நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியம் (தீத்து 2:13)
தேவனுக்கு மகிமை!!
நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியம்
"நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி...." தீத்து 2:13
நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில், நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டு காரியங்களை இது நினைவூட்டுகிறது. கர்த்தருடைய மகிமையான வருகைக்காக மட்டுமல்ல நாம் காத்திருப்பது. நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்திற்காகவும் நாம் காத்திருப்பது. நம்முடைய நம்பியிருக்கிற பாக்கியம் என்று கூறுவது நமது கர்த்தருடைய மகிமையான வருகையில் நாம் கர்த்தருடன் ஒப்பானவர்களாய் மகிமைப்படுத்தப்படுவோம் என்பது. அதற்காக நாம் கர்த்தரை அவர் இருக்கிற வண்ணமாகவே அவரை தரிசிக்க வேண்டும் (1 யோவான் 3:2-3). அதாவது, அவருடைய வருகையின்போது, அவரைக் காண்பவர்கள் மட்டுமே கர்த்தருக்கு ஒப்பானவர்களாகுவார்கள். ஆகையால், நம் வாழ்வில் நாம் கர்த்தரை காண முடியும் என்று பலங்கொண்டு திடமனது உள்ளவர்களாக வாழ்வோம். "பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும்" என்று பிலிப்பு சொல்லுவது போல இயேசுவை காண்பது மட்டும் நமது வாழ்க்கையில் போதும் என்று கூற வேண்டும் (யோவான் 14:8). இயேசுவின் மீது இந்த பாக்கியமான நம்பிக்கை இருக்கிற ஒரு நபர் இயேசு சுத்தமுள்ளவராய் இருக்கிறது போல தன்னை தானே சுத்திக்கரித்துக் கொள்ள வேண்டும் (1 யோவான் 3:3). உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவன் என்று தேவனால் சாட்சியைப் பெற்ற யோபு தன் வாழ்க்கையில் தனது வழிகளின் உத்தமம் தன்னுடைய நம்பிக்கையாக்கி வாழ்கிறான் (யோபு 4:6). ஆகையால், யோபு தன் வாழ்வில் நம்பிக்கையுடன் கூறுகிறார், தன் மீட்பர் வெளிப்படும்போது, அவரை அந்நிய கண்கள் அல்ல அவருடைய கண்கள் தாமே மீட்பரை காணும் (யோபு 19:25-27). நம்முடைய தேவனை நாம் எந்த நிலையில் காண்போம் என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், நம்மைத் திருத்திக் கொண்டாள் நாமும் நம்முடைய மீட்பராகிய மகா தேவனைக் காண்போம்.
முதலாவதாக, இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 5:8). இருதயத்தில் சுத்தமானவர்கள் என்று கூறும்போது, நாமும் தேவனுக்கும் இடையிலான உறவைக் காட்டுகிறது. மனிதன் தன் கண்கள் காண்பதற்கு ஏற்றவண்ணம் வெளிப்புறமாகப் பார்க்கிறான். ஆனால் நம்முடைய கர்த்தராகிய தேவன் நம் இருதயத்தைக் காண்கிறார் (1 சாமுவேல் 16:7). மேலும், மனிதன் தன் இருதயத்திற்கு ஏற்றவண்ணம் மனிதனைக் காண்பான் (நீதிமொழிகள் 27:19). மஞ்சள் காமாலை வந்தவன் எல்லாவற்றையும் மஞ்சள் நிறமாகவே காண்பான். எனவே, இந்த திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிற இருதயத்தை அறிய தக்க வண்ணம் தேவனல்லாமல் யாருக்கும் முடியாது. தேவன் இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களை சோதித்து அறிகிறார் (எரேமியா 17:9-10). அதுமட்டுமல்ல, தேவன் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறவர் (1 நாளாகமம் 28:9). நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறும் போது (அப்போஸ்தலர் 2:38). இருதயங்களை அறிந்த தேவன், விசுவாசத்தினாலே நமது இருதயங்களைப் பரிசுத்தப்படுத்தி, பரிசுத்த ஆவியைக் தந்தருளி சாட்சி கொடுத்தார் (அப்போஸ்தலர் 15:8). நாம் தேவனுக்கு முன்பாகத் தொடர்ந்து சுத்தமான இருதயத்தோடும் நல்மனசாட்சி உள்ளவராக வாழ வேண்டும் (1 தீமோத்தேயு 1:5).
ஆனால், ஆதாமைப் போல நாமும் நம்முடைய மீறுதல்களை மூடி மார்பில் அக்கிரமத்தை மறைக்கிறவர்களானால் (யோபு 31:33) அல்லது இருதயத்தில் அக்கிரமத்தின் சிந்தைக் கொண்டு வாழ்ந்தால் (சங்கீதம் 66:18) இருதயத்திலிருந்து புறப்படுகிற காரியம் நம்மைத் தீட்டுப்படுத்தும் என்று இயேசு கூறுகிறார் (மாற்கு 7:21). அருவருப்பானதைச் செய்கிற எவரும் தேவனுடைய நித்திய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டார்கள் (வெளிப்படுத்துதல் 21:27). ஆகையால், தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்த தாவீது, தன் அக்கிரமங்கள் எல்லாவற்றையும் நீக்கி சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டியும் என்று ஜெபித்ததுபோல் (சங்கீதம் 51:9-10), நாமும் தேவனிடம் ஜெபிப்போமாக. அப்படியென்றால் துர்மனச்சாட்சி நீங்க இருதயத்தில் இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்டவர்கள் ஆவார்கள் (எபிரேயர் 10:22). தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து எல்லா அநீதியிலிருந்தும் அகற்றி இயேசுவின் இரத்தத்தால் நம்மைச் சுத்திகரிக்கிறார் (1 யோவான் 1:7,9). தேவன் நம்முடைய இருதயங்களைப் பரிசுத்தப்படுத்தியபடியால், நாம் பாவமறத் துப்புரவானேன் என்று கூறலாம் (நீதிமொழிகள் 20:9).
ஆனால், நம்முடைய இருதயம் தேவனுடைய பார்வையில் செம்மையாக இல்லாவிட்டால் (அப்போஸ்தலர் 8:21) நம்முடைய கர்த்தரால் நாம் கழுவப்படாவிட்டால், நம்முடைய கர்த்தருடன் நமக்கு பங்கும் சுதந்தரமும் இல்லை (யோவான் 13:8), நாம் அழிந்து போவோம். சில சமயங்களில், மனிதர்களின் பார்வைக்கு நாம் பக்தர்களாகவும் கர்த்தருக்கு முன்பாக நிற்பதற்க்கு பாத்திரவான்களாகவும் எடுத்துக்கொள்ளப்படத் தகுதியுள்ளவர்களாகவும் தோன்றலாம். ஆனால், இருதயத்தைக் காண்கிற தேவன், நம்முடைய இருதயம் தேவ சந்நிதியில் சுத்தமுள்ளதாக இல்லாவிட்டால் அந்த முதன்மையான பதவிக்கு நம்மைத் தெரிந்தெடுக்கமாட்டார், மாறாக நம்மை நிராகரிப்பார் (1 சாமுவேல் 16:7-10) நாம் கைவிடப் பட்டவர்களாகுவோம். இருதயத்தின் நிறைவிலிருந்து வாய் பேசுகிறது என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 12:34). ஆகையால், அக்கிரமத்தைப் பாராத இருதயத்திலிருந்தும் (சங்கீதம் 66:18), கபடமில்லாத உதடுகளில் நின்று பிறக்கும் கபடமில்லாத விண்ணப்பதிற்கு தேவன் செவிகொடுத்து (சங்கீதம் 17:1) தேவன் நம்மை மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்க பாத்திரவான்களாக்கி (லூக்கா 21:36) அப்படியே நாம் நம்முடைய கர்த்தராகிய தேவனைக் காண்போம்.
இரண்டாவதாக, நாம் யாவரோடும் சமாதானமாயிருக்கவும் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவும் உற்சாகம் உள்ளவர்களாகுவோம். பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லை (எபிரேயர் 12:14). இங்கே நமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலுள்ள பரிசுத்தமாக்குதலைக் காட்டுகிறது. பல நேரங்களிலும் நாம் மற்றவர்களுக்குத் தீமை செய்யும் நிலையில் நாம் காணப்படுகிறோம் அதனால் மற்ற மனிதர்கள் நமக்கு விரோதிகளாக மாறுகிறார்கள். இதன் காரணமாக, நாம் குற்றவாளிகளாக நியாயாதிபதியால் சிறை அடைக்கப்பட வேண்டிய நிலையில் வாழ்கிறோம் (மத்தேயு 5:23-26). நமது வார்த்தைகளாலோ, செயல்களாலோ அல்லது வேறு எந்த வகையிலோ நாம் மற்றவர்களை வருத்தப்படுத்தியிருந்தால், அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு ஒப்புரவாக வேண்டும். அப்படியே ஒப்புரவான பின்னர் நாம் தேவனுடைய சந்நிதியில் வர வேண்டும் (மத்தேயு 5:24). மறுபுறம், ஒருவர் தங்கள் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டால், நாம் அவர்களை முழு மனதுடன் மன்னிக்க வேண்டும். அவர்கள் எத்தனை முறை மனந்திரும்புவதாகச் சொன்னாலும், நாம் மன்னிக்க வேண்டும் (லூக்கா 17:3-4). நாம் மற்றவர்களை முழு மனதுடன் மன்னித்தால் மட்டுமே, நம்முடைய தேவன் நம்மை மன்னிப்பார் (மத்தேயு 18:35).
ஆனால், தங்கள் தோழரோடு பொய் பேசி இச்சக உதடுகளால் இருமனதோடு பேசுகிறவர்களும் உள்ளனர் (சங்கீதம் 12:2). வெளித்தோற்றத்தில் ஆட்டுத்தோலைப் போர்த்தியிருந்தாலும், உள்ளுக்குள் அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்தேயு 7:15). உள்ளுக்குள் தங்கள் சகோதரனுக்கு விரோதமாக மிகவும் கேடுபாடுகளை சிந்தித்து வைத்தாலும் தங்கள் நாவினால் இச்சகம் பேசுபவர்களாக காணப்படுகிறார்கள் (சங்கீதம் 5:9). தேன்கூடுப் போல இனிமையாகவும், எண்ணெயை விட மிருதுவாக பேசுகிறார்கள். ஆனால் முடிவில், அது கசப்புக்காய் போலக் கசப்பாகவும், இருபுறமுங்கருக்குள்ள பட்டயம் போல் கூர்மையுள்ளவர்களாக தீமை செய்பவர்களைப் போல மாறிவிடுகிறார்கள் (நீதிமொழிகள் 5:3-4). நாம் செய்ததுபோலவே நம்முடைய தேவன் நமக்கும் செய்ய கூடிய சூழ்நிலை வந்தால் (ஒபதியா 1:15). சர்வவல்லவர் கசப்பைக் கட்டளையிட்டால் (ரூத் 1:20) நிச்சயமாக நம்முடைய வாழ்க்கை துயரம் நிறைந்ததாக இருக்கும். ஆகையால், நாம் ஒருவரிடமும் கசப்பு கொள்ளாமல், தீங்கு செய்யாமல் வாழ்வோமாக (கொலோசெயர் 3:19). அப்பொழுது நாம் தேவ சந்நிதியில் சேர முடியும் (சங்கீதம் 15:2-4). யெகூ யோனதாபிடம் கேட்டதுபோல, செம்மையான இருதயம் உள்ளவர்களாக இருதயம் இருதயத்தோடு சேர்ந்து இருக்கும் நிலை நமக்குள் உண்டாக வேண்டும் (2 இராஜாக்கள் 10:15). பெந்தேகோஸ்தே சபைகளின் ஆரம்ப காலத்தில் விசுவாசிகள் ஒருவரையொருவர் காணும்போது, "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்வார்கள்; இது அவர்களுடைய செம்மையான இருதய ஐக்கியத்தின் ஒற்றுமையைக் காட்டுகிறது. இன்றும் நாம் ஒருவருக்கொருவர் சமாதானத்தைப் பின்பற்றி, நம் இருதயத்தைப் பரிசுத்தப்படுத்தி வாழ்வோம். அவ்வாறாக, நாம் பரிபூரண இருதயத்தோடு வாழ்ந்தால், நம் தேவன் நம்மில் பிரியப்படுவார் (1 நாளாகமம் 29:17).
உயிர்த்தெழுதலுக்காக ஆசையோடு காத்திருக்கிற அப்போஸ்தலனாகிய பவுல் தனது நம்பிக்கையின் காரணமாக, தேவனுக்கும் மனிதனுக்கும் முன்பாக
குற்றமற்ற மனச்சாட்சியை எப்போதும் கொண்டிருக்கப் பிரயாசப்படுகிறார் (அப்போஸ்தலர் 24:15-16). ஆகையால் அவர் தனது வாழ்க்கையில் தினமும் நல்மனசாட்சியுடன் தேவனுக்கு முன்பாக நடக்க முடிந்தது (அப்போஸ்தலர் 23:1). தேவன் சர்வ வல்லமையுள்ளவராக இருப்பதால், ஆபிரகாமினிடம் கேட்டுக்கொள்வது ஆபிரகாமுக்காக தேவன் கிரியை செய்வதற்கு தேவன் முன்பாக நடந்து உத்தமனாயிரு என்றார் (ஆதியாகமம்17:1). அப்படியாக தேவனுக்கும் மனிதனுக்கும் முன்பாக குற்றமற்ற மனசாட்சியை எப்போதும் உண்டாவதற்காக பிரயாசப்பட்டு வாழ்வோம். அப்படியானால், தேவனுக்கு முன்பாக அவர்கள் சுத்தமான இருதயத்தையும் நல்மனசாட்சியையும் உள்ளவர்களாக காணப்படுவார்கள் (1 தீமோத்தேயு 1:5). அதனால் தேவன் நம்மை சுத்திகரிப்பது மட்டுமல்ல நாம் தேவனால் நீதிமான்களாக்கப்படுகிறோம் (1 கொரி 6:11). யாராலும் குற்றம் சாட்டவும் நியாயம் விதிக்கவும் முடியாமல் பரிசுத்தமாக்கப்பட்டவர்களை தேவன் தெரிந்தெடுத்து நீதிமான்களாக்குகிறார் (ரோமர் 8:33). ஆகையால், நாம் நீதியில் தேவனுடைய முகத்தை தரிசிப்பதற்கு பாத்திரவான்களாக உயிர்த்தெழுதலின் காலை வேளையில் விழிக்கும்போது தேவனை காண்போம் (சங்கீதம் 17:15). அப்படியாக கர்த்தருடைய வருகையின்போது நாம் கர்த்தரை காண்பவர்களும் அவருக்கு ஒப்பானவர்களுமாக மாறும்படிக்கு நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியம் உள்ளவர்களாக வாழ, தேவன் நம் அனைவருக்கும் உதவி செய்து, நம்மை ஆயத்தப்படுத்துவாராக.