தேவனின் நல்ல போர்ச்சேவகன் (2 தீமோத்தேயு 4:7)

தேவனின் நல்ல போர்ச்சேவகன் (2 தீமோத்தேயு 4:7)
: :

தேவனுக்கு மகிமை

தேவனின் நல்ல போர்ச்சேவகன்

"
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்." 2 தீமோத்தேயு 4:7

கிறிஸ்தவ வாழ்க்கையில் உள்ள மூன்று முக்கிய விஷயங்களில் முதலாவது நல்ல போராட்டத்தைப் போராடுவது என்பதே. ஆவிக்குரிய இஸ்ரவேலரான நமக்கு நிழலாகவும் மாதிரியாகவும் இருக்கும் எழுத்துக்குரிய இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வெளியேறியபோது, ​​இரண்டு வேதபகுதிகளில் அவர்கள் அணிஅணியாய்ப் புறப்பட்டதாகக் கூறுகின்றன. யாத்திராகமம் 13:17-18 இல், இஸ்ரவேல் அணியணியாய் புறப்பட்டிருந்தாலும் பெலிஸ்தியரோடு யுத்தம் உண்டாகி மனமடிவுள்ளவர்களாய் அவர்கள் எகிப்துக்கு  திரும்பி போகாமலிருக்க தேவன் அவர்களை அந்த வழியாக கொண்டு போகாமல் சிவந்த சமுத்திரத்தின் வனாந்தரத்தின் வழியாய் சுற்றி போகப்பண்ணினார்.   இரண்டாவதாக, யாத்திராகமம் 14:8 லும், இஸ்ரவேல் புத்திரர் அணி அணியாய் பலத்த கையோடு புறப்பட்டார்கள் என்று சொல்வது பார்வோன் தன் சேனையோடு பின்தொடர்ந்ததாகக் கூறுகிறதினாலே தான். இங்கேயும், இஸ்ரவேலர்கள் அவர்களுடன் யுத்தம் பண்ண அனுமதிக்காமல், மாறாக எகிப்தியர்களை சிவந்த சமுத்திரத்தில் தள்ளி அவர்களை அழிக்கிறார். சுருக்கமாக, எகிப்தை விட்டு வெளியேறிய இஸ்ரவேலர்களுக்கு  குறிப்பிடப்பட்ட இடங்களிலோஅல்லது வனாந்தரத்தின் வழியாகப் பயணிக்கும் பிரயாணத்திலோ காரியமான யுத்தம் ஒன்றும் உண்டாகவில்லை  யாத்திராகமம் 17:8-10 இல், அமலேக்கியர்  வந்து ரெவிதீமில் இஸ்ரவேலரோட யுத்தம் பண்ணினாலும் மோசே தேவனிடம் கையை உயர்த்தியதால் அவர்கள் வெற்றி பெற்றனர்.

மீதியானியர்களை பழிவாங்கி அழித்துபோடுவர்களும் (எண்ணாகமம் 31:1-12) மற்றும் யோர்தானுக்கு அப்பால் உள்ள தேசத்தை யுத்தம் செய்து கைப்பற்றினவர்களும் (உபாகமம் 3:12-17) எகிப்திலிருந்து வந்த யுத்த வீரர்கள் அல்ல, அவர்கள் வனாந்தரத்தில் அழிக்கப்பட்டிருந்தனர் (உபாகமம் 2:14-16). ஆனால் அவர்களின் பிரதிநிதிகளான யோசுவா, காலேப் மற்றும் அவர்களைப் போல கர்த்தரைப் பற்றிக் கொண்ட பின்சந்ததியினர்தான் யுத்தம் செய்தனர்  (உபாகமம் 4:4). ஆனால் பொதுவாக இஸ்ரவேலைரைப் பார்த்தால், அவர்கள் போருக்குத் தயாராக எகிப்திலிருந்து வெளியே வந்தனர் என்றாலும் அவர்கள் தேசத்தை கைப்பற்றும் காலத்தில் தான் அவர்களுக்கு சரியாக யுத்தம் உண்டானது. குறிப்பாக யோர்தானுக்கு இக்கரையில் அல்ல, அக்கரையில் கானான் தேசத்தில் தான் யுத்தம் உண்டானது. கிறிஸ்தவ உலகில் அறியப்படும் கானான் தேசம், நாம் சொந்தமாக்கப் போகும் நித்திய பரலோக கானான் என்றால், நமக்கு பரலோகத்தில் யுத்தம் இல்லையே. வானத்தில் வலுசர்ப்பத்துடன் யுத்தம் செய்பவர்கள் நாமல்ல. மிகாவேலும் அவனுடைய தூதர்களுமே. (வெளிப்படுத்தல் 12:7).

ஆகையால், இஸ்ரவேல் மக்களின் வனாந்தரப் பிரயாணத்தையும் மற்றும் கானான் தேசத்தில் நடந்த யுத்தத்தையும் பற்றி நாம் ஆவிக்குரிய பிரகாரமாக  சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. வனாந்தரப் பிரயாணம் என்பது இந்த உலக வாழ்க்கையில் தேவனுடைய கற்பனைகளை கடைபிடித்து கொண்டு தேவனை துதித்தும் ஆராதித்தும் சேவித்தும் பக்தியோடு வாழ்கிற நம்முடைய எழுத்துக்குரிய வாழ்க்கையாகும். கானான் தேசம் என்பது நாம் யுத்தத்தை செய்து ஜெயத்தைப் பெற்றுக் கொண்டு சுதந்திரவாளிகளாக மாற வேண்டிய நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையுமே ஆகும். ஜெயம் பெற்றுக்கொள்கிறவர்களாக எடுத்துக்கொள்ளப்பட தகுதியுள்ளவர்களான உள்ளான மனிதனின் ஆவிக்குரிய வாழ்க்கையாகும். (வெளிப்படுத்துதல் 2:26-27, 3:21, 12:5). தேவனுக்கு பிரியமில்லாதவர்களாக போஜனப்பிரியர்களும் சுகபோகப்பிரியர்களுமாக பக்தியின் வேஷத்தை தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களுக்கு (2 தீமோத்தேயு 3:5) இந்த உலக வாழ்க்கையில் யுத்தங்களோ அல்லது பிற போராட்டங்களோ அல்லது சோதனைகளோ இல்லை. மாயையானவைகளை தங்களுடைய தேவனென்று சொல்கிறவர்களுடைய வாழ்க்கையில் புசித்தம் குடித்தும் உட்கார்ந்தும் விளையாடியும் (யாத்திராகமம் 32:6) வாழுகிறார்கள்.

ஆனால், கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியுடன் வாழ விரும்புவோர் அனைவரும் துன்புறுத்தப்படுவார்கள் என்பதே உண்மையாகும் (2 தீமோத்தேயு 3:12). எதிராளியாகிய பிசாசு, கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல  சுற்றித்திரிந்து அவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறான் (1 பேதுரு 5:8). நமக்கு போராட்டமுள்ளது ஆவிக்குரிய வாழ்க்கையிலானபடியால்தான் மாம்சத்தோடும் ரத்தத்தோடும் போராட்டம் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்முடைய போராட்டம் பிசாசின் தந்திரங்களோடும், துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தக்கார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளோடுமே (எபேசியர் 6:11-12). ஆகவே நாம் தேவனுக்கு கீழ்படிந்தவர்களாக தேவனுடைய நல்ல போர்ச்சேவர்களாக பிசாசுக்கு எதிர்த்து நின்றால் அவன் நம்மை விட்டு ஓடிப் போவான் (யாக்கோபு 4:7). அப்படியே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின்  வல்லமையிலும் பலமுள்ளவர்களாக, நாம் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அணிந்துகொண்டு, நல்ல போராட்டத்தைப் போராடி யுத்தம் செய்கிறவர்களாக எல்லாவற்றையும் முடித்த பிறகு, நாம் வெற்றி பெற்று தேவனுக்கு முன்பாக  உறுதியாக நிற்க வேண்டும் ( எபேசியர் 6:10-17).

கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்வீரனாக மாற, அப்போஸ்தலர்களுடனும் தலைவர்களுடனும் நாம் பாடுபட வேண்டும் (2 தீமோத்தேயு 2:3). கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை இயேசுவின் சரீரமாகிய சபைக்காக அப்போஸ்த்தோளர்கள் தங்களுடைய மாம்சத்திலே நிறைவேற்றுகிறார்கள் (கொலோசெயர் 1:24). கிறிஸ்துவின் பாடுகளில் அவரில் பெருகுகிறதினால் (2 கொரிந்தியர் 1:5), நாமும் அவர்களுடன் கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளிகளானதால் சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டும் (1 பேதுரு 4:13). இயேசு, தேவனுடைய குமாரனாக இருந்தாலும், அவர் பட்டபாடுகளின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு பரிபூரணராக்கப்பட்டதைப் போல (எபிரெயர் 5:8) இயேசுவின் பாடுகளில் பங்கு கொள்வதன் மூலம் நாமும் கீழ்ப்படிதலில் பரிபூரணராக முடியும். இயேசு சிலுவையின் மரணம் வரை கீழ்ப்படிதலுடன் வாழ்ந்தது போல (பிலிப்பியர் 2:8) நாமும் மரணம் வரை கீழ்ப்படிதல் உள்ளவராய் வாழ வேண்டும். ஒரு நல்ல போர்வீரனின் முக்கிய பண்பான கீழ்ப்படிதலில் நாம் பரிபூரணராக வேண்டும். ஆதலால், கர்த்தர் கட்டளையிடும் செயல்களை முடிவுபரியந்தம் செய்பவர்களாய் இருந்தால் கர்த்தரோடு கூட அதிகாரம் பெற்று கொள்ள இயலும் (வெளிப்படுத்துதல் 2:26-27).

சேவகமெழுதிக் கொண்டவனுக்கு ஏற்றவனாய் கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்வீரனாக இருக்கும்படிக்கு நம்முடைய ஆன்மீக வாழ்வில்  பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கி கொள்ளாமல் வாழவேண்டும் (2 தீமோத்தேயு 2:3-4). ஒரு போர்வீரனுக்கு அதிகாரப் பதவிகள், சம்பளம் மற்றும்  சலுகைகள் உட்பட அவரது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் வழங்கப்படுகின்றன. அதைபோல தேவனுடைய நல்ல போர்வீரர்களாகிய நம் வாழ்க்கையிலும், தேவனுடைய திவ்விய வல்லமையானது ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் தந்தருளுகிறது ( 2 பேதுரு 1:3). ஆதலால் நாம் பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கி கொள்ளாமல் அல்லது அன்றாட வாழ்வின் கவலைகளால் பாரமடையாதவர்களாய் வாழவேண்டும் (லூக்கா 21:34).

நாம் தேவனை சேவிக்கிறப்படியினல், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று ஜீவனுக்காகவும், என்னத்தை உடுத்துவோம்  என்று சரீரத்துக்காகவும் கவலைப்படக்கூடாது (மத்தேயு 6:24 -25). உலகத்தாரைப் போல நாம் தேவனுக்கு அல்ல உலகப் பொருளுக்கு ஊழியஞ் செய்ய கூடாது. (லூக்கா 12:29-31). அவர்களுக்கு வேண்டி ஒன்றும் விசாரிபதற்க்காக யாரும் இல்லை. எனவே அவர் அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப் பட்டுக் கலங்குகிறார்கள் (லூக்கா 10:41). ஆனால், நம்முடைய கர்த்தர் நமக்கு வேண்டி விசாரிக்கிறவரான படியால், நம்முடைய கவலைகள் எல்லாம் கர்த்தர் மீது வைத்துக்கொள்ளலாம் (1 பேதுரு 5:7). நாம் பரிசுத்த ஆவியினால் தேவனுடைய ராஜ்யத்தின் அனுபவங்கள் மூலம் கர்த்தரைச் சேவிக்கிறவர்கள் ஆனால் தேவன் நம்மில் பிரியப்படுவார் (ரோமர் 14:17). சேவகமெழுதிக் கொண்டவனுக்கு ஏற்றவராய் இருப்பதினால் அல்லது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுகிறவர்கள் ஆனப்படியால் பரலோகத்திலுள்ள சர்வசேனாதிபதி நம்முடைய பூமிக்குரிய  வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் நமக்குத் தருவார் (மத்தேயு 6:31-33). ஆகையால், நாம் கர்த்தருக்குள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெறுகிறவர்களாகுவோம் (1 கொரிந்தியர் 15:58). இயேசுவும் மாம்சாத்திலிருந்த நாட்களில் எப்பொழுதும் பிதாவுக்குப் பிரியமானவைகளை செய்து வாழ்ந்தார் (யோவான் 8:29). அதை போன்று நம்முடைய வாழ்க்கையின் விலைமதிப்பற்ற நேரத்தை பிரயோஜனப்படுத்திக் கொண்டு (எபேசியர் 5:16), நாம் மனுஷர்களுக்கென்று செய்யாமல், குடுபத்தினற்கு அல்லது வேண்டப்பட்டவர்க்கு என்று செய்யாமல் கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய் செய்து, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவோம் என்று அறிந்து (கொலோசெயர் 3:23-24), நல்ல வீரர்களாக கர்த்தருக்கு சேவை செய்வோம்.

கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்வீரர் ஆகையால் (2 தீமோத்தேயு 2:3), சேவகமெழுதிக் கொண்டவனுக்கு ஏற்றவராய் நாம் நல்ல போராட்டம் செய்ய வேண்டும் (1 தீமோத்தேயு 1:18). அதாவது, நாம் எதிரியை போரில் தோற்கடிப்பது மட்டுமல்லாமல், ஏராளமான கொள்ளைப் பொருட்களையும் பெற வேண்டும். கானானில் நடந்த போருக்குப் பிறகு ரூபன் மக்களும் அவர்களது சகோதரர்களும் தங்கள் எதிரிகளிடமிருந்து ஏராளமான கொள்ளைப் பொருட்களுடன் வீடுக்கு திரும்பியது போல (யோசுவா 22:8), நாமும் தேவனிடத்தில் ஐசுவரியவான்களாகி நித்தியதயில் போக வேண்டும் (லூக்கா 12:21). நம் வாழ்வில் தெய்வீக அனுபவங்களிலிருந்து வரும் செல்வம் கர்த்தரிடமிருந்து வருகிறது. நம்முடைய சொந்த உழைப்பால் அதனுடன் எதையும் சேர்க்க முடியாது. (நீதிமொழிகள் 10:22) ஆகையால், யாக்கோபைப் போலவே, நாம் ஆசீர்வாதத்திற்காக பாடுபட்டுப் போராடி ஜெயம் பெற வேண்டும் (ஆதியாகமம் 32:24-28, ஓசியா 12:4). கண்ணீரோடு தேவனிடம் ஜெபம் செய்து  ஜெபத்தில் போராடுபவர்களாக வேண்டும் (கொலோசெயர் 4:12). யாக்கோபு தனது  பூமிக்குரிய செல்வமாய குடும்பத்தினர் மற்றும்  தனக்கு உண்டான யாவையும் அக்கறரைப்படுத்தியத்தின் பின்பு ஜெபிக்க ஊக்குவித்தான் (ஆதியாகமம் 32:22-24). அதை போல, பிழைப்புக்கடுத்த  அலுவல்கள் யாவையும் நம் எண்ணங்களிலிருந்து விலக்கி வைத்து விட்டத்தின் பின்பு  ஜெபத்தில் போராட வேண்டும்.

உத்தம இருதயத்தோடு தேவனை சேவை செய்கிற நாம் (கொலோசெயர் 3:22), அந்த உத்தம இருதயத்தோடு தேவனில் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்களுக்காக தேவன் தம்முடைய வல்லமையை விளங்கபண்ணுகிறார் (2 நாளாகமம் 16:9). யாக்கோபைப் போல, "நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய நான் உம்மைப் போகவிடேன்" என்ற உறுதியுடன் ஜெபத்தில் போராட வேண்டும் (ஆதியாகமம் 32: 26). பரலோகத்தின் அனைத்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாலும் நாம் ஆசீர்வதிக்கப்படுவதற்காக (எபேசியர் 1:3), நாம் ஜெபத்தில் தேவனோடு போராடி வாழவேண்டும். ஞானத்தினால் கட்டப்பட்ட வீடு விவேகத்தினால் நிலைநிறுத்தி அறிவினாலே அதன் அறைகளில் அருமையும்  இனிமையுமான சகலவித பொருள்களும் நிறைந்திருக்கும் (நீதிமொழிகள் 24:3-4). ஆகையால், கிறிஸ்துவாகிய தேவனுடைய இரகசியத்தைப் பற்றிய அறிந்து கொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சத்தினுடைய எல்லா ஐசுவரியம் பெறுவதற்கு நாம் ஒரு பெரிய போராட்டத்தை நடத்த வேண்டும் (கொலோசெயர் 2:2). அதற்காக நாம் பாடுபட்டு பிரயாசப்பட வேண்டும். அப்படியானால் நாம் மிகுந்த செல்வத்துடன் நமது நித்திய வீட்டிற்குத் திரும்ப முடியும் (யோசுவா 22:8).

மேலும், சகலத்தையும் செய்து முடித்து நாம் தேவனுக்கு முன்பாக திராணியுள்ளவர்களாக நிற்க வேண்டும் (எபேசியர் 6:13) அல்லது மகிமையுடன் அவருக்கு முன்பாக நிறுத்தப்பட வேண்டும் (எபேசியர் 5:27). ஆகையால், சம்பவிக்கபோகிற இவைகளுக்கெல்லாம் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவார்களாக எண்ணப்படுவதற்கு  எப்பொழுதும் விழிப்புடன் இருந்து ஜெபிப்போம் (லூக்கா 21:36). கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்வீரனாக நல்ல போராட்டத்தைப் போராடுவோம். ஆனால், நம் சகலசேனைகளின் தளபதியாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கும்போது, ​​நாம் ஜீவ கிரீடத்தைப் பெறுவோம். இந்த அனுபவங்களுகாக கர்த்தராகிய தேவன் நமக்கு கிருபை நல்கி பலப்படுத்துவாராக.