17:7-8 வசனத்தில் உள்ளது போல நாம் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாய் தன் வேர்களை விடுகிறதான மரத்தைப்போலாகும்படிக்கு கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரை தன் நம்பிக்கையாக கொண்டிருக்கிறவர்களாக காணப்பட வேண்டும். மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பது நலம் என்பதால் மாத்திரம் நாம் கர்த்தர் மேல் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கக் கூடாது. (சங்கீதம்118:9) பிரபுக்களும் மனிதர்களும் இரட்சிக்கத்திராணி இல்லாதவர்களானதினாலும் கர்த்தரை நம்புகிறவர்களாய் இருக்ககூடாது.(சங்கீதம்146:3) நாம் எப்போதும் எல்லா நேரங்களிலும் கர்த்தரையே நம்பிக்கொண்டிருக்கிறவர்களாக   இருக்க வேண்டும். மனுஷர் மேல் நம்பிக்கை வைத்து மாம்சமானதை தன் புயபலமாக்கிக் கொண்டு கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் ஆவான் (எரேமியா17:5-6). மற்றவர்கள் யாரை நம்பிக்கையாகக் கொண்டிருந்தாலும் நாம் கர்த்தருடைய நாமத்தை உயர்த்தி மேன்மைபாராட்டி வாழவேண்டும். (சங்கீதம்20:7) நம்முடைய துணையும் கேடகமுமாக இருக்கிற கர்த்தரில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கவேண்டும். (சங்கீதம் 115:9-11) அப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமே என்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கவும் நிமிர்ந்து உயர வளரவும் முடியும். (சங்கீதம் 125:1) நாம் பலன் கொடுக்கிறவர்களாக இருக்கும்படி கர்த்தரில் நம்பிக்கை வைத்தால் மட்டும் போதாது, நாம் கர்த்தரில் மாத்திரம் நம்பிக்கையுள்ளவர்களாக காணப்பட்டு, கர்த்தரையே எப்போதும் நம்பியிருக்கிறவர்களாக காணப்பட வேண்டும். (எரேமியா 17:7) அப்போது என்றைக்கும் செம்மையாய் வளருகிற விருட்சமாய் காணப்பட முடியும். (சங்கீதம் 52:8) அவர்கள் உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும் மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றி தப்பாமல் கனி கொடுக்கிறதான மரத்தைப் போல் இருப்பார்கள் (எரேமியா 17:8) ஆகவே நம்முடைய நம்பிக்கை கர்த்தர் பேரில் மட்டும் இருக்க வேண்டும் .

அடுத்ததாக:- நம்முடைய வாழ்க்கையில் துன்மார்க்கருடைய ஆலோசனையின்படி நடவாமலும் நாம் பலவீனமடைந்து பாவிகளுடைய வழியில் நிற்காமலும்  சோர்ந்துபோய் பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும் (சங்கீதம் 1:1-3) அப்படிப்பட்டவன் தேவனால் பிறந்தவனானதால் தன்னை காத்துக் கொள்வான். (யோவான் 5:18) அவர்கள் தங்களுடைய  ஜீவியத்தில் மற்ற பாவ சந்தோஷங்களில் ஈடுபடாமல் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தை தியானிக்ககிறவர்களாயிருப்பார்கள். (சங்கீதம் 1:2) இப்படி தேவ வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தினந்தோறும் வாசித்து தியானிக்கிறவர்கள் தான் தண்ணீர்களின் ஓரமாய் நடப்பட்டவர்களும் தன் காலத்தில் தன் கனியை தந்து இலையுதிராதிருக்கிற மரத்தைப் போல மாற்றப்படுகிறார்கள். (சங்கீதம் 1:2,3) இப்படிப்பட்ட தண்ணீர் குடிக்கும் மரங்கள் மேன்மையான சிறந்த விருட்சங்களாக (எசேக்கியல் 31:16) புதிய எருசலேமில் பரிசுத்தநகரத்தில் சென்று தேற்றப்படுவார்கள். (ஏசாயா 66:13)

ஆதியாகமம் 3:22-24 ல் ஏதேன்தோட்டத்தில் ஜீவவிருட்சத்தின் கனி மனிதனுக்கு நஷ்டப்பட்டதினால் அதில் பங்கு இல்லாமல் போனது, ஆனால் நித்தியத்தில் அந்த ஜீவவிருட்சத்தின்மேல் மனிதனுக்கு அதிகாரம் உண்டு என்று நாம் பார்க்கிறோம். (வெளி 22:14) ஆகவே அதைப் பெற்றுக் கொள்ள இந்த உலக வாழ்வில் நாம் கவனிக்க வேண்டிய மூன்றாவது ஒருகாரியமும்கூட இருக்கிறது வெளி 22:14 ல் வாசிப்பதுபோல கர்த்தருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்களாகயிருக்க வேண்டும். வீழாதபடிக்கு நிலைத்திருந்து தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க இயேசுவின் வசனங்களை கேட்டு    அதன்படி செய்கிறவர்களாகயிருக்க வேண்டும். (மத்தேயு 7:21-27)  நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர்மேல் மட்டும் நம்பிக்கை வைத்துக்கொண்டு தேவவசனத்தை இரவும் பகலும் தியானிக்கிறவர்களாகவும் வசனத்தின்படி ஜீவிக்கிறவர்களாகவும் இருந்தால் வாசல் வழியாய் நகரத்தில் பிரவேசிக்கவும் நாம் ஜீவருட்சத்தின்மேல் அதிகாரம் உள்ளவர்களாகவும் மாறமுடியும். பூமியில் செல்வவான்கள் யாவரும் நித்தியத்தில் ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாக, அதின் கனிகளைப் புசித்து (சங்கீதம் 22:29) என்றென்றைக்கும் ஜீவிக்கிறவர்களாக (ஆதியாகமம் 3:2), கர்த்தரை ஆராதிப்பார்கள். (வெளி 22:3) கர்த்தராகிய ஆண்டவர் நமக்கும் உதவி செய்து நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.