தேவனின் கனமான பாத்திரங்கள் (ரோமர் 9:21)
தேவனுக்கு மகிமை
தேவனின் கனமான பாத்திரங்கள்
மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தை கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? ரோமர் 9:21.
இந்தக் குயவன் களிமண்ணிலிருந்து பாத்திரங்களைச் செய்வதைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, பூமியின் மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கின தேவன்தான் நம் நினைவில் வருகிறார் (ஆதியாகமம் 2:7). நம் மூல வசனத்தின் முன்னும் பின்னும் உள்ள வசனங்களைக் கவனித்தால், இது தேவனைத் தான் குறிக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். எனவே, இங்கே விவரிக்கப்பட்டுள்ள அனைத்துப் பாத்திரங்களும் மனிதர்களாகிய நம்மைத்தான் காட்டுகிறது. இதன் காரணமாக, நம் தேவனின் தெளிவான செயலையும், அதைப் பெறுபவர்களாகிய நம் வாழ்க்கையில் உள்ள வேறுபாட்டையும் நாம் புரிந்து கொள்ள முடியும். குயவன் ஒரே களிமண்ணிலிருந்து ஒரு பாத்திரத்தை கனத்திற்காகவும், மற்றொரு பாத்திரத்தை கனவீனத்துக்காகவும் உருவாக்குகிறான். இங்கே நாம் குயவனின் அதிகாரத்தை உணர முடியும். ஆனால் அதே நேரத்தில், இதை தேவனின் ஒரு பட்சபாதமுள்ள செயலாகவும் விளக்க முடியும். ஆனால் நாம் அதைத் தெளிவாகப் படித்தால், அது அப்படி அல்ல என்பதைக் காண முடியும். ரோமர் 9:11-15 வசனங்களுக்கு நாம் கவனம் செலுத்தினால், ஏசாவும் யாக்கோபும் ஒரே வயிற்றில் ஈசாக்கு என்ற ஒரே மனிதனிடமிருந்து பிறக்க உருவாக்கப்பட்டனர். இருப்பினும், அவர்களின் சுபாவங்களும் வாழ்க்கை அனுபவங்களும் வேறுபட்டதாயிருந்தது (ஆதியாகமம் 25:27). ஆகையால், அந்த வேறுபாட்டின்படியே கர்த்தர் யாக்கோபை நேசிக்கவும், ஏசாவை வெறுக்கவும் செய்கிறார் (ரோமர் 9:13-15). பழைய ஏற்பாட்டில் (ஏசாயா 49:1), (எரேமியா 1:4-5) ஆகிய வசனங்களில் நாம் காண்கையில், எந்த ஒரு நபரும் கருவில் உருவாகும் முன்பே அவர்களை அறிந்த தேவன், அந்த நபரின் நிலைக்கு ஏற்ற அவர்களில் செயல்படுகிறார். தேவனிடத்திலே எந்த அநீதியும் இல்லை (ரோமர் 9:14) பாரபட்சமும் இல்லை (ரோமர் 2:11). எனவே, தெய்வீக அனுபவங்களில் ஆர்வமும் உற்சாகமும் உள்ளவர்கள் மீது தேவன் மனதுள்ளவராக கருணை காட்டுகிறார். ஆனால் தேவனுக்கடுத்தவைகளில் விரோதமாய் இருப்பவர்களோடு தேவன் கடுமையைக் காட்டி அவர்களை கடினப்படுத்துகிறார். அதனால்தான் ஒரு கூட்டத்தார் கனமுள்ளவர்களாகவும் மற்றொரு கூட்டத்தார் கனவீனமுள்ளவர்களாகவும் மாற்றப்படுகிறார்கள்.
இந்த கனத்திற்கும் கனவீனத்துக்கும் உரிய பாத்திரங்கள் இங்கே கிருபாபாத்திரங்கள் என்றும் கோபத்தின்பாத்திரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன (ரோமர் 9:22-24). மேலும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கிருபாபாத்திரங்களை நாம் படிக்கும்போது, இவை எவ்வாறு கிருபாபாத்திரங்களாக மாறின என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். பாவத்தைத்தவிர மற்ற எல்லா விதங்களிலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டவர்தான் இயேசு. நமது மாம்சத்தின் பலவீனத்தால் நாம் பாவிகளாக மாறும்போது, அவர் நம்மீது பரிதபிக்க கூடியவராய் நம்மீது இரக்கம் காட்டும்படி நாம் அவரிடம் வருகிறோம் (எபிரெயர் 4:15-16). பாவமன்னிப்பாகிய இரட்சிப்பு நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே நமக்கு கிடைக்கிறது (லூக்கா 1:77). அதனால்தான் வழியருகே உட்கார்ந்திருந்த குருடன் பர்திமேயுவும் (மாற்கு 10:46-48) பாவியாகிய ஆயக்காரனும் (லூக்கா 18:13) இயேசுவிடம் தங்கள் மீது இரக்கம் காட்டும்படி கூக்குரலிடுகிறார்கள். அத்தகைய மக்கள் மீது இரக்கமும் உருக்கமும் உள்ளவராய் இருப்பார் என்று தேவ பக்தியுள்ள மோசேயிடம் கர்த்தர் கூறுகிறார் (ரோமர் 9:15). இப்படிப்பட்ட நபர்கள்தான் தேவனின் கிரியையினால் கனத்துக்குரிய பாத்திரங்களாக மாறுகிறார்கள் அல்லது இரக்கத்தின் பாத்திரங்களாவார்கள்.
மறுபக்கத்தில், தேவன் தமது கோபத்தை காண்பிக்கவும் தமது வல்லமையை தெரிவிக்கவும் தேவன் சிலரை கனவீனத்திற்குரிய கோபத்தின் பாத்திரங்களாக மாற்றுவதை காணலாம் (ரோமர் 9:22-24). அவர்கள் யார் என்றால் தேவனுடைய அனுபவங்களில் ஆர்வம் காட்டாதவர்களாக தேவனிடத்திலிருந்து வெகு தொலைவில் மாற்றப்பட்டு பாவத்தில் ஜீவிக்கிறவர்களே!. அவர்கள் தேவனிடத்தில் பாவமன்னிப்புக்காக இரக்கம் பெற வேண்டிக்கொள்ள உற்சாகமான மனதில்லாதவர்களாக பாவத்தில் ஆர்வம் உள்ளவர்களாக பாவிகளாகவே வாழ்கிறததினால் தேவன் தம்முடைய கோபத்தை காண்பிக்கவும் தமது வல்லமையை வெளிப்படுத்தவும் கோபத்தின் பாத்திரங்களாக்குகிறார். அத்தகைய மக்களின் இருதயங்களை தேவன் கடினப்படுத்துகிறார் (ரோமர் 9:17-18). பார்வோனின் இருதயத்தை கர்த்தர் ஒவ்வொரு முறையும் கடினப்படுத்தினார். அதனால் பார்வோன் தொடர்ந்து கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்கிறவனாய் இருந்தான் (யாத்திராகமம் 9:12). எமோரியர்களின் அக்கிரமம் நிறைவேறும் வரை கர்த்தர் அவர்களையும் பார்வோனையும் கடனப்படுத்தி பாவத்தில் ஒப்புக்கொடுத்தது போல (ஆதியாகமம் 15:16), இந்த கோப பாத்தரத்தின் ஜீவியத்திலும் கர்த்தர் அவர்களை கடினப்படுத்துகிறார் (ரோமர் 9:18). இரட்சிக்கப்படுவதற்கு முன்பு மற்றவர்களைப் போல நாம் வாழ்ந்த காலத்தைப் பற்றி நாம் பேசும்போது, முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படி நடந்து, நமது மாம்சமும் மனதும் விரும்பினவைகளையே செய்து சுபாவத்தினாலே மற்றவர்களை போல கோபக்கினையின் பிள்ளைகளாய் இருந்தோம் என்று கூறுகிறது (எபேசியர் 2:1-3). அத்தகைய மக்கள், தங்கள் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி தேவனுடைய நீதியான தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே தங்களுக்காக கோபாக்கினையை குவித்துக் கொள்கிறார்கள் (ரோமர் 2:5).
அவர்களுடைய பாவம் முழுமையடையும் வரை தேவன் அவர்களிடம் நீடிய பொறுமையாக இருக்கிறார் என்பதே உண்மையாகும் (ரோமர் 9:24). அவர்கள் கெட்டுப்போக தகுதியானவர்கள் என்றாலும், கேட்டின் மகனாகிய யூதாஸை இயேசு சகித்து கூடகொண்டு சென்றது போல தேவனும் அவர்களை சகிக்கிறார் (யோவான் 17:12). இஸ்ரவேல் புத்திரரின் முரட்டாட்டமான மற்றும் தீய சுபாவங்களை தேவன் நாற்பது ஆண்டுகள் சகித்தார் என்று காண்கிறோம் (அப்போஸ்தலர் 13:18 மலையாளம்), இராஜஸ்தானத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட சவுலை நீண்ட காலம் கர்த்தர் சகித்த பின்பே அவன் அழிவுக்குத் தகுதியானவன் என்பதால் அவனை அழித்தார் (1 சாமுவேல் 15:23, 1 நாளாகமம் 10:13-14). இருதய கடினம் சம்பவித்தவர்கள் சகலவித அசுத்தங்களையும் ஆவலோடு நடத்தும்படி காமவிகாரத்துக்கு ஒப்பு கொடுக்கப்பட்டவர்களானபடியால் அந்த காரியங்களை மிகவும் ஆவலோடு நடப்பிக்கிறார்கள் (எபேசியர் 4:18-19). அவர்களுடைய அக்கிரமங்களின் பூரணப்படுதலினால், கர்த்தர் பார்வோனை அழித்தது போல அவர்களையும் அழித்துப்போடுவார். ஆகையால், கோபத்தின்பாத்திரங்களாக தேவனால் கனவீனப்படுத்தப்பட்டவர்களாக முடிவைப் பெறாமலிருக்கும்படிக்கு, தேவன் நீடிய பொறுமையோடு சகிக்கும் காலத்திலாவது மனந்திரும்ப ஆர்வமுள்ளவர்களாயிருக்க வேண்டும். தேவன் நீடிய பொறுமையுள்ளவராக இருப்பது மனந்திரும்புவதற்காகவே என்றறிந்து மனந்திரும்பினால் தேவனுடைய நீடிய பொறுமை அவர்களுக்கு இரட்சிப்புக்கேதுவாக மாறும், கெட்டுப்போகாமல் இரட்சிக்கப்பட முடியும் (2 பேதுரு 3:9,14).
நாம் கனத்திற்குரிய பாத்திரத்தைப் பற்றிப்படிக்கும்போது, தேவன் அழைத்த மகிமைக்காக எத்தனமாக்கிய இரக்கத்தின் பாத்திரங்களாகிய இவர்களில் தேவன் தம்முடைய மகிமையின் ஐசுவரியங்களை வெளிப்படுத்துகிறார் என்பதைக் காண்கிறோம் (ரோமர் 9:23-24). தெய்வீக முன்னறிவிப்பைப் பெற்று தேவனின் இரக்கத்தைப் பெறுபவர்களை அழைக்கும் தேவன், அவர்களை நீதிமானாக்குவதற்கும் பின்னர் மகிமைக்கும் வழிநடத்துகிறார் (ரோமர் 8:30). நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையைப் பெற அழைக்கப்பட்டவர்கள் தான் இவர்கள் (2 தெசலோனிக்கேயர் 2:14). நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது இவர்களும் மகிமையில் வெளிப்படுவார்கள் (கொலோசெயர் 3:4). இயேசு கிறிஸ்துவின் வருகையின் நாளில்தான் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் எல்லாம் காணப்படும் (1 பேதுரு 1:7). எனவே, அவர்கள் அன்று கனத்திற்குரியபாத்திரங்களாக இயேசுவுடன் கூட வெளிப்படுவார்கள்.
இப்படி தேவன் நம்மை கனத்துக்குரிய பாத்திரங்களாக மாற்றுவதற்கு அதாவது நாம் கனத்துக்குரிய பாத்திரங்களாய் மாற்றப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தெளிவாக ஆராய்ந்து அறிய வேண்டும். ஒரு பெரிய வீட்டில் வெவ்வேறு பயன்பாடுகளுக்காக வெவ்வேறு பொருட்களால் உண்டாக்கப்பட்ட பாத்திரங்கள் உள்ளன (2 தீமோத்தேயு 2:20-21). ஆனால் இவைகள் கனத்துக்குரிய பாத்திரங்கள் என்றும் கவவீனத்திற்குரிய பாத்திரங்கள் என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இப்படி எந்த வகையில் சேர்ந்த பாத்திரங்களாக இருந்தாலும் இவைகளை விட்டுவிலகி என்று கூறும் போது நாம் கனத்துக்குரியவர்கள் என்ற புகழ்ச்சியோ அல்லது நாம் மோசமானவர்கள் என்ற நம்முடைய துக்கமோ நம்மில் உண்டாகாமல் இந்த இரண்டு அனுபவங்களையும் விட்டு விலகவேண்டும். இனி ஜீவிப்பது நான் அல்ல என்ற அனுபவத்தில் வந்து (கலாத்தியர் 2:20) நாம் கிறிஸ்துவினுடையவர்களாகும்படிக்கு அல்லது கிறிஸ்து நம்மில் ஜீவிக்கும்படியாக நம்மை நாமே சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். நம்மை சுத்திகரிப்பது மற்றவர்கள் அல்ல, தேவனிடம் ஜெபிப்பதின் மூலம் நம் வாழ்க்கையை நாமே ஆராய்ந்து சுத்திகரிக்க வேண்டும்.
1 கொரிந்தியர் 11:28-31-ல் இந்த சுத்திகரிப்பு நம்மில் நிகழக்கூடிய மூன்று வழிகளைக் காண்கிறோம். முதலாவதாக, நாம் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆவிக்குரியவன் தன் ஜீவியத்தில் உள்ள எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான் (1 கொரிந்தியர் 2:15). இரண்டாவதாக, நாம் நம் சரீரத்தை நீதானித்து ஆராய வேண்டும். மாம்சத்தின் கிரிகைகளான அசுத்தமான விஷயங்கள் நம்முடைய சரீரத்தின் கிரியைகளில் உள்ளதா என்பதை (கலாத்தியர் 5:19-21) நாம் ஆராய்ந்து மாம்சத்துக்குரிய எல்லா சரீரத்தின் கிரியைகளையும் ஆவியினால் அழித்து போட வேண்டும் (ரோமர் 8:12-13). மூன்றாவதாக, நாம் நம்மை நாமே நிதானிக்கிறவர்களாக இருக்க வேண்டும். நமக்கு வெளிப்படுத்தப்படும் குறைபாடுகளை நாம் சுயநியாயப்படுத்தி மறைக்கக்கூடாது. அந்தத் தவறுகளை ஒப்புக்கொண்டு, நம்மை நாமே குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, அவற்றை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவர்களாக இருக்க வேண்டும் (நீதிமொழிகள் 28:13). அத்தகைய ஜனங்கள் கர்த்தருடைய இரக்கத்தை பெற்று இரக்கத்தின் பாத்திரங்களாக, கனத்துக்குரிய பாத்திரங்களாக மாற்றப்படுவார்கள்.
மீண்டும் இந்த கனத்திற்குரிய பாத்திரங்களை கவனித்தால், அவற்றில் மூன்று விஷயங்களை காணலாம். தன்னைத்தான் சுத்திகரித்துக் கொள்ளுகிறவன் தேவனிடத்தில் இருந்து இந்த மூன்று அனுபவங்களைப் பெற்று, அவற்றைத் தன்னில் வெளிப்படுத்தும்போதுதான், அவர்ஒரு கனத்திற்குரிய பாத்திரமா இல்லையா என்பது தெளிவாகிறது (2 தீமோத்தேயு 2:21). முதலாவதாக, அவன் பரிசுத்தமாக்கப்பட்டவனாவான். நம்மைப் பரிசுத்தப்படுத்துபவர் இயேசுவே (எபிரெயர் 2:11). பிதாவிடமிருந்து பரிசுத்த ஆவியைப் பெற்று நமக்குக் தந்த இயேசு (அப்போஸ்தலர் 2:33). பரிசுத்த ஆவியால் நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறார் (ரோமர் 15:15). மேலும், நம் வாழ்க்கை தேவனுடைய வசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தப்படுத்தப்படுகிறது. (1 தீமோத்தேயு 4:5). இரண்டாவதாக, எஜமானுக்கு பயனுள்ளதாக காணப்படும். பயனுள்ளவர்களை தான்கூட்டிச் சேர்க்கிறார் (2 தீமோத்தேயு 4:11). உபயோகம் இல்லாத அனைவரும் தள்ளப்பட்டு போவார்கள் , அவைகள் பாத்திரங்களாக இருந்தாலும் சரி, கருவிகளாக இருந்தாலும் சரி, அவை எறியப்பட நேரிடும். தேவன் தாம் அறிந்த கனத்துக்குரிய பாத்திரமானவர்களை பயனுள்ள கருவிகளாக மாற்றி தமது கரத்திலும் அம்பராத்தூணியிலும் மூடி வைக்கிறார் (ஏசாயா 49:1-2). இவ்வாறு நாம் தேவனுக்கும் மனிதர்களுக்கும் நல்ல பயனுள்ளவர்களாக மாற்றப்படுவோம் (பிலேமோன் 1:11). மூன்றாவதாக, எந்த நற்கிரியைக்கும் நாம் ஆயத்தம் உள்ளவர்களாக இருப்போம். நாம் தேவனால் உபயோகப்படுத்தப்பட்டு நல்ல செயல்களை செய்கிறவர்களாயிருப்போம். தேவன் செய்த அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தது (ஆதியாகமம் 1:31). இயேசுவும் எல்லாவற்றையும் நன்றாகச் செய்கிறார் (மாற்கு 7:37). ஆகையால், தேவனின் ஒவ்வொரு நற்கிரியைக்கும் நாம் ஆயத்தமாய் இருக்கும்போது, நாம் செய்யும் அனைத்தும், நம் மூலம் வெளிப்படுத்தப்படும் அனைத்தும் நல்லதாகவே இருக்கும். மேலும், எல்லா வேதவாக்கியங்களும் நமக்குப் பயனுள்ளதாக இருப்பதினால், தேவனின் வார்த்தையால் வழிநடத்தப்பட்டு, எந்த நற்கிரியைக்கும் தகுதியுள்ளவர்களாகிறோம் (2 தீமோத்தேயு 3:16). இவ்வாறு நற்கிரியைகளை செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்களான சொந்த ஜனமாய் இருப்போம் (தீத்து 2:14). இந்த மூன்று அனுபவங்களும் நம்மில் தெளிவாக வெளிப்படுத்தப்படும் போதுதான் நாம் தேவனின் கனத்திற்குரிய பாத்திரங்களாக மாற்றப்படுகிறோம். எனவே, நம்மைநாமே ஆராய்ந்து ஒழுங்குபடுத்துவதன் மூலம், நாம் தேவனால் உருவாக்கப்பட்ட கனத்துக்குரிய பாத்திரங்களாக மாறலாம். கர்த்தருடைய வருகையில் கனத்துக்குறியவர்களாக காணப்படலாம். கர்த்தராகிய தேவன் நமக்கு உதவி செய்து, அதற்காக நம்மை ஆயத்தப்படுத்துவாராக.