அழைத்தவரின் உண்மை (1 தெசலோனிக்கேயர் 5:24)

அழைத்தவரின் உண்மை (1 தெசலோனிக்கேயர் 5:24)
: :

தேவனுக்கு மகிமை

அழைத்தவரின் உண்மை

உங்களை  அழைத்தவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். 1 தெசலோனிக்கேயர் 5:24.

2
தீமோத்தேயு 2:13 -ல் எல்லா விதத்திலும் நம்புவதற்கேதுவானதாக நாம் வாசிக்கும் ஒரு காரியம் நாம் உண்மை இல்லாதவர்களாயிருந்தாலும் தேவன் உண்மை உள்ளவராய் இருக்கிறார் என்பதே. தேவனுக்கு தன் சுபாவத்தை மாற்ற முடியாது என்பதே இதன்  காரணம் ஆகும். நம்முடைய  மூல வசனத்தில் விசேஷமான ஒன்றைக் கூட நாம் காண முடியும். தேவன் யாரை அழைக்கிறாரோ, அவர்களுக்கு அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்று மாத்திரமல்ல, தாம் அழைத்த அழைப்பின் நோக்கத்தையும் அவனில் நிறைவேற்றுவேன் என்றும் வாக்குத்தத்தம் செய்கிறார். பரம அழைப்பிற்கு பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரர்களுக்கு தேவன் கொடுக்கும் ஓர் உறுதியாக இது இருக்கிறது.(எபிரேயர் 3:1). ஆனபடியால், இந்த சகோதரர்களிடம் தேவ வசனம் எதிர்பார்க்கும் ஒன்று, அவர்கள் இடறிப் போகாமல் நம்முடைய கர்த்தரும் இரட்சகரமாகிய இயேசு கிறிஸ்துவின் நித்திய இராஜ்யத்திற்குட்படும் பிரவேசம் பரிபூரணமாய்ப் பெற்றுக் கொள்ளும்படிக்கு, தங்களுடைய அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதிப்படுத்தும்படிக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்பதே (2 பேதுரு 1: 10- 11).

(
எபேசியர் 1: 18,19)-ல் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில காரியங்கள் சொல்லப்பட்டுள்ளது. அழைப்பினால் நமக்குண்டான நம்பிக்கை இன்னதென்றும் பரிசுத்தவான்களிடத்தில்  நமக்கு உண்டாயிருக்கிற சுதந்திரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும்படிக்காகதான் நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம்  என்ற அறிவு நமக்கு எப்போதும் இருக்க வேண்டும் (2தெசலோனிக்யர் 2:14). மற்றொன்று, இந்த அனுபவத்தை நாம் அடையும் படிக்கு நமக்காக கிரியை செய்கிற தமது சத்துவத்தின் வல்லமை இன்னதென்றும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாகும். இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடைந்து கொள்வது நம்முடைய அறிவினாலல்ல,தேவனுடைய சத்துவத்தின் வல்லமையினால் மட்டுமே ஆகும்.

ரோமர்8:28-30 வசனங்களில் தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களை தேவன் முன்னறிந்தும் முன் குறித்ததிற்கு ஏற்றபடி அழைக்கிறவராக காண்கிறோம். எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள் ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த தேவனுடைய இரகசியத்தின் ஐக்கியம் நம்முடைய கர்த்தராகிய  இயேசு கிறிஸ்துவில் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி அநந்த  ஞானத்தை சபையின் மூலமாக தேவன் தெரியப்படுத்தினார் (எபேசியர் 3:9-11). அந்த தெய்வீக தீர்மானம் நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடைய வேண்டும் என்பதாகையால் அந்த மகிமையை அடையும்படிக்கு சுவிசேஷத்தினாலே நம்மை இரட்சிப்புக்கு அழைத்திருக்கிறார் ( 2 தெசலோனிகியர் 2:14).

நாம் மிகவும் விரிவாக சிந்தித்தால் ஒரு மனிதனின் பிறப்பிற்கு முன்னமே அவனுடைய நிலவரங்களை அறிந்த தேவன் அவர்களுடைய சுபாவத்திற்கேற்றபடி அவர்களை முன்னறிந்து முன் நியமிக்கவும் செய்கிறார் (எரேமியா1:5). உதாரணமாக ஏசா, யாக்கோபு இவர்களுடைய சுபாவங்களுக்கேற்ப (ஆதியாகமம் 25:27) தேவன் யாக்கோபை சிநேகிக்கவும், ஏசாவை வெறுக்கவும் செய்கிறார்( ரோமர் 9:13), ரோமர்8:28-30ல் தேவன் மனிதர்களை பார்க்கும்போது சிலர் தேவனை நேசிக்கிறவர்களாக, தங்களுடைய ஜீவிதத்தின் அனுபவங்களினால் இயேசு கிறிஸ்துவின் மகிமையை பெற உற்சாகமுள்ளவர்களாக அதை பெறுவார்கள் என்று தேவன் முன்னறிகிறார்.நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும் போது அவரோடு கூட மகிமையில் வெளிப்படுவோம் (கொலேசியர்3:4). அந்த நம்பிக்கையுடையவர்களாகிய (1யோவான் 3:2,3) முன்னறிந்தவர்களையே தேவன் முன் நியமித்திருக்கிறார். இப்படி தேவன் முன் நியமித்திருக்கிறவர்களை தம்முடைய பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாக சுவிசேஷத்தினால் இரட்சிப்புக்கு அழைக்கிறார் (எபிரேயர்3:1). அவர்கள் விசுவாசமுள்ளவர்களாக ஞானஸ்நானம் பெறும்போது இரட்சிக்கப்பட்டு  (மாற்கு16:16) விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்படுகிறார்கள் (கலாத்தியர்2:15). தொடர்ந்து தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியை கொடுத்து அந்த ஆவியினால் அவர்களை பரிசுத்தப்படுத்தி (1 பேதுரு1:2), பரிசுத்த சகோதரர்களாக்குகிறார். இயேசு கிறிஸ்து சிலுவையில் தன்னைத்தான் ஒப்புக்கொடுத்தது, சபையை மகிமயுள்ளதாக தனக்கு முன் நிறுத்தும்படியாகவே (எபேசியர் 5:26,27), ஆகையால் இந்த பரிசுத்த சகோதரர்கள் சபைக்குட்பட்டவர்கள் ஆவார்கள். அதற்காக கர்த்தர் தாமே இரட்சிக்கப்பட்டவர்களை அனுதினமும் சபையில் சேர்க்கிறார் (அப்போஸ்தலர்2:47) இப்படி அழைக்கப்பட்டவர்களை நீதிமான்களாக்கியும்,நீதிமான்களாக்ப்பட்டவர்களை மகிமைப்படுத்திக்கொண்டும் தன்னுடைய உண்மையை அழைக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (ரோமர்8:30).

சாலோமன் இராஜா கர்த்தரால் முன்னறிந்து முன் நியமிக்கப்பட்டவனாகவும் (1 நாளாகமம்22:9-10), கர்த்தரால் அன்பு கூறப்பட்டவனாயிருந்தாலும் (2 சாமுவேல்12:24,25), பின் நாட்களில் தள்ளப்பட்டு போக நேர்ந்தது. ஆதாமின் பாவத்தால் நன்மை தீமைகளை அறியும்படிக்கு தேவனைப் போல மாறிய மனிதனின் நிலவரத்தை சிந்தித்தால் (ஆதியாகமம்3:22)  மனுஷருடைய இருதயத்தின்நினைவுகளின் தோற்றங்கள் எல்லாம் நித்தமும் பொல்லாததாய் இருக்கிறபடியால் (ஆதியாகமம்6:5 ) மனுஷன் நன்மையை தெரிந்து கொள்ளாமல்  எப்போதும் தீமையை  தெரிந்து கொள்கிறான். சாலமோன் இராஜா கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தை திருப்பி கொண்டு தீமையை தெரிந்தெடுத்துகர்த்தர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமல் போனதினால், கர்த்தர் அவனை தள்ளி விட்டார் (2 இராஜாக்கள்11:9,10). இது நமக்கு ஒரு மிகச் சிறந்த போதனையாகும் .

மகிமைப்படுத்துதல் என்ற தேவதத்திட்டத்தை நம்மில் நிறைவேற்றும்படி தேவன் செய்யும் இரண்டு காரியங்கள். 1தெசலோனிக்கேயர் 5:23-ல் நாம் பார்க்கலாம். முதலாவது: சமாதானத்தின் தேவன் தாமே அழைத்தவர்களை முழுமையாக பரிசுத்தமாக்குகிறார். தேவனால் பிறந்தவனில் தேவனுடைய வித்து தரித்திருப்பதாலும் (1 யோவான் 3:9) தன்னைத் தானே காத்துக் கொள்வதினாலும் அவன் பாவம் செய்வதில்லை (1 யோவான்5:18 ). நாம் பாவம் செய்தால் நீதிபரராகிய  இயேசு கிறிஸ்து என்ற தேற்றரவாளன் நமக்கு பிதாவினிடத்தில் இருக்கிறார் (1யோவான்2:1)  நாம் நம்முடைய பாவங்களை தேவனிடத்தில் அறிக்கையிட்டால் நம் பாவங்களை மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி, இயேசுவின் இரத்தத்தினால் நம்மை கழுகி, சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுமுள்ளவராயிருக்கிறார் (1 யோவான்1:7-9). ஆனபடியால் சரியான மனந்திரும்பதலோடும், மனஸ்தாபத்துடன் கூட  நம் பாவங்களை தேவனிடத்தில் அறிக்கையிடும்போது, நீதிபரராகிய  இயேசு கிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் நம்முடைய பாவங்களுக்கு பரிகாரமாக நம்மை அதிலிருந்து விடுவிக்கிறார் (1 யோவான்2:2). இயேசு தம் இரத்தத்தினால் நம்மை கறை ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமாக்குகிறார்  (எபேசியர்5:27). நம்முடைய கர்த்தர் நம்மை முதலாவதாக கறையற்றவர்களாக சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படிக்கு  உற்சாகப்படுகிறதினால் (2பேதுரு3:14) ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாக நிறுத்தப்படும் நாளில் நமக்கு சுத்தமான வஸ்திரம் தரிக்க கிருபை கிடைக்கும் (வெளிப்படுத்தல்19:7,8). இந்த கிருபை இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் தன் மனைவிக்கு மட்டுமே வெளிப்படுகிறதாகையால் அந்த கிருபையியில் நாம் இப்போதே பூரண நம்பிக்கையிள்ளவர்களாக இருக்க வேண்டும் (1பேதுரு1:13 ).

இரண்டாவதாக: 1 தெசலோனிக்கேயர் 5:23 -ல் நம்முடைய ஆவி, ஆத்துமா,சரீரம்,முழுவதும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்பட வேண்டியதாகும். நாம் தமக்கு முன்பாக அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமில்லாதவர்களாகும்படி,உலகத் தோற்றத்திற்கு முன்பே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்து கொண்ட நோக்கத்திற்கேற்றபடி நம்மை தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி தம் அன்பில் முன்நியமித்து தேவன் இயேசு கிறிஸ்துவில் நம்மைத் தெரிந்தெடுத்திருக்கிறார் (எபேசியர்1:4-6). நம்முடைய இரட்சகராகிய அந்த தேவன்  நம்மை வழுவாதபடி காத்து, மகிமையின் வெளிப்படுதலின் நாளில் தம்முடைய மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே மாசற்றவர்களாய் நம்மை நிறுத்த வல்லமையுள்ளவராவார் (யூதா1:24-25). ஆனபடியால் இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது நம் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் குற்றமற்றதாயிருக்கும்படி  தேவன் நம்மை காப்பார் (1தெசலோனிக்கேயர்5:23), சபையை பிழை  முதலான ஒன்றுமில்லாமல்  களங்கமற்றவளாக இயேசு முன் நிறுத்துவார் (எபேசியர்5:27).  நம்முடைய கர்த்தர் இரண்டாவதாக நம்மை பிழையற்றவர்களாக சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படிக்கு  உற்சாகப்படுகிறதினால் (2 பேதுரு 3:14)  தாம் வெளிப்படும் நாளில்  அளிக்கப்படும்  கிருபையினால் பிரகாசமமான வஸ்திரம் நாம் தரிக்க முடியும் (வெளிப்படுத்தல்19:8). (எபேசியர்5:27-)ல் இரண்டு காரியங்களால் முன் நிறுத்துவார். ஒன்று பரிசுத்தமாக, இரண்டு பிழையற்றவர்களாக. (வெளிப்பாடு19:8) -ல் இரண்டு விசேஷமான மெல்லிய  வஸ்திரம் தரிக்க இக்கிருபை அளிக்கப்படுகிறது. ஒன்று சுத்தமானதும் இரண்டு பிரகாசமானதுமாகும். நம்மை சுத்திகரித்து பிழையற்றவர்களாக்கும்படி உண்மையுள்ள தேவனால் இந்த இரண்டு அனுபவங்களையும் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

தேவன் நம்மை பாதுகாக்கும்படிக்கு கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகின் கீழில் கூட்டி சேர்ப்பது போல, நம்முடைய பிள்ளைகளை (நம்மையல்ல நம் பிள்ளைகளை) கூட்டிச் சேர்த்துக்கொள்ள எத்தனையோ தரம் மனதுள்ளவராய் இருக்கிறார் (மத்தேயு23:37). இந்த நம்முடைய பிள்ளைகள் என்பது உள்ளான மனுஷனாகும் (2 கொரிந்தியர்4:16). அதாவது தேவனிடத்திற்கும், தேவசிங்காசனத்திற்கும் எடுத்துக் கொள்ளப்படும் ஆண் பிள்ளையாகும் (வெளிப்படுத்தல்12:5 ). இயேசு தம் சிறகின் கீழில் கூட்டிச்சேர்க்கும்படி எத்தனையோ தரம் மனதுள்ளவராயிருக்கும்போது நாம் மனம் இல்லாதவர்களாக இருக்கக்கூடாது. மனதுள்ளவர்களாய் இருந்தவர்கள் எப்படி மனதில்லாதவர்களானார்கள் என்று சிந்தித்தால் சில காரியங்கள் நமக்கு வெளிப்படும்.  இயேசு அவர்களைப் பற்றி கூறும் போது தீர்க்கதரிசிகளை கொலை செய்தும்,அவர்களிடம் அனுப்பப்பட்ட ஊழியர்களை கல்லெறிகையும் செய்கிறவர்கள் என்று கூறுகிறார்(மத்தேயு23:37). தீர்க்கதரிசனங்களாலும், நம்மோடு அறிவிக்கிற தேவ ஆலோசனைகளாலும் கிடைக்கும் தேவனின் உபதேசங்களை, தேவ வசனங்களை நாம் தள்ளி விடுகிறவர்களாக இருக்கக்கூடாது.  நாம் ஒருபோதும் தீர்க்கதரிசனங்களை அற்பமாய் எண்ணக்கூடாது(1தெசலோனிக்கேயர்5:20).  அது ஒரு காலத்திலும் மனுஷனுடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை, தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினதாகும்(2பேதுரு1:21). பரிசுத்த ஆவிக்கு விரோதமாக தூஷணம் சொல்வானாகில் அவன் என்றென்றைக்கு மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாவான் என்று இயேசு மெய்யாகவே நம்மோடு சொல்லுகிறார் (மாற்கு 3:29). இயேசு நம்மிடம் கட்டளையிட்ட யாவையும் கைக்கொள்ளவும் உபதேசம்பண்ணும்படி நியமிக்கப்பட்ட ஊழியர்களை (மத்தேயு 8:20) நாம் குற்றப்படுத்தவும், பரியாசம்பண்ணவும் அவமானப்படுத்தவும் செய்யக்கூடாது.  அவர்களை ஏற்றுக் கொள்ளாமலிருந்தால் நாம் இயேசுவையும் அதில் தேவனையும் தள்ளிவிடுகிறவர்களாவோம் (மத்தேயு10:40).ஆகையால் அவர்களுக்கு மதிப்பளித்தும் அவர்களின் வார்த்தைகளை கவனமாகவும் கேட்கிறவர்களாயிருக்க வேண்டும் .

வேதபாரகரும், பரிசேயரும் கபடபக்திக்காரர்களாக  தாங்கள் சொல்வது போல செய்யாதிருக்கிறவர்களாக இருந்தாலும், இயேசு சொல்வது அவர்கள் மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறபடியால் நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச்சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள் என்பதே(மத்தேயு23:1-3).  பிதாவானவர் இயேசுவை அனுப்பினது போல இயேசுவினால் அனுப்பப்பட்ட ஊழியர்களை(யோவான்17:18/20:21) நாம் ஒருநாளும் கல்லெறியாமல் அவர்களை சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்டு அவர்களுடைய உபதேசங்களுக்கு ஏற்றபடி, தேவவசனத்தின்படி  ஜிவிக்க உற்சாகமுள்ளவர்களாயிருக்க வேண்டும்.  இயேசுவின் ஆடுகளானவர்கள் தன் சத்தம் கேட்டு இயேசுவின் பின்செல்லுகிறவர்களானபடியால்,அவர்களைத்தான் இயேசுவும் பிதாவும் தம் கரங்களில் மறைத்துப் பாதுகாப்பார்கள். அவர்கள் ஒருக்காலும் கெட்டுப்போகாமல் இயேசு அவர்களுக்கு நித்திய ஜீவன் கொடுக்கிறார் (யோவான்10:26-29).   தேவனுடைய வசனத்தை நேசிக்கிறவர்களுக்கு ஒரு நாளும் இடறலில்லாமல் தேவன் அவர்களை பாதுகாக்கிறார்(சங்கீதம் 119:165) மட்டுமல்லாமல் அவர்கள் மிகுந்த சமாதானம் உள்ளவர்களாக  அவர் வெளிப்படும் போது அவர் சமுகத்தில் சமாதானத்தோடே காணப்பட முடியும்(2 பேதுரு3:14).  இப்படியாக, நம்மை அதாவது தம் சபையை பரிசுத்தமும், பிழையற்றதுமாக நிறுத்த உண்மையுள்ள தேவன்(எபேசியர்5:27 ),  அவர்களைஅழைத்தது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை  அடையும்படிக்காகவே(2தெசலோனிக்கேயர்2:14) என்பதால் அவர்களை மகிமையுள்ளவர்களாக தமக்கு முன்பாக நிறுத்துவார்.  காரணம் தேவனே அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கும்படி நடத்துகிறார் (எபிரேயர் 2:10).  (ரோமர்8:30) ல் அழைத்தவர்களை நீதிமான்களாக்கியும், நீதிமான்களாக்கியவர்களை  மகிமைப்படுத்தியிமிருக்கிறார் என்றல்லவா நாம் வாசிக்கிறோம்.  ஆகையால் நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது நாம் சபையாக அவரோடு கூட மகிமையில் வெளிப்படுவோம்(கொலேசியர்3:4). நம்மை அழைக்கும் தேவன் உண்மையுள்ளவரானபடியால் நம்முடைய அழைப்பினால் உள்ள நம்பிக்கை நம்மில் நிறைவேற்றப்படும்.

உண்மையுள்ளவராகிய நம்முடைய தேவன் அதற்கேற்றபடி நம்மை நடத்தி ஆசீர்வதித்து தம் உண்மையை நிறைவேற்றுவராக.