நம்புகிறவர்களை அறிகின்ற தேவன் (நாகூம் 1:7)

தேவனுக்கு மகிமை

நம்புகிறவர்களை அறிகின்ற தேவன்

"
கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டைதம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்."  நாகூம் 1:7

நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்கு நல்லவர். ஆனால், தேவன் நல்லவர் என்பதை நாம் ருசித்துப் பார்க்க வேண்டும். அதற்காக நாம் தேவனை அரணாக கொள்ளும்போது தேவன் நல்லவர் என்பதை அனுபவித்து அறிவதற்கு முடியும் (சங்கீதம் 34:8). நாம் மேலே வாசித்தபடி, இதற்கு மிகச் சிறந்த நேரம் நமது இக்கட்டு நாட்களில்தான். அந்தச் சூழ்நிலைகளில் தேவன் நமக்கு அரணாக இருக்கிறார். ஆபத்துக் காலத்தில் தேவனை நோக்கி கூப்பிடும்போது அவர் நம்மை விடுவிப்பார் என்று கர்த்தர்தாமே கூறுகிறார் (சங்கீதம் 50:15). ஆனால், நமது துன்பங்களில் நாம் அடிக்கடி நமது தேவனை நம்பவோ அல்லது அவரை அரணாக கொள்ளவோ நமக்கு முடியவில்லை என்பது உண்மையல்லவா? ஏன் ஆபத்து காலத்தில் நம்முடைய தேவன் நமக்கு அரணாக நம்ப முடியவில்லை என்பதை நாம்  தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். முதல் காரணம் என்னவென்றால், நாம் மனிதனை நம்பி, மாம்சமானதை நமது புயபலமாக்கிக் கொள்வதால், நாம் உண்மையில் நமது இருதயங்களில் தேவனைவிட்டு விலகிச் செல்கிறோம் (எரேமியா 17:5). இது நமது வாழ்க்கையில் இரண்டு விதமாக நடக்கும். முதலாவதாக, நாம் மனிதர்களை நம்புவதால். நமக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது, ​​நமக்கு யார் உதவுவார்கள் என்ற எண்ணம் நமக்கு வரும். இயேசு நம்முடன் இருந்தாலும், மார்த்தாளைப் போல, நாம் பல காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் மனம் கலங்கி (லூக்கா 10:40-41)  உதவிக்கிடைப்பதற்காக மனிதர்களையும் பிரபுக்களையும் நாம் நம்புகிறவர்கள் ஆகிறோம். ஒருவேளை நாமே ஜெபிக்கிறவர்களும், மற்றவர்களை ஜெபிக்கச் சொல்பவர்களாகவும் இருக்கலாம். இருப்பினும், நமது மனம் பாரமடைந்து பதறி மனப்பூர்வம் தேவனிடம் ஜெபிக்கவோ அல்லது அவரை நம்பவோ முடிவதில்லை. அதனால்தான் நாம் உதவிக்காக மனிதர்களிடம் ஓடுகிறோம். கர்த்தர் நம் பட்சத்தில் இருக்கிறார் என்று சொல்லும்போது, ​​உண்மையில் நமக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் பட்சத்தில் இருக்கிறார் (சங்கீதம் 118:6-7). ஆனால் அவர்கள் நாம் நம்பும் நபர்களாக இருக்க மாட்டார்கள், மாறாக நமக்கு உதவி செய்வதற்காக தேவன் எழுப்பும் நபர்களாக இருப்பார்கள். இது நாம் புரிந்து கொள்ளாமல் யார் நமக்கு உதவி செய்வார் என்று யோசித்து மனிதர்களை நம்பும்போது உண்மையில் நமக்கு தேவனுடைய உதவி அனுபவிக்க முடியாமல் போகிறது. மட்டுமல்ல கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவனாகிறான் (எரேமியா 17:5). எனவே, நமது பிரச்சினைகள் குறைவதற்குப் பதிலாக அதிகரித்துக்கொண்டே இருக்கும். நாம் மிகுந்த இக்கட்டுக்குள்ளாகிறோம்.

இரண்டாவதாக, மாம்சமானதை நம் புயபலமாக்கிக்கொண்டு நாம் நமது சொந்த பலத்திலும் சொந்த ஞானத்திலும் நம்புகிறவர்கள் ஆகிறோம். நமது முயற்சியால் விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்பி அதற்கு வேண்டி கடினமாக உழைக்கிறோம். ஆனால் நமது சொந்த புயத்தினால் நாம் இரட்சிக்கப்படவில்லை (சங்கீதம் 44:3). தேவனை மறக்கிற துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக் கொள்கிறான் (சங்கீதம் 9:16-17). மாம்சமானதைத் தங்கள் புயமாகக் கொள்பவர்களின் கைகளின் சதிசர்ப்பனைகளையும் தேவன் தாழ்த்திவிடுவார் (ஏசாயா 25:11). ஆகையால் நமது சுயபுத்தியின் மேல் சாயாமல் முழு இருதயத்தோடும் நாம் கர்த்தரில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும் (நீதிமொழிகள் 3:5). ஆதலால் நாம் மனிதர்களில் நம்பிக்கை வைக்கக் கூடாது, நமது சொந்த திறமையிலோ கிரியையிலோ நம்பக்கூடாது. அதற்குப் பதிலாக, நம்முடைய தேவனாகிய கர்த்தரில் மட்டுமே நம்பிக்கை வைப்பவர்களாகுவோம் (எரேமியா 17:7). இது நமக்கு எப்படி சாத்தியம் என்பதைப் பார்க்க, பின்வரும் காரியங்களை நாம் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

உண்மையில், நமது தேவனில் மட்டும் நம்பிக்கை வைக்க  முடியாமல் போவது நாம் அநேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு நமது மனது கலங்குவதால் தான் (லூக்கா 10:41). கர்த்தரை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதை உடையவனாக இருந்தால் மட்டுமே கர்த்தரில் நம்பிக்கை வைக்க முடியும். அப்படிப்பட்டவர்களை தேவன் பூரண சமாதானத்தில் காத்துக் கொள்வார் (ஏசாயா 26:3). ஆகையால், நாம் நம் மனதின் அரையைக் கட்டிக்கொண்டால் மட்டுமே நமது தேவனில் பூரண நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க முடியும் (1 பேதுரு 1:13). நாம் மனந்திரும்பி அல்லது மனதை இளைப்பாறுதலாக்கி அமர்ந்திருந்து தேவனில் மட்டும் நம்பிக்கை வைத்து ஜெபித்தால் நாம் இரட்சிக்கப்படுவோம் அல்லது விடுதலை பெற்றுக்கொள்வோம். அமரிக்கையும் நம்பிக்கையுமே நமது பெலன் (ஏசாயா 30:15). தேவன் மீது நம்பிக்கை வைத்த பிறகு நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று அல்ல நாம் புரிந்து கொள்ள வேண்டியது நாம் முதலில் இளைப்பாறுதல் பெற்ற பின்னர் தேவனில் நம்பிக்கை வைக்க வேண்டும். உறுதியாய் கர்த்தரை பற்றி கொள்பவன் மட்டுமே தேவன் மீது நம்பிக்கை வைக்க முடியும். அப்படிப்பட்டவர்களுக்கு தான் தேவன் பூரண சமாதானத்தைத் தருவார் (ஏசாயா 26:3). இதற்காக, நாம் புரிந்துகொள்ள வேண்டிய சில காரியங்கள் உள்ளன.

முதலாவதாக, கர்த்தர் கட்டளையிடாமல் அன்றி நம் வாழ்வில் ஒன்றும் சம்பவிப்பதில்லை (புலம்பல் 3:37). யோபுடைய வாழ்க்கையில் தேவன் சாத்தானுக்கு அனுமதி கொடுத்த பின்னர்தான் பிசாசு அவனுக்குத் தீமையைக் கொண்டுவர முடிந்தது (யோபு 1:11-12, 2:5-6). கர்த்தர் கட்டளையிடப்  
பெருங்காற்று எழுகிறது, அதனால் துன்பங்களும் ஒடுக்குதல்களும் வருகின்றன (சங்கீதம் 107:25). தேவன் தம் சித்தத்தின் படியெல்லாம் செய்தும் அவர் குறித்திருக்கிறதை நிறைவேற்றும்போதும் தேவனை திருப்புவதற்கு யாரால் முடியும் (யோபு 23:13). அவருடைய கைக்கு தப்புவிக்கவோ அவர் செய்கிறதைத் தடுக்கவோ யாருமில்லை  (ஏசாயா 43:13). எனவே, நாம் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். மேலும், இவையெல்லாவற்றிலும் நாம் தேவனை பற்றி குறை சொல்லாதவர்களாக இருந்து அவருக்கு விரோதமாகப் பாவம் செய்யாமல் இருப்போம் (யோபு 1:22, 2:10). இரண்டாவதாக, நமக்கு நேரிடும் அக்கினி போன்ற சோதனைகள் ஏதோ புதுமையென்று நாம் நினைக்கக்கூடாது (1 பேதுரு 4:12). மனுஷருக்கு நேரிடுகிற சோதனையே அல்லாமல் வேறே சோதனை தேவன் அனுமதிப்பதில்லை நமது தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் அவர்களால் தாங்கக்கூடிய அவர்களுடைய திராணிக்கு ஏற்ப சோதிக்கப்படுவதற்கு தேவன் அனுமதிக்கிறார். நமக்கு தாங்க முடியாத சோதனையை ஒருபோதும் நேரிடுவதில்லை. மேலும் நமது தேவன் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் (1 கொரிந்தியர் 10:13). ஆகையால், சோதனையைச் சகிப்பவர்களாக பாக்கியவான்களாகுவோம் (யாக்கோபு 1:12).

மூன்றாவதாக, நாம் தேவனிடமிருந்து நன்மையைப் பெற்றுக்கொள்ள எப்போதும் ஆயத்தமுடையவர்கள். ஆனால், நம் தேவன் சில சமயங்களில் மட்டும் நமக்குக் கொடுக்கும் தீமையை நாம் பெற்றுக்கொள்ளத் தயங்கி மூடர்களைப் போலக் காணப்படுகிறோம் (யோபு 2:10). ஆகையால் நாம் நன்மையை மட்டுமல்ல, தீமையையும் அனுபவிக்க ஆயத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். தாழ்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் பரிபூரணமடையவும் குறைவுகள் அனுபவிக்கவும் நாம் பழக்கமுள்ளவர்களாவோம் (பிலிப்பியர் 4:12). ஆனால் உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, பட்டையமோ என்ன வந்தாலும் நாம்  மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு கிறிஸ்துவின் அன்பைவிட்டு பிரிந்திடாமல் தேவனுக்கு மகிமை செலுத்தி  வாழ்பவர்களாக இருக்கக்கடவோம்  (ரோமர் 8:35). சாது கொச்சுகுஞ்சு உபதேசி பாடியது போல, துக்கத்தின் பானப்பாத்திரம் கர்த்தர் நமது கைகளில் தரும்போது நாம் சந்தோஷத்துடன் அது வாங்கி அல்லேலூயா பாடுபவர்களாக இருக்க வேண்டும். நான்காவதாக, தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கும் தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கும் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்க வேண்டும் (ரோமர் 8:28). ஆரம்பம் கசப்பாக இருக்கலாம், ஆனால் முடிவு இனிமையாகவும் சமாதானமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் (ஏசாயா 38:17). யோபின் இக்கட்டுகள் ஆரம்பத்தில் அவருக்குக் கசப்பாக இருந்தபோதிலும், பின்னர் அது தனக்கு இரட்டிப்பான ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான காரணமாயிற்று (யோபு 42:10). சகோதரர்கள் யோசேப்புக்குத் தீமை செய்தபோதிலும், பின்னர் தேவன் அதை நன்மையாக மாற்றினார் (ஆதியாகமம் 50:20). சீமேயி தாவீதைச் சபித்த சந்தர்ப்பத்தில் கர்த்தர் தனக்கு நிந்தனைக்குப் பதிலாக நன்மையைச் சரிக்கட்டுவார் என்று தாவீது கூறினான் (2 சாமுவேல் 16:12). எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும் ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது ஆசிர்வாதமாக மாறுகிறது (எபிரேயர் 12:11). ஆகையால் நம்முடைய தேவன் ஒருபோதும் நமக்குத் தீங்கு செய்யமாட்டார் என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்வோம். ஐந்தாவதாக, தேவன் நம்மை ஒரு சோதனையின் வழியே நடத்தும்போது, ​​உண்மையுள்ள தேவன் அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும்படியான போக்கையும் அல்லது அதிலிருந்து விடுதலையளிக்கும் வழியையும் உண்டாக்குவார் (1 கொரிந்தியர் 10:13). நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு தேவனாலுண்டு என்பதை அறிந்து, உறுதியான சிந்தையுடன் தேவனில் நம்பிக்கை வைக்க வேண்டும். உண்மையாகவே, நமது பிரச்சனைகளின்போதுதான் நமது தேவன் நமக்கு அரணாகிறார் .

மனதில் கலக்கமில்லாமல் இளைப்பாறுதல் உள்ளவர்களாக, உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதை உடையவர்களாக நாம் தேவனில் நம்பிக்கை வைப்பவர்களாகும்போது அது நமது பெலனாகிறது (ஏசாயா 30:15). எப்படியென்றால் நாம் இந்த விதத்தில் நம் தேவனை நம்பும்போது, ​​தம்மை நம்புகிறவர்களை தேவன் அறிந்திருக்கிறார் என்பதே நமக்கு பெலனாக இருக்கிறது (நாகூம் 1:7). அதாவது நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே நமக்கு இன்னது தேவை என்று தேவன் அறிந்திருக்கிறார் (மத்தேயு 6:8). தேவன் நமது பரம பிதாவானபடியால் தமது பிள்ளைகளின் தேவைகளையெல்லாம் அவர் அறிகிறார் (மத்தேயு 6:32). மட்டுமல்ல நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்கிற வல்லமையின் படியே தேவனுக்கு முடியும் (எபேசியர் 3:20). தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி தேவன் நம்மை நோக்கிக் கொண்டிருக்கிறார் (2 நாளாகமம் 16:9). வல்லமையுடைய தேவன் நமக்கு வேண்டி மகிமையானவைகளைச் செய்வார் (லூக்கா 1:49). ஆகையால் நம்முடைய ஜெபங்களைக் கேட்கும் தேவன், நம்முடைய சிறையிருப்பை மாற்றி இரட்டிப்பாக நமக்கும் உதவி செய்வார்  (யோபு 42:10). அப்படியாக நமக்கு உண்டான இக்கட்டுகளை எல்லாம் நாம் மறக்குகிறவர்களாக மாறுவோம் (யோபு 11:16). கர்த்தராகிய தேவன் நமக்குத் துணைபுரிந்து, நாம் பரிபூரண சமாதானம் உடையவர்களாகும்படி செய்வாராக.