கிறிஸ்துவின் கற்புள்ள கன்னிகை (2 கொரிந்தியர் 11:2-3)

தேவனுக்கு மகிமை!!!

கிறிஸ்துவின் கற்புள்ள கன்னிகை

"
நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங் கொண்டிருக்கிறேன். ஆகிலும் சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல உங்கள் மனதும் கிறிஸ்துவை பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.   2 கொரிந்தியர் 11:2-3

கிறிஸ்தவ வாழ்வின் மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்று, நமது பிரியமான கிறிஸ்துவுக்கு நாம் விவாக நிச்சயிக்கப் பட்டிருக்கிறோம் என்பதே. கிறிஸ்துவுடன் இணைக்கபட வேண்டும் என்ற விருப்பத்துடன் நாம் ஞானஸ்நானம் பெறும்போது, ​​நாம் கிறிஸ்துவுக்கு நம்மை அர்ப்பணிப்பவர்களாக மாறுகிறோம் (கலாத்தியர் 3:27). ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு தேவன் பரிசுத்த ஆவியின் வரத்தை அளிக்கிறார் (அப்போஸ்தலர் 2:38). ஆகையால், நாம் தேவனால் முத்திரையிடப்பட்டு, ஆவியின் அச்சாரத்தை நம் இருதயங்களில் பெறுகிறோம் (2 கொரிந்தியர் 1:21-22). கர்த்தருடைய வருகையில் மீட்கப்பட்டவராக பூரண மகிமையுள்ளவர்களாக மாறுவதற்கு நமது சுதந்தரத்தின் அச்சாரமான வாக்குத்தத்தத்தின் பரிசுத்த ஆவியினால் நாம் முத்திரையிடப்படுகிறோம் (எபேசியர் 1:14). இவ்வாறு, நாம் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட நிச்சயிக்கப்பட்டிருக்கிறோம். ஆகையால், நம் கர்த்தர் சுத்தமுள்ளவராய் இருக்கிறது போல நாமும் சுத்திகரித்து கிறிஸ்துவை பற்றிய மனதின் உண்மையுடன் நாம் வாழ வேண்டும் (1 யோவான் 3:2-3). சாத்தான் நம்மை வஞ்சித்து மனதும் கிறிஸ்துவை பற்றிய உண்மையினின்று விலகும்படி கெட்டுப்போக கூடாது.

நவீன உலகின்படி, திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட ஒரு கன்னிகை திருமணத்தின் மூலம் அந்த நபரின் மனைவியாகிறாள். இருப்பினும், யூத திருமண வழக்கங்கள் மற்றும் தேவனுடைய வார்த்தையில் உள்ள குறிப்புகளின்படி நாம் கவனிக்கும் போது திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட ஒரு கன்னிகை அவருடைய மனைவி என்று அறியப்படுகிறாள். இயேசுவின் தாயான மரியாள், யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடிவருமுன்னே கர்ப்பவதியாயிருந்தாள். அதனால், யோசேப்பு அவளை இரகசியமாக விவாகரத்துசெய்ய முடிவு செய்தார். அப்பொழுது கர்த்தருடைய தூதன், உன் மனைவியாகிய மரியாளை ஏற்றுக்கொள்ள ஐயப்பட வேண்டாம் என்று யோசேப்பிடம் கூறினார் (மத்தேயு 1:18-20). யோசேப்பு தன் குடிமதிப்பெழுத்தப்படும்படிக்குச் சென்றபோது, ​​தனக்கு திருமண நிச்சயிக்கப்பட்டிருந்த தன் மனைவியாகிய மரியாளுடன் பெத்லகேமுக்குச் சென்றார் (லூக்கா 2:4). இங்கே திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட மரியா, யோசேப்பின் மனைவி என்று சொல்லப்படுவது போலவே, கிறிஸ்துவுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் நாமும் நம் கர்த்தரின் மனைவியாகக் காணப்படுகிறோம். திருச்சபையின் அனுபவத்திலும் நாம் கிறிஸ்துவின் மனைவி என்ற நிலையை நமக்கு நினைவூட்டப்படுகிறது. கிறிஸ்து, தம்முடைய மனைவியாகிய திருச்சபையைப் போஷித்துக் காப்பாற்றி சபையுடன் இணைந்து இருக்கிறார். புருஷனும் மனைவியும் ஒன்றாயிருக்கிறது போல, சபையும் கிறிஸ்துவும் ஒன்றாயிருக்கிறார்கள் (எபேசியர் 5:22-32).

ஒரு புருஷன் தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்பதை நாம் காண்கிறோம் (எபேசியர் 5:31). அதைபோல, ஒருவன் கர்த்தருடன் இசைந்திருக்கும்போது, ​​அவர்கள் கணவன் மனைவி என்பவர்கள் போல் ஒன்றாகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரே சரீரம் என்று சொல்லப்படவில்லை, ஒரே ஆவி என்று சொல்லப்பட்டிருக்கிறது (1 கொரிந்தியர் 6:17). பூமிக்குரிய வாழ்க்கையில் கணவன் மனைவி ஒன்றாக இருப்பது போல ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் ஆவியினால் கர்த்தருடன் இணைந்திருக்கிறோம். நமது எழுதின்படியான வாழ்க்கையில், நாம் கணவன் மனைவியாக, தந்தை தாயாக, பிள்ளைகளாக, சகோதர சகோதரிகளாக எனப் பலவாறாக மற்றுள்ளவருடன் இணைந்திருக்கலாம். அது நமது பூமிக்குரிய வாழ்க்கை. ஆனால் நமது ஆவிக்குரிய வாழ்க்கையில், கிறிஸ்துவாகிய இயேசுவின் மனைவியாக நாம் இயேசுவுடன் இசைந்து ஒரே ஆவியாகிறோம். நாம் இயேசுவுடன் இந்த நிலையில் வாழும்போது, ​​நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான எல்லா உதவிகளையும் ஆசீர்வாதங்களையும் இயேசு நமக்கு அளித்து நம்மை போஷித்து காப்பாற்றுகிறார் (எபேசியர் 5:29). இயேசு குற்றநிவாரண பலியாக ஒப்புக்கொடுக்கும்போது அவர் சந்ததியைக் காண்பார் என்று சொல்லப்படுவதுபோலவே, இயேசுவின் சந்ததி நமக்குள்ளே உருவாகும்பொருட்டு இது தேவைப்படுகிறது (ஏசாயா 53:10). சபையாகிய ஸ்திரீயில் நின்று ஜெயம் பெற்ற ஆண்பிள்ளை எடுத்துக்கொள்ளப்பட்டது (வெளிப்படுத்தல் 12:1-5) அதைப்போல நமது ஆவிக்குரிய வாழ்க்கையில், ஒரு உள்ளான மனுஷன் உருவாகி வளர்ச்சிப் பெற்று பலமடைகிறான் (எபேசியர் 3:16). நமது புறம்பான மனுஷனாகிய பூமிக்குரிய வாழ்க்கை அழிந்துபோகும்போது உள்ளான மனுஷனான ஆவிக்குரிய வாழ்க்கை நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது (2 கொரிந்தியர் 4:16). கிறிஸ்துவின் மூலமாக பக்திவிருத்தி உண்டாகி  நாம் திவ்யமான விதத்தில் வளர்ந்து, கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் வளருகிறோம். ஜெயிக்கிறவர்களாகிய நாம், நமது உள்ளான மனிதன் கர்த்தரின் வருகையின்போது எடுத்துக்கொள்ளப்படுகிறான்.

நமது ஆவிக்குரிய வாழ்க்கையில், கிறிஸ்துவை பற்றிய உண்மையினின்று விலகும்படி கெட்டுப் போகாமல் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். நமது எதிராளியாகிய பிசாசு எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான் (1 பேதுரு 5:8). சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல நாமும் வஞ்சிக்கப்படுவதற்குப் பல வாய்ப்புகள் உள்ளன (2 கொரிந்தியர் 11:3). கர்த்தருடன் ஒரே ஆவியாகும் அனுபவத்தைப் பற்றி நமக்குச் சொல்லப்பட்ட வேதபகுதியில், அதற்கு ஒப்பாக சொல்லப்பட வேண்டியது தன் மனைவியுடன் இசைந்திருப்பவன் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்பதே. ஆனால் இங்கே நாம் பார்ப்பது என்னவென்றால், வேசியுடன் இசைந்திருக்கும் காரியத்தை பற்றி சொன்ன பின்பு அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்பது தெளிவாகிறது (1 கொரிந்தியர் 6:16-17). இதன் ஆவிக்குரிய அனுபவத்தைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, ​​கிறிஸ்துவின் மனைவியாக நாம் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும். இது ஒருபோதும் பிரிக்கப்படக்கூடாத கணவன்-மனைவி உறவு (மத்தேயு 19:6). ஆனால் நமது ஆவிக்குரிய வாழ்க்கையில், நாம் அநேக விஷயங்களில் தவறுகிறோம் (யாக்கோபு 3:2). இத்தகைய தீயச்செயலில் இருப்பவர்கள் அந்தத் தீயச்செயலை விட்டுவிட முடியாமல் வேசியுடன் இசைந்து ஒரே சரீரமாகி ஒரு மாம்சமாக இருக்கிறது போல் நாம் காணப்பட்டால் நாம் கிறிஸ்துவிலிருந்து பிரிக்கப்படுவோம். வேசித்தனத்தின் காரணமாக நாம் நம் மனைவியை தள்ளிவிடலாம் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 19:9). நாம் கிறிஸ்துவை விட்டு நம்மைப் பிரித்துக் கொண்டால், நாம் சபிக்கப்பட்டவர்களாகுவோம் (ரோமர் 9:3). ஆனால், நாம் ஈடுபட்டிருக்கும் தீயச்செயல் ஒரு மனைவியுடன் அல்ல, ஒரு வேசியுடன் என்று கூறப்படுவதால், அது ஒரு தற்காலிக உறவு என்பதையும், அதிலிருந்து விரைவாகப் விட்டுவிடலாம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இஸ்ரவேல் மக்கள் தேவனை விட்டு விலகிய போதெல்லாம், அவர்கள் வேசித்தனக்காரர்கள் என்றும், விபச்சாரிகள் என்றும் தேவன் அவர்களைக் குறித்துக் கூறினார் (எரேமியா 3:8). தேவன் அவர்களை அவர்களுடைய நாயகனாகிய (கணவனாகிய) தேவனிடம் மீண்டும் கொண்டுவர விரும்புகிறார் என்பதையும் காணலாம் (எரேமியா 3:14). தேவன் தள்ளுதற்சீட்டை வெறுக்கிறார். எனவே, நாம் நம் தேவனுக்கு உண்மையற்றவர்களாக இருந்து, அவரை விட்டு விலகக்கூடாது. அப்போதுதான், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேவபக்தியுள்ள சந்ததி நமக்குள்ளே பிறக்கும் (மல்கியா 2:14-16). எனவே, நம் மனதும் கிறிஸ்துவை பற்றிய உண்மையினின்று விலகும்படி கெட்டுப் போகாமல்  நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வுலகின் அதிபதியான பிசாசு, தன் தந்திரத்தால் நம்மை வஞ்சிக்கிற மற்றொரு அனுபவத்தை நாம் காண்கிறோம். தேவனைவிட்டு விலகி, உலகத்தைப் பின்பற்றுகிறவன் விபசாரி என்று அழைக்கப்படுகிறான். உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்கு பகைஞனாகிறான் (யாக்கோபு 4:4). ஆகையால், நாம் உலகத்தை நேசிக்கிறவர்களாக மாறும்போது உலகத்திலுள்ளவையாய மாம்சத்தின் இச்சைகளும் கண்களின் இச்சைகளும், ஜீவனத்தின் பெருமையும் (1 யோவான் 2:15-16) நம்மை அடிமைப்படுத்தி, நாம் பிசாசின் வஞ்சகத்தில் விழுகிறோம். நம் மனதும் கிறிஸ்துவை பற்றிய உண்மையினின்று விலகி கெட்டுப் போகிறது. நமது நாயகனாகிய தேவனாகிய கர்த்தர் அல்லது நமது கர்த்தராகிய கிறிஸ்துவைத் தவிர வேறு எந்த தெய்வங்களையும் நாம் வைக்கக்கூடாது (எரேமியா 3:14). தேவனை சேவிக்காமல் மாமோனை அதாவது உலகப் பொருள்களுக்கு  ஊழியம் செய்யக்கூடாது (மத்தேயு 6:24). வயிற்றை தெய்வமாகக் கொண்டு வாழக்கூடாது (பிலிப்பியர் 3:19). அதனால், வாழ்வாதாரத்தைப் பற்றிய கவலைகளால் நாம் பாரமடைந்து கர்த்தருடைய வருகை கண்ணியாக மாறி நாம் கைவிடப்பட்டவர்கள் ஆகுவோம் (லூக்கா 21:34). சொந்த பலத்தை நமது தெய்வமாக ஆக்கிக்கொள்ளக்கூடாது (அபக்கூக் 1:11). தேவனை நம்புவதற்குப் பதிலாக, நமது சுயப் புத்தியை நம்பியிருக்கக்கூடாது (நீதிமொழிகள் 3:5). மாம்சமானதைத் தன் புயபலமாக்கி மனுஷனின் திறமையை தேவனாக்கி நம்பிக்கை வைத்தால் நாம் கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ளவர்களாக சபிக்கப்பட்டவராகுவோம் (எரேமியா 17:5). விக்கிரகாராதனையாகிய பொருளாசையும் (எபேசியர் 5:5) பேராசையும் (கொலோசெயர் 3:5) நமது தேவனிடமிருந்து விலகிப்போகும் அனுபவங்களாக மாறுகின்றன.

நம் மனதும் கிறிஸ்துவை பற்றிய உண்மையினின்று விலகி மற்ற காரியங்களைப் பின்தொடர்ந்தால், நாம் சீர்கெட்டுப் போவோம் (2 கொரிந்தியர் 11:3) என்று காண்கிறோம். சீகேம் தீனாளுடன் விபசாரம் செய்தபோதும் (ஆதியாகமம் 34:5), அம்னோன் தாமாருடன் உடலுறவு கொண்டபோதும் (2 சாமுவேல் 13:10 -12) அது சீர்கேடு என்று சொல்லப்படுகிறது. இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களைச் செய்தபோது அவர்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக்கொண்டார்கள் என்று தேவன் அவர்களைக் குறித்துச் சொல்கிறார் (உபாகமம் 9:12). சுருக்கமாக, நமது பிரியமான கர்த்தரை நாம் எந்த விதத்தில் விட்டு விலகினாலும், நாம் நம்மையே கெடுத்துக்கொண்டு, சீர்கெட்டவர்களில் ஒருவராக ஆகிறோம். நாம் தேவனுடைய கற்பனைகளையும், நியாயங்களையும், கட்டளைகளையும் கைக்கொள்ளாதிருப்பது தேவனுக்கு விரோதமான சீர்கேடே ஆகும் (நெகேமியா 1:7). நாம் கசப்பான பிச்சியிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டு இருக்கும்போது நாம் சீர்கெட்டவர்களாக இருக்கிறோம். ஆகையால், நமது எல்லா தீமைகளுக்காகவும் மனந்திரும்பி தேவனிடம் ஜெபிக்க வேண்டும், அப்பொழுது தேவன் நம்மை மன்னிப்பார் (அப்போஸ்தலர் 8:22-23).

நமது கிறிஸ்தவ வாழ்வில், நாம் கிறிஸ்துவின் கற்புள்ள கன்னிகையாகக் காணப்பட வேண்டும். மற்றொரு விதத்தில், நமது தேவன் சுத்தமுள்ளவராய் இருப்பது போல நாமும் சுத்தமுள்ளவராகக் காணப்பட வேண்டும். அதற்காக, நாம் நம்மை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும் (1 யோவான் 3:3). சுத்திகரிக்கப்படுவதற்கு நாம் முதலில் கழுவப்பட்டு சுத்தமாக்கப்பட வேண்டும் (சங்கீதம் 51:7). நாம் நமது பாவங்களை அறிக்கையிடும்போது, ​​தேவன் நமது பாவங்களை மன்னித்து, தம்முடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தத்தால் நம்மைக் கழுவி, எல்லா அசுத்தங்களிலிருந்தும் நம்மைத் சுத்திகரிப்பார் (1 யோவான் 1:7,9). தேவன் நமது  அக்கிரமங்களையெல்லாம் நீக்கி நம்மைத் சுத்திகரிக்கிறார் (எசேக்கியேல் 36:33). இரண்டாவதாக, நாம் சுத்திகரிக்கப்பட்டு வெண்மையாக்கப்பட வேண்டும் (தானியேல் 11:35, 12:10).வண்ணாருடைய சவுக்காரத்தைப்போல தேவன் நம்மை கழுவி சுத்திகரித்ததின் பின்னர்  வெள்ளியைப் புடமிடுகிறதுப் போல உட்கார்ந்து நம்மை சுத்திகரித்து பொன்னைப் போலவும் வெள்ளியைப் போலவும் புடமிடுவார் (மல்கியா 3:2-3). மண்குகையில் ஏழு தரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான வெண்மையாக சுத்தம் செய்யப்படுகிறது (சங்கீதம் 12:6). மூன்றாவதாக, நாம் சுத்திகரிக்கபடுவதற்கு பயபக்தியோடு கூடிய கற்புள்ள நடக்கை உண்டாகி (1 பேதுரு 3:1) மேலும் வழிகளின் உத்தமம் நமது நம்பிக்கையாக இருக்க வேண்டும் (யோபு 4:6). நமது நடக்கையை சுத்தஞ்செய்வது வசனத்தின் படி காத்துக்கொள்ளுகிறதினால் தான் (சங்கீதம் 119:9). தேவனுடைய வார்த்தையாகிய சத்தியத்தை (யோவான் 17:17) கீழ்ப்படிவதன் மூலம் நாம் நமது ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொள்ளுகிறோம் (1 பேதுரு 1:22) பின்னர் நாம் நம்மை சுத்தவனாகக் காத்துக்கொள்ள வேண்டும் (1 தீமோத்தேயு 5:22). விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆவியிலும் பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, கர்த்தருக்குரியவைகளுக்காக  கவலைப்படுகிறாள் (1 கொரிந்தியர் 7:34). அல்லது கற்புள்ளவைகள் எல்லாவற்றையும் குறித்துச் சிந்தித்து (பிலிப்பியர் 4:8) சுத்த மனசாட்சியுடன் தேவனை ஆராதிக்க வேண்டும் (2 தீமோத்தேயு 1:4). பானுவேலின் மகளான அன்னாளைப் போல தேவாலயத்தை விட்டு நீங்காமல் இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி ஆராதித்து தேவனுடன் சேர்ந்து வாழ்கிறோம் (லூக்கா 2:37). அப்படியாக நாம் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களாக காக்கப்பட வேண்டும் (பிலிப்பியர் 1:11). இவ்வாறு நமது மனதும் கிறிஸ்துவை பற்றிய உண்மையிலும் காத்துக்கொண்டு கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு முன்பாக நிறுத்தப்படுவதற்கு நாம் எல்லோருக்கும் தேவனாகிய கர்த்தர் உதவி செய்வாராக.