பலங்கொண்டு திடமானதாயிரு (யோசுவா 1:9)
தேவனுக்கு மகிமை
பலங்கொண்டு திடமானதாயிரு
"நான் உனக்கு கட்டளையிடவில்லையா பலங்கொண்டு திடமானதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." யோசுவா 1:9.
நித்தியத்துக்கு நிழலாட்டமாக கூறப்படும் கானான் தேசத்தை சொந்தமாக்கும்படி போகும் யோசுவாவிடம் கர்த்தர் கூறின வசனங்களாகும் மேலுள்ளது. பரலோக கானானை அடைந்து கொள்ள பிரயாணம் செய்யும் நம் வாழ்வில் உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று உறுதியளித்த நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் ஜீவியத்தில் முற்றும்முடிய நம்மோடு கூட இருப்பதால் நாம் பயப்படாமல் திகைத்துப் போகாமல் பலத்தோடும் திடமனதோடும்கூட நம் கிறிஸ்துவ ஜீவியத்தை தொடர்கிறோம். ஆனால் கிறிஸ்துவ ஜீவியத்தின் நம்பிக்கை என்பது இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்ததினால் நாமும் உயிர்த்தெழுவோம் என்பதே ஆகும். கர்த்தருடைய மகிமையின் வருகையில் இயேசு மகிமையுள்ளவராக வெளிப்படும்போது நாமும் உயிர்த்தெழுந்து மகிமையுள்ளவர்களாக இயேசுவோடு கூட காணப்படுவோம். 1 கொரிந்தியர் 15:11-18 ல் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இல்லைன்றால் நம்முடைய விசுவாசமும் வீணாயிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது, நம்முடைய கிறிஸ்தவ ஜீவியமும் வீணானதாயிருக்கும் என்று அது நம்மை ஞாபகப்படுத்துகிறது. கிறிஸ்து நித்திரையடைந்தவர்களில் முதற்பலனாக மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினால் நமக்கும் ஓர் உயிர்த்தெழுதல் உண்டு என்பது உறுதியாக்கப்பட்டிருக்கிறது (1 கொரிந்தியர் 15:20-23). ஆகவே நாம் கர்த்தரோடு கூட ஜிவித்து அதாவது கர்த்தரில் நிலைத்திருந்து அவர் தம் வருகையில் வெளிப்படும்போது நாமும் தைரியமுள்ளவர்களாக நிலைத்திருக்கிறவர்களாக வேண்டும்.
மாற்கு சுவிசேஷம் பதினாறாம் அதிகாரத்தில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளில் நடந்த சில சம்பவங்களை நாம் காணமுடிகிறது. இயேசு வெளியரங்கமாக ஊழியம் செய்த நாட்களில் தன்னுடைய பன்னிரண்டு சீடர்களும் மகதலேனா மரியாளும் மற்றும் அநேக ஸ்திரீகளும் அவரை பின்பற்றினார்கள்( லூக்கா 8:1-3). இயேசுவை அடக்கம் செய்யும் வரைக்கும் இந்த ஸ்திரீகளும் புருஷர்களும் இயேசுவை பின்பற்றினார்கள். ஆனாலும் மாற்கு சுவிசேஷம் பதினாறாம் அதிகாரத்தில், இயேசு உயிர்த்தெழுந்த செய்தி முதலாவது அறிவிக்கப்பட்டது இந்த ஸ்திரிகளுக்கு மட்டும்தான். இதன் காரணத்தை நாம் கவனிக்கும்போது புருஷர்கள் இயேசுவோடு கூட நடந்து மிகவும் ஊழியம் செய்தாலும் அவர்கள் இயேசு உயிர்த்தெழும் அந்த அதிகாலை வேளையில் இயேசுவைத் தேட ஆயத்தமில்லாமல் இருந்தார்கள். இயேசு உயிர்த்தெழுவார் என்ற சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் விசுவாசம் இல்லாமல் கேட்டபடியினால் கேட்ட வசனம் அவர்களுக்கு பிரயோஜனப்படவில்லை (எபிரெயர் 4:2). ஒருவேளை அந்த அதிகாலை நேரத்தில் அவர்கள் படுத்து நித்திரை செய்து கொண்டிருந்திருக்கலாம். மகதலேனா மரியாள் அவர்களிடம் அறிவித்த பின்பு அவர்கள் கல்லறையில் சென்றாலும் அவர்கள் தூதர்களையோ உயிர்த்தெழுந்த இயேசுவையோ காணமுடியாமல் தங்களுடைய இடத்துக்கே திரும்பிப் போனார்கள் (யோவான் 20:1-10).
நாம் ஆவிக்குரிய பிரகாரமாக இதை ஆராயும்போது இந்நாட்களில் அநேகர் இயேசுவுக்காக கிரியைகள் செய்ய உற்சாகமுள்ளவர்களாக இயேசுவை முழு உலகத்துக்கும் அறிவிக்கிறவர்களாக மட்டுமல்லாமல் இயேசுவின் நாமத்தில் அற்புதங்களும் அடையாளங்களும் செய்கிறவர்களாகவும் தீர்க்கதரிசனம் உரைத்தல், பிசாசுகளை துரத்துதல் போன்ற வரங்களை உடையவர்களாக இருக்கிறார்கள் (மத்தேயு 7:21-23). இருப்பினும் இவர்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து வாக்குத்தத்தமாகிய கர்த்தருடைய வருகையில் காணப்பட வேண்டுமென்ற (எபிரெயர் 10:36-37) மனதும் உற்சாகமும் இல்லாதவர்களாக காணப்படுகிறார்கள். இயேசுவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்காதவர்களானபடியால் அவர்கள் அக்கிரமஞ்செய்கைக்காரராகவும், இயேசுவினால் ஒருக்காலமும் அறியப்படாதவர்களாகவும் காணப்படுகிறார்கள். மறுபக்கம் வெளிப்படுத்தின விசேஷம் 12:1-6 ல் சபையாகிய ஸ்திரீயை பார்க்கும்போது இயேசு வெளிப்படுவதைக் காண மிகவும் ஆவலோடு காத்திருக்கிறவர்களின் கூட்டமாக நாம் படிக்க முடிகிறது (எபிரெயர் 9:28). கல்லறையினிடத்திற்கு சென்ற இயேசுவின் சீஷர்களாகிய பேதுருவும் யோவானும் இயேசு உயிர்த்தெழுந்த அனுபவத்தை காணமுடியவில்லை, ஆனால் இயேசு உயிர்த்தெழுந்த சம்பவத்தை தேவன்தாமே தூதர்களாலும் இயேசுவினாலும் அந்த ஸ்திரீகளுக்கு வெளிப்படுத்தியது போல கர்த்தருடைய வருகைக்காக காத்திருக்கிற சபைக்கு அதை தேவன் வெளிப்படுத்துவார்.
ஆகையால் புருஷர்களாகிய பக்திவைராக்கியமுள்ளவர்கள் இயேசுவுக்காக மிகவும் ஊழியம் செய்கிறவர்களாக இருந்தாலும் சீஷர்களைப் போல இயேசுவின் உயிர்த்தெழுதல் அதாவது வருகைக்காக காத்திருப்பவர்களாயிராமல் இருக்கிறார்கள். இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்க வேண்டும் என்கிற வேதவாக்கியத்தை சீஷர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள் என்று வாசிக்கிறோம் (யோவான் 20:9). ஆனால் ஸ்திரீகளாகிய தேவசபை இயேசுவைப் பின்பற்றியும், இயேசுவோடு ஜீவித்தும், ஊழியங்களை நன்றாகச் செய்கிறவர்களாய் இருந்தார்கள் (மத்தேயு 27:55). அவர்கள் தங்களுடைய ஜீவியத்தை தேவனுக்கு கிறிஸ்துவின் நற்கந்தமாக மாற்றிக்கொண்டு (2 கொரிந்தியர் 2:15) தாங்கள் ஆயத்தமாக்கிய ஜீவியமாகிய கந்தவர்க்கங்களையும் எடுத்துக்கொண்டு உயிர்ப்பின் விடியலில் இயேசுவை காண மிகவும் வாஞ்சையோடு புறப்படுகிற (லூக்கா 24:1) நம்பிக்கையுள்ள சபையாக காணப்படுகிறது. இந்த பூலோகத்தில் நம் கிறிஸ்துவ வாழ்வின் கிரியைகள் அதாவது ஊழியங்கள் மட்டும் முக்கியமானவையல்ல, இவைகளோடு சேர்ந்து நம்முடைய ஜீவியமும் கர்த்தருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட ஆயத்தமுள்ளவர்களாக காணப்பட வேண்டும். தூங்குகிறவர்களாக இருந்தால் மரித்தோரை விட்டு அதாவது இரண்டாம் மரணத்திற்குப் பங்குள்ளவர்களின் மத்தியிலிருந்து எழும்பினால் மட்டும்தான் கிறிஸ்துவின் பிரகாசம் அந்த பொன் விடியலில் அவர்களில் வெளிப்படும்படிக்குப் பிரகாசத்திற்காகக் காத்திருக்க முடியும் (எபேசியர் 5:14).
இனியும் இந்த ஸ்திரீகளாகிய சபையை கவனிப்போமானால் அவர்களில் அதிகம்பேர் உயிர்த்தெழுதலின் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும் நடுக்கமும் திகழும் பிடித்து பயப்படுபவர்களாக இயேசுவை காண்போம் என்பதை மற்றவர்களோடு கூற முடியாதவர்களாக மாற்றப்படுகின்றனர் (மாற்கு 16:8). அவர்கள் கர்த்தருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட தகுதியுள்ளவர்களாக இருக்கின்றோமா இல்லையா என்ற சிந்தனையினால் பயப்பட்டு நடுங்குகிறவர்களாக, தங்களுடைய நம்பிக்கையை உயர்த்தி கூற பயப்படுகிற சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதன் காரணத்தை நாம் ஆவிக்குரிய பிரகாரமாக சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. ஸ்திரீகள் நித்தியஜீவனாகிய கிருபையை சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களாக இருந்தாலும் பலவீன பாண்டமாயிருக்கிறார்கள் என வாசிக்கிறோம் (1 பேதுரு 3:7). ஆகிலும் நான் இருக்கிறது தேவ கிருபையினாலே என்று சொல்லும் விதத்தில் கிருபையைப் பெற்றவர்களாக இருந்தாலும் (1 கொரிந்தியர் 15:10), தங்களுடைய சபை வாழ்வில் ஆவிக்குரியவர்களாகக் காணப்படாமல் மாம்சத்திற்குரியவர்களாக காணப்படுகிறார்கள் (1 கொரிந்தியர் 3:1). மாம்சபலவீனம் நிமித்தமாக பலவிதமான பாவ கிரியைகளை செய்கிறவர்களாக தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிக்க இயலாதவர்கள் என்ற பயத்தினால் நிறைந்து காணப்படுகின்றனர் (கலாத்தியர் 5:19-21). கர்த்தருடைய வருகை என்று கேட்கும்போதே கைவிடப்பட்டு போக நேரிடுமோ என்ற பயத்தில் நடுங்குகிறார்கள். ஆனாலும் மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த செய்யக்கூடாததை செய்யும்படிக்கு வந்த இயேசு (ரோமர் 8:3) நம்முடைய பலவீனத்தை அறிந்து நம்மோடு சொல்வதென்னவென்றால் "என் கிருபை உனக்கு போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" என்கிறார் (2 கொரிந்தியர்12:9). மற்றொரு விதத்தில் மாம்சமானது பலவீனமானதாயிருந்தாலும் ஆவியோ உற்சாகமுள்ளதாக விழித்திருந்து கிருபைக்காக ஜெபிக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 26:41). ஆகவே நம்முடைய பலவீனங்களை பொருட்படுத்தாமல் ஆவியில் வாஞ்சையும் உற்சாகமுமுள்ளவர்களாக தேவ கிருபையினால் கர்த்தருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட வாஞ்சித்து அன்று நமக்கு அளிக்கப்படும் கிருபையின் மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாயிருக்க ஜெபிக்க வேண்டும் (1 பேதுரு 1:13). ஆவியானவர் நமது பலவீனங்களில் உதவி செய்து நாம் வேண்டிக்கொள்வதற்கு (ஜெபிப்பதற்கு) உதவி செய்கிறார் (ரோமர் 8:26). சம்பவிக்கப் போகிறவைகளுக்கெல்லாம் தப்பித்துக் கொள்ளவும் மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாவதற்கும் எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருக்கும்படியாக இயேசு நம்மிடம் வேண்டிக்கொள்கிறார் (லூக்கா 21:36). கெத்சமனேதோட்டத்தில் சம்பவித்ததை நாம் கவனித்தால் ஜெபிக்க ஏவப்பட்டவர்களாகயிருந்தாலும் மிகுந்த நித்திரையிலிருந்த சீஷர்கள் சோதனை வந்தபோது ஓடிப்போனார்கள் (மாற்கு 14:40,50). உயிர்த்தெழுதலின் காலையிலும் அவர்கள் உறங்குகிறவர்களாக இருந்தார்கள். ஆனால் அதிக ஊக்கத்தோடு ஜெபம் பண்ணின இயேசுவானவர் (லூக்கா 22:44) பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணினதினால் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டு உயிர்த்தெழுந்தார் (எபிரேயர் 5:7). ஜெபஜீவியம் உள்ளவர்களாக இருந்தால் நமக்கும் அவருடைய வருகையில் பயந்து திகைத்துப் போகாமல் பலம்கொண்டு திடமானதாயிருக்க முடியும் (1 யோவான் 2:28).
மாற்குசுவிசேஷம் பதினாரம் அதிகாரத்தில் நாம் மறுபடியும் கவனிக்கும்போது அந்த ஸ்திரீகளுடைய கூட்டத்தில் காணப்பட்டவள் என்று கூறப்பட்ட மகதலேனா மரியாளுக்கு இயேசு முதலாவது தன்னை வெளிப்படுத்தினார் என்று காண்கிறோம் (மார்கு 16:9). இது நம் தியானத்தில் மிக முக்கியமான ஒரு காரியம் ஆகும். அன்பில் பயமில்லை என்றும் பூரணஅன்பு பயத்தை புறம்பே தள்ளும் என்றும் நாம் வசனத்தில் வாசிக்கிறோம் (1 யோவான் 4:18). மரியாளை நாம் கவனித்துப் பார்த்தால் இருட்டை கண்டு பயப்படாமலும் அவள் தனியே போகிறேன் என்ற நினைவில்லாமல் அவள் இயேசுவை தேடி தனியாக இருட்டோடே கல்லறையினிடத்துக்குப் போனாள் (யோவான் 20:1). உன்னதபாட்டு 6:8-10 ல் அநேகம் ஸ்த்ரீகளை பற்றிக் கூறினாலும் புறாவும் உத்தமியுமானவள் ஒருத்தியே என்று சொல்லப்பட்டுள்ள சூலமித்தியை நாம் இங்கே கவனிக்க முடியும். அவள் தான் தன்நேசருடையவள் என்ற உறுதியும் தைரியமும் உள்ளவளாயிருக்கிறாள் (உன்னதபாட்டு 6:3). இரவிலே பயத்தையும் பாதையில் எதிர்ப்புகளையும் கண்டு திகைத்துப்போகாமல் தன் நேசரைத் தேடிச்செல்கிறாள் (உன்னதபாட்டு 3:1-5). மரியாளும் இயேசு மரித்ததும், அடக்கம் செய்யப்பட்டதும், மூன்று நாட்களாகி துர்நாற்றம் வீசத் துவங்கியிருக்கும் என்றும் ஒன்றும் நினைக்காமல் இயேசுவை தேடி கல்லறையினிடத்திற்கு வந்தாள். இயேசுவின் இறந்த உடலை தன்னால் சுமந்து கொண்டு போக முடியாவிட்டாலும் தன்நேசரோடிருக்கும் அளவில்லாத அன்பினால் அவள் இயேசுவின் சரீரத்தை எடுத்துக் கொண்டு போகிறேன் என்று கூறுகிறாள் (யோவான் 20:15). இயேசுவின் விருப்பத்தை போலவே மற்றெல்லாரை காட்டிலும் அதிகமாக அவள் இயேசுவை நேசித்ததினால் (யோவான் 21:15) இயேசு அவளுக்கு முதலாவது தன்னை வெளிப்படுத்தினார். கர்த்தருடைய கற்பனைகளை பெற்றுக்கொண்டு அவைகளை கைக்கொள்ளுகிறவனே இயேசுவை நேசிக்கிறவனாவான் (யோவான் 14:21). அவர்கள்தான் இயேசு கற்பித்தவைகளை முடிவுபரியந்தம் கைக் கொண்டவர்களாக ஜெயத்தைப் பெற்றும் இயேசுவைப்போல அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் (வெளி. 2:26), ஜெயங்கொண்டவர்களாய் சிங்காசனத்திற்கும் எடுத்துக்கொள்ளப்படுபவர்கள் (வெளி. 12:5). கர்த்தருடைய வருகையில் சரீர மீட்பை அடைந்து ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகிய மணவாட்டியை (வெளி. 19:7-8) நாம் மகதலேனா மரியாளில் காணலாம்.
சுருக்கமாக, கிரியைகளில் உற்சாகமுள்ளவர்களாயிருந்து உயிர்த்தெழுதலின் நம்பிக்கையில்லாமல் ஜீவித்து நரகத்துக்கு தகுதியுடையவர்களாகும் புருஷர்களைப்போல அக்கிரமஞ் செய்கைக்காரல் (மத்தேயு 7:22), கர்த்தருடைய உயிர்த்தெழுதலையும் வருகையையும் குறித்த மிகவும் சரியான அறிவைப்பெற்ற சபையாகிய ஸ்திரீயே மேன்மையானவளாவாள். ஆனாலும் இவர்களிலும் இரண்டு கூட்டத்தார் உள்ளனர். ஒரு கூட்டத்தார் உயிர்த்தெழுதலுக்குத் தகுதியுடையவர்களாக கர்த்தருடைய ரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்படும் மணவாட்டியாகிய சபை ஆகும். மற்றொரு கூட்டத்தார் மாம்சத்தின் பலவீனம் நிமித்தமாக குறைவுகளைக் கண்டு பயப்பட்டு, ஜீவனற்றவர்களாக ஆவிக்குரிய நித்திரையடைந்து கைவிடப்பட்டுப்போகும் சபை ஆகும். இந்த இரண்டாம் கூட்டத்தைச் சேர்ந்த பத்து கன்னிகைகளும் மணவாளன் வர தாமதிக்கிறார் என்று நித்திரைமயக்கம் அடைந்தவர்கள் ஆவார்கள் (மத்தேயு 25:1-5). இங்கேயும் இவர்கள் இரண்டு கூட்டமாகப் பிரிக்கப்படுவதைக் காணலாம் புத்தியுள்ள கன்னிகைகள் புத்தியில்லாத கன்னிகைகள். மார்கு 16:9 ல் முதலாவது மரியாளுக்கு தரிசனமான இயேசு பின்பு மற்றவர்களுக்கும் தரிசனமானார் (மத்தேயு 28:9). அதுபோலவே நடுராத்திரியில் மீண்டும் வரப்போகிறவராயிருக்கிற கர்த்தர் ஆயத்தமாயிருக்கிறவர்களை கல்யாணவீட்டுக்கு தன்னோடுகூட பிரவேசிக்கச்செய்கிறார் (மத்தேயு 25:10). மற்ற கூட்டத்தாரையோ நான் உங்களை அறியேன் என்று புறம்பாக்கப்பட்டவர்களாக நரகத்துக்கு ஏதுவானவர்களாகிறார்கள் (மத்தேயு 25:11-12, 7:23). ஒரு கூட்டத்தார் நித்திய ஜீவனை அடையவும் மற்றவர்கள் நித்தியாக்கினியை அடையும்படிக்கும் வேறுபிரிக்கப்படுகிறார்கள் (மத்தேயு 25:31-46). ஆகவே கர்த்தருடைய உயிர்த்தெழுதலைக் குறித்த சரியான வெளிப்படுத்தலை பெற்றுக்கொண்ட நாம் பயந்து திகைத்துப் போகிறவர்களாயிராமல் பலம்கொண்டு திடமனதுள்ளவர்களாக விழித்திருந்து ஜெபிக்கிறவர்களாயிருப்போமாக. நம்முடைய ஜெபத்தினால் தேவன் தாமே நம்மை இயேசுவின் முன்பில் நிற்கப்பாத்திரவான்கள் ஆக்குவார் (லூக்கா 21:36). சமாதானத்தின் தேவனாலே பரிசுத்தமாக்கப்பட உற்சாகமுள்ளவர்களாகவும் நம்மை அழைக்கிறவர் உண்மையுள்ளவராய் இருப்பதாலும், தேவன் நம்மை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாக இருக்கும்படி காப்பார் என்னும் தைரியத்துடன் கர்த்தருடைய வருகைக்காக காத்திருந்து ஆயத்தமாயிருப்போம் (1 தெசலோனிக்கேயர் 5:23-24). தேவனாகிய கர்த்தர் தாமே நம் அனைவருக்கும் அதற்காக உதவி செய்வாராக ஸ்தோத்திரம்.