செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும் (யோவான் 12:24)

தேவனுக்கு மகிமை!!

செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்

"
மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை  மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்". யோவான் 12:24

நாம் தேவனைத் தெரிந்து கொள்ளவில்லை தேவன் நம்மை தெரிந்து கொண்டது நாம் கனி கொடுப்பதற்காகவும் நமது கனி நித்தியத்தில் நிலைத்திருக்கும் படிக்கும் தம்முடைய சபையாகிய தோட்டத்தில் நம்மை வைத்துள்ளார் (யோவான் 15:16). தூற்றுக்கூடை தம் கையில் உடைய தேவன் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார் (மத்தேயு 3:12). எனவே, நாம் மரிப்பதற்கு முன், நமது வாழ்க்கை தானியங்கள் இல்லாத வைக்கோல் போல இல்லாமல், கதிரில் நிறைந்த தானியம் அம்பாரத்தில் சேருக்கிறதுபோல இருக்க வேண்டும் (யோபு 5:26). நாம் கனிகொடுக்கும்படி நம் தேவன் நம்மைத் தெரிந்துகொண்டதால், நாம் கனிகொடுக்க வேண்டுமெனில், நமக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து நம் தேவன் நமக்கு உதவுவார் என்று வேதவாக்கியங்கள் கூறுகிறது. ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்தான், பூமி தானாகவே முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகக் கொடுத்தது (மாற்கு 4:26-28). ஒரு விதை கனி கொடுப்பதற்காக பூமி மூன்று வழிகளில் அந்த விதையை உதவுவதாக நாம் காணலாம். அதுபோலவே, நாம் நூறு மடங்கு கனி கொடுக்கும்படியாக நம் தேவன் பல்வேறு வழிகளில் நமக்கு உதவுகிறார் (லூக்கா 8:8).

முதலாவதாக, அந்த விதை முளையாக மாறுகிறது. நமது வாழ்க்கை கோதுமை தானியமாகவோ அல்லது வேறு ஏதேனும் தானியமாகவோ இருக்கலாம் நமது தேவன் தமது சித்தத்தின்படி  ஒரு ஆவிக்குரிய மேனியை நமக்குக் கொடுக்கிறார் (1 கொரிந்தியர் 15:37). இல்லையெனில், நாம் பலன் தருவதற்காக அவர் நமக்கு ஒரு ஆவிக்குரிய வாழ்க்கையைத் தருகிறார். இந்த உலக வாழ்க்கையில், நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க, தேவனுடைய சித்தத்தைச் செய்வது அவசியமாகும் (மத்தேயு 7:21). நமது இயேசுவைப் போலவே, நாம் ஆவிக்குரிய உலகத்திற்கு வரும்போது, ​​தேவனுடைய சித்தத்தின்படி ஒரு வாழ்க்கையை வாழ்வதற்காக, நமது தேவன் தமது சித்தத்தின்படி ஒரு சரீரம் அல்லது ஆவிக்குரிய வாழ்க்கையை அளிக்கிறார் (எபிரேயர் 10:5-7). ஆவிக்குரிய மண்டலத்தில் ஊழியர்களானால் அந்த நிலைக்கு ஏற்ற வண்ணமும் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள் (எபேசியர் 4:13) ஆகியோரின் நிலைக்கு ஏற்றவண்ணமும் தேவன் அவர்களுக்கு நியமித்தபடி வாழ்வதற்குத் தேவையான அனுபவங்களையும், ஆசீர்வாதங்களையும், வசதிகளையும் அளிக்கிறார். ஆனால் விசுவாசிகளுக்கு அதற்கேற்ப ஒரு சரீரம் அல்லது நூறு மடங்கு பலன் தரும் நல்ல நிலத்தின் அனுபவமான வாழ்க்கையின் நிலைமைகளை தேவன் தருகிறார். ஒருவேளை அது வித்தியாசமான வரங்களோ ஊழியங்களோ அல்லது கிரியைகளாகவோ இருக்கலாம் (1 கொரிந்தியர் 12:4-6). அது மட்டுமல்ல, ஒவ்வொரு விதைக்கும் அதன் சொந்த மேனி கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படும்போது, ​​கோதுமைக்கும், வாற்கோதுமைக்கும் அதற்கேற்ப ஒரு மேனியைக் கொடுக்கப்படுகிறது (1 கொரிந்தியர் 15:38). ஒவ்வொருவரும் தங்கள் திறமைக்கு ஏற்ப தாலந்துகளைப் பெறுவதைப் போல (மத்தேயு 25:15) நம் தேவன் ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்றபடி வாழ்க்கையைக் கொடுக்கிறார். ஆனால் உண்மையில், நம் தேவன் ஒவ்வொருவரிடமும் நூறு மடங்கு கனியை விரும்புகிறார். ஐந்து கிடைத்தவன் மற்ற ஐந்து பெற்றதைப் போலவும், இரண்டு கிடைத்தவன் மற்ற இரண்டு பெற்றதைப் போலவும், கோதுமை அல்லது வாற்கோதுமையானாலும் அதற்கேற்ற மேனியாகையால் நம் தேவன் நூறு மடங்கு கனியை மட்டுமே விரும்புகிறார் (லூக்கா 8:8). எனவேநம் தேவன் தமது சித்தத்திற்கும் நமது திறமைக்கும் ஏற்றபடி நமக்கு அளித்த மேனியாகிய ஆவிக்குரிய வாழ்க்கையில், நாம் நமது சரீரத்தில் வைராக்கியத்தோடு வாழ்வோமாக.

இரண்டாவதாக, முளை கதிராக மாறுகிறது. நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் பலனற்றவர்களாக மாறினால், நாம் வெட்டப்பட்டு, அழிக்கப்படுவதற்காக நித்திய அக்கினி நரகத்தில் தள்ளப்படுவோம் (மத்தேயு 21:19, லூக்கா 13:7-9, யோவான் 15:2). எனவே, நாம் கனி கொடுக்கும்படியாக, நமது தேவனாகிய தோட்டக்காரன் இரண்டு காரியங்களை நமக்காக செய்கிறார். முதலாவதாக, அதை சுற்றிலுங்கொத்தி  பண்படுத்துகிறார் (லூக்கா 13:8). நமது தேவன் நமது வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளிலிருந்து நம்மை விடுவிக்கிறார். நமது தேவன் கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை அருளுவார் (எசேக்கியேல் 11:19). கற்களை பொறுக்கி நல்ல நிலமாக்குகிறார் (ஏசாயா 5:2). எல்லா தீய குணங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, தெய்வீக சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாக மாற்றப்பட்டு (2 பேதுரு 1:4) உண்மையும் நன்மையுமுள்ள இருதயமுள்ளவராய் பலன்கொடுப்பவர்களாக்குகிறார்கள் (லூக்கா 8:15). இரண்டாவதாக, அதற்கு எருப்போடுகிறான் (லூக்கா 13:8). தேவன் அவருடைய திவ்ய வல்லமையினால் ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் தந்தருளுகிறார்  (2 பேதுரு 1:3). ஜீவனுக்குரியது என்று கூறும்போது புசிப்பதையும் குடிப்பதையும் அல்லது நம்முடைய வாழ்க்கையின் எல்லா பூமிக்குரியத் தேவைகளைக் குறிக்கிறது (மத்தேயு 6:25). தேவபக்திக்குரியது என்பது நமது ஆவிக்குரிய ஜீவனுக்காக உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களைக் குறிக்கிறது (எபேசியர் 1:3). மேலும், மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் தேவனுடைய பண்ணையாக இருக்கிறோம், எனவே நம்முடைய தேவன் நமக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து, நம்மை விளையச் செய்கிறார் (1 கொரிந்தியர் 3:6-9). நாம் தேவனால் வளருகிறோம் (எபேசியர் 4:16). மற்றொரு விதத்தில் தலையாய கிறிஸ்துவில் நின்றும் ஊழியர்களாகிய கணுக்களாலும் கட்டுகளாலும் உதவி பெற்று  உற்சாகம் அடைந்து தேவ வளர்ச்சியை பெருகுகிறோம் (கொலோசெயர் 2:18). அப்படியாக கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமுள்ளவர்களாக வளருகிறோம் (1 சாமுவேல் 2:26). தேவனுடைய ஊழியர்கள், நம்மை கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்த்தி நாம் நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும் வரைக்கும் தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும்  வளர முடியும் (எபேசியர் 6:4; 4:11-15).

மூன்றாவதாக, வளர்ந்த கதிருகளாகிய நாம், கதிரில் நிறைந்த தானியமாக மாறுகிறோம். நம்முடைய தேவனாகிய தோட்டக்காரன் நம்மிடமிருந்து நற்பலனை அடையும்படி காத்திருந்து முன்மாரிக்காகவும் பின்மாரிக்காகவும் உழைக்கிறான் (யாக்கோபு 5:7). தேவன் தக்க அளவாகவும் தக்க வேளையிலும் நமக்கு தேவையான முன்மாரியையும் பின்மாரியையும் வருஷிக்கப்பண்ணுவார் (யோவேல் 2:23). மழையாகிய தம்முடைய உபதேசத்தையும் வசனத்தையும்  ஒவ்வொரு மரத்திற்கும் அதன் நிலைக்கு ஏற்றவாறு கொடுக்கிறார். இளம்பயிரின்மேல் மழை பொழிவதுபோல, பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல தேவையானவைக்கு அதற்கேற்ப நிலையில் மழையாகிய உபதேசத்தையும் வசனத்தையும் கொடுக்கிறார் (உபாகமம் 32:2). ஆவிக்குரிய வாழ்க்கையில் குழந்தைகளாயவர்க்கு பாலாகிய தேவனுடைய மூல உபதேசமாகிய வசனகள் கொடுக்கப்படுகின்றன. பின்னர் நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியதக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களை உடையவர்களுக்கு பலமான ஆகாரமாகிய (எபிரேயர் 5:12-14) ஆரோக்கியமான உபதேசத்தினாலுள்ள புத்திசொல்லுதல் கொடுக்கப்படுகிறது (தீத்து 1:9). அவ்வாறாக, நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான போதனைகளையும் புத்திசொல்லுதலும் பெற்று நாம் கிறிஸ்துவில் பரிபூரணராகுகிறோம் (கொலோசெயர் 1:28), அதாவது நிறைந்த தானியமாகுகிறோம். நம்முடைய பிரியமான இயேசுவுக்காக, நமது வாழ்வில் சகலவித அருமையான கனிகள் உள்ளவர்களாகுவோம் (உன்னதப்பாட்டு 7:13).

நாம் இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கும்போது, ​​ கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து செத்ததேயாகில் இந்த விதமான மிகுந்த பலனுடையவர்களாக முடியும் சாகாவிட்டால் தனித்திருக்கும் (யோவான் 12:24). நாம் இயேசுவோடுகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம் அல்லது துளிர்த்து எழுவோம் (2 தீமோத்தேயு 2:11). கிறிஸ்துவினுடன் இணைக்கப்படும் ஞானஸ்தானத்தில் அவனுடன்கூட மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுகிறதினால் புதிதான ஜீவன் உள்ளவர்களாக, இயேசுவுடன் வாழ்பவர்களாக நாம் மாறுகிறோம் (ரோமர் 6:3-5). மரிப்பதன் மற்ற அனுபவங்களைப் பற்றி நாம் சிந்திக்கும்போது ​​முதலாவதாக நமது ஆவிக்குரிய வாழ்வில் நாம் மரித்து நமது ஜீவன் கிறிஸ்துவுடன் தேவனில் மறைந்திருக்கிறது என்ற நிலையில் நாம் வாழ நேரிடுகிறது. அதனால் நாம் மேலானவைகளையே நாடி பூமியிலுள்ளவைகளை அல்ல மேலானவைகளை தேடுபவர்களாக மாற நம்மால் முடிகிறது (கொலோசெயர் 3:1-3). இரண்டாவதாக, எல்லாருக்காகவும் இயேசு மரித்திருக்க எல்லாரும் மரித்தார்கள் என்றும் பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல் இயேசுவுக்காக வாழ வேண்டும் என்று நம்மை உணர்த்துகிறது. ஆகையால், நாம் மாம்சத்தின்படி ஒருவனையும் அறியாதவர்களாக மாம்சத்தின் படி வாழாமல் ஆவிக்குரியவர்களாகவே வாழ முடிகிறது (2 கொரிந்தியர் 5:14 -16). மேலும், மூன்றாவதாக மிக முக்கியமாக நாம் தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களாகுவோம் (ரோமர் 7:4). நியாயப்பிரமாணம் என்று சொல்லும்போது, ​​புதுமையான ஆவியின்படி தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாதபடிக்கு நம்மை கட்டியிருக்கிற நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்கிற பழமையான எழுத்தின்படியுள்ள, பழைய மனுஷனிலுள்ளதாய  பாவத்தினுடையதும் உலகத்தினுடையதும் மாம்சத்தினுடையதுமான ஆசை இச்சைகளாகும். நாம் அதற்கு முற்றிலும் மரிக்க வேண்டும். பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தது நாம் இனி அதில் பிழைத்திருக்காமல்  (ரோமர் 6:2), இனி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடிக்கு பாவசரீரம் ஒழிந்து போகும்பொருட்டாக இயேசுவுடன் கூட சிலுவையில் அறையப்பட்டு மரித்தவர்களாகுவோம் (ரோமர் 6:6-7). நாம் மாம்சத்தின்படி வாழக்கூடாது என்பதால் மாம்சத்தின் கிரியைகளை (ரோமர் 8:12 -13), அந்த விதமாக கிரியை செய்கிற பூமியிலுள்ள அவையவங்களை அழித்துப் போட வேண்டும் (கொலோசெயர் 3:5). அதற்கு கிறிஸ்து இயேசுவினுடையவர்களாக மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைய வேண்டும் (கலாத்தியர் 5:24). நாம் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்துண்டானால் (கொலோசெயர் 2:20), நாம் உலகத்திற்கும், உலகம் நமக்கும் சிலுவையிலறையுண்டு மரிக்க வேண்டும் (கலாத்தியர் 6:14). சுருக்கமாகச் சொன்னால், தேவனுக்கென்று வாழ்ந்து கனிகளைக் கொடுக்கும்படி நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்கள் ஆகும்படிக்கு (ரோமர் 7:4) கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டு (கலாத்தியர் 2:19-20) சிலுவையில் மரிக்க வேண்டும் (பிலிப்பியர் 2:8). இனி பிழைப்பது நாம் அல்ல, கிறிஸ்து நமக்குள்ளே ஜீவிக்கிறார் என்றாள்  நாம் கிறிஸ்து மூலமாக தேவனுக்குக் கனி கொடுக்கிறவர்கள் ஆகுவோம். நாம் விலையுயர்ந்த அருமையான கனிகளாக மாறும்போது, ​​நம் தேவன் நம்மைத் தம்மிடத்தில் சேர்த்துக்கொண்டு நாம் நித்திய நித்தியமாக கர்த்தருடன் இருப்போம். இந்த அருமையான கனிகளுக்காக தேவனாகிய கர்த்தர் உதவுவாராக.