ஒளியாகப் பிரகாசிக்க (சங்கீதம் 34:5)

தேவனுக்கு மகிமை!

ஒளியாகப் பிரகாசிக்க

"
அவர்கள் அவரை நோக்கிப்பார்த்து பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை."         சங்கீதம் 34:5

தேவனுடைய பிள்ளைகளான நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்னர் நமது வாழ்க்கையில் நாம் இருளாயிருந்தோம் என்று வேதாகமம் கூறுகிறது. ஆனால் இப்பொழுதோ நாம் ஒளியாயிருக்கிறோம் (எபேசியர் 5:8). நாம் எப்படி ஒளியானோம் என்பது நமக்குத் தெரியும். அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்த நாம் (எபேசியர் 2:1) மரண இருளின் திசையிலும் நிழலிலும் அமர்ந்திருந்தபோது, ​​ஒரு பெரிய வெளிச்சம் உதித்தது (மத்தேயு 4:14-15). எந்த மனுஷனையும் பிரகாசிபிக்கிற மெய்யான ஒளியாகிய இயேசுவே அந்த ஒளி (யோவான் 1:9). மறுபுறம், நாம் பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலும் இருந்தபோது (சங்கீதம் 40:2) நமது ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும் ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிபிக்கிறதற்கும் தேவன் இயேசுவை உலகத்திற்கு அனுப்பினார் (யோபு 33:29). "நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன் மேல் பிரகாசிக்கபண்ணி உமது கிருபையினாலே என்னை இரட்சியும். உம்மை நோக்கி கூப்பிடுவதால் நான் வெட்கப்பட்டு போகாதபடி செய்யும்" என்று இயேசுவைப் பார்த்து ஜெபிக்க முடிகிறது (சங்கீதம் 31:16,17). அப்படி நாம் இயேசுவை நோக்கி ஜெபித்து இயேசுவே கர்த்தர் என்று நம் இருதயங்களில் விசுவாசித்து, நம் வாயினால் அறிக்கையிடும்போது, ​​நாம் இரட்சிக்கப்படுகிறோம் (ரோமர் 10:9). அதனால் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி நமது ஆத்துமாவை மரணத்தினின்று தப்புவிக்கிறார் (சங்கீதம் 56:13). நம்முடைய பிராணன் வெளிச்சத்தைக் கண்டு களிகூரும்படி, அவர் நம் ஆத்துமாவைப் படுகுழியிலிருந்து மீட்டு (யோபு 33:28) மேலும், கிறிஸ்துவாகிய கன்மலையின்மேல் நம் அடிகளை நிறுத்தி உறுதிப்படுத்துகிறார் (சங்கீதம் 40:2). அந்தகாரத்தினின்று ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைக்கப்பட்டவராகிய நாம் (1 பேதுரு 2:9) வெட்கபட்டுப்போகாமல் இயேசுவைப் பின்பற்றுவதினால் ஜீவஒளியை அடைக்கிறோம் (யோவான் 8:12).

இயேசுவின் முகத்தைப் பார்த்து பிரகாசமடைந்த நமது வாழ்க்கையில் மேலும் ​​ஞானம் நமது முகங்களில் பிரகாசிக்கிறது (பிரசங்கி 8:1). எப்படியென்றால்  நாம் அனுதினமும் வேதவாக்கியங்களை ஆராயும்போது, ​​நமது ஞானம் பெருகுகிறது (தானியேல் 12:4). இவ்வாறு, தேவனிடமிருந்து நமக்கு ஞானமான இயேசுவைப் பற்றிய (1 கொரிந்தியர் 1:31) மூல உபதேச வசனங்களை விட்டு நாம் பூரணராக முடியும் (எபிரேயர் 6:2). நாம் புத்தியும் விசேஷத்த ஞானமும் உள்ளவர்களாகும் போது பிரகாசமும் உடையவரகளாக காணப்படுகிறோம் (தானியேல் 5:14). மேலும், தேவனை பற்றியும், இயேசுவைப் பற்றியும் நமது தெளிவான அறிவு, இயேசுவைப் போலவே தேவனுக்கு முன்பாக தேவபயத்தில் வாழ நமக்கு உதவுகிறது (எபிரேயர் 5:7). இந்த தேவபயத்துடன் கூடிய நமது வாழ்க்கை சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தின் பிரகாசத்திற்கு ஒப்பாகிறது (2 சாமுவேல் 23:3-4).

நாம் ஜீவ ஒளியாகுவதற்கு இயேசுவைப் பின்பற்றும் நமது வாழ்க்கையில் (யோவான் 8:12) இயேசு நமக்கு நித்தியஜீவ வசனங்களை ஏராளமாகத் தருகிறார் (யோவான் 6:68). இந்த ஜீவ வசனத்தை பிடித்துக்கொண்டு உலகத்திலே சுடர்களைப்போல பிரகாசிக்க முடியும் (பிலிப்பியர் 2:14). மட்டுமல்ல நாம் தேவனுடைய செய்கையாக நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் (எபேசியர் 2:10). நம்மை சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டது தமக்குரிய சொந்த ஜனங்களாகவும் நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்களாகவும் வாழ்வதற்கே (தீத்து 2:14). அதற்காக தேவ ஆவியினால் அருளப்பட்ட வேத வாக்கியங்களால் தேவனுடைய மனுஷராகிய நாம் எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியை பெறுகிறோம் (2 தீமோத்தேயு 3:16). இவ்விதமாய் நாம் செய்கிற எல்லா நற்கிரியைகளை மனுஷர் கண்டு பிதாவை மகிமைப்படுத்தும்படி அது நமது வெளிச்சமாக அவர்கள் முன்பாக பிரகாசிக்கப்படுகிறது (மத்தேயு 5:16). மேலும் இயேசுவினுடைய வார்த்தைகளைக் கேட்டு செய்கிறவன் எவனோ அவன் புத்தியுள்ள மனுஷன் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 7:24). இத்தகைய ஞானமுடைய வாழ்க்கை நம்மை ஆகாயமண்டலத்தின் ஒளியைப் போல என்றென்றைக்கும் நித்தியத்தில் பிரகாசிக்கிறவர்களாக ஆக்குவார் (தானியேல் 12:3).

நமது கிறிஸ்தவ வாழ்வில், ஒவ்வொரு நாளும் தேவன் தமது ஆலோசனையினால் நடத்துவதால் முடிவிலே நாம் மகிமையில் ஏற்றுக் கொள்ளப்படுவோம் (சங்கீதம் 73:24). ஆகையால் தேவன் ஒவ்வொரு நாளும் நம் மீது கண்ணை வைத்து ஆலோசனை சொல்லித்தர வேண்டியதாயிருக்கிறது  (சங்கீதம் 32:8). இதற்காக, நாம் பிள்ளையாண்டான் சாமுவேலைப் போல “கர்த்தாவே, சொல்லும் அடியேன் கேட்கிறேன்” என்று சொல்லி ஜெபிப்பவர்களாக வேண்டும் (1 சாமுவேல் 3:9-10). தேவன் நம்மிடம் பேசுவதை நாம் கேட்கும்போது நமது முகங்களும் மோசேயைப் போல பிரகாசிக்கும் (யாத்திராகமம் 34:30). தொடர்ந்து நமது வாழ்வில், நாம் தேவனுடைய ஆலோசனைக் கேட்டு ஞானஸ்நானம் பெற்றதில் துடங்கி (லூக்கா 7:30) நமக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு மனப்பூர்வமாய் கீழ்ப்படிந்து நீதிக்கு அடிமைகளாக மாறுகிறோம் (ரோமர் 6:17-18). இவ்விதமாக, நாம் எல்லா நீதியையும் நிறைவேற்றி நீதிமான்களாக மாறுகிறோம் (மத்தேயு 3:15). அத்தகைய நீதிமான்களின் வெளிச்சம் அவர்களுடைய முகத்தின் ஒளியாகப் பிரகாசிக்கிறது (நீதிமொழிகள் 13:9). மேலும், அந்நாளில் நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்தில் சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள் (மத்தேயு 13:43).

நாம் உலகத்துக்கு வெளிச்சமாய் இருக்கிறோம் என்று இயேசு நம்மைக் குறித்துக் கூறுகிறார் (மத்தேயு 5:14). இந்த நாட்களில்  நமது ஒளி வந்ததினால் நாம் எழுந்து பிரகாசிக்க வேண்டும்  (ஏசாயா 60:1). இதற்காக, நாம் நித்திரையிலிருந்து விழித்து, ஆவிக்குரிய சோர்வைக் களைவோமாக. மட்டுமல்ல மரித்தோரை விட்டு எழுந்து வாழ்க்கையின் சீர்கேடான நிலைமைகளை விட்டு விடுவோம் (எபேசியர் 5:14). அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருந்து ஆவியில் அனலுள்ளவர்களாக கர்த்தருக்கு ஊழியஞ் செய்வதின் மூலம் நாம் இதைச் செய்ய முடியும் (ரோமர் 12:11). இதற்காக நாம் இரண்டு வழிகளில் கர்த்தருக்கு வேண்டி கிரியைச் செய்ய முடியும். முதலாவதாக, தேவனுடைய இரட்சிப்பு பூமியின் கடைசிபரியந்தமும் சென்றடைவதற்காக, தேவன் நம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்திருக்கிறார் என்பதை நாம் காண்கிறோம் (ஏசாயா 49:6). அப்போஸ்தலர்கள் ஜாதிகளுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கத் தொடங்கும்போது இந்தக் கருத்தை வலியுறுத்துகிறார்கள் (அப்போஸ்தலர் 13:46-47). பூமியின் கடைசி பரியந்தமும் எனக்கு சாட்சிகள் ஆகுவீர்கள் என்று இயேசுவும் நம்மிடம் வேண்டிக்கொள்ளுகிறார் (அப்போஸ்தலர் 1:8). இவ்வாறு இயேசுவைப் பிரசங்கித்து, அநேகரை நீதிக்குத் திருப்புகிறவர்கள் என்றென்றைக்கும் நட்சத்திரங்களைப்போலப் பிரகாசிப்பார்கள் (தானியேல் 12:3).

இரண்டாவதாக, இயேசுவின் மிகச் சிறியவர்களுக்கு உதவுகிற காரியத்தை இயேசுவே நமக்கு நினைவூட்டுகிறார் (மத்தேயு 25:40). தேவனுக்கு உகந்த உபவாசம் என்பது சகல நுகத்தடிகளை உடைத்துப்போட்டு அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்த்து நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கி விடுகிறதே. பசி உள்ளவனுக்கு ஆகாரத்தை பகிர்ந்து கொடுக்கிறதும் துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக் கொள்ளுகிறதும் வஸ்திரம் இல்லாதவனுக்கு வஸ்திரம் கொடுக்கிறதும் நமது மாம்சமானவனுக்கு நம்மை ஒளிக்காமல் இருக்கிறதே தேவனுக்கு பிரியமானது. அப்படி செய்தால் விடியற்கால வெளுப்பைப்போல நமது வெளிச்சம் எழும்புகிறது (ஏசாயா 58:6-8). மகிமையுள்ள சிங்காசனத்தின் வலது பக்கத்தில் நிற்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொண்டார்கள், ஏனென்றால் அவர்கள் இயேசுவின் சகோதரர்களில் மிகச் சிறியவர்களுக்காக இவைகளைச் செய்தார்கள் (மத்தேயு 25:34-40). அதைபோல, நாமும் பசியுள்ளவன் இடத்தில் ஆத்துமாவை சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவை திருப்தியாக்கினால் அப்பொழுது நமது வெளிச்சம் இருளில் உதிக்கும் (ஏசாயா 58:10).

இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்க வேண்டும் என்று சொன்ன தேவன் முன்பு இருளாக இருந்த நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரை நோக்கிப் பார்த்து வெளிச்சமாக மாற  செய்கிறார். மேலும் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தேவமகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றபண்ணும் பொருட்டாக நமது இருதயங்களிலே தேவன் பிரகாசிக்கிறார் (2 கொரிந்தியர் 4:6). மறுரூப மலையில் சீடர்களுக்கு முன்பாக மறுரூபமானபோது இயேசுவின் முகம் சூரியனைப்போல பிரகாசித்தது அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று (மத்தேயு 17:2). இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும் பொருட்டாக நாம் அழைக்கப்பட்டதால் அந்த மகிமை பெற்றுக்கொள்ள நம்மை தேவன் உதவுகிறார் (2 தேசலோனிக்கேயர் 2:14). அதற்காக தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி நமது மனதில் பிரகாசிக்க செய்வார் (2 கொரிந்தியர் 4:4). இவ்வாறாக இயேசு கிறிஸ்துவின் முகத்தில் உள்ள தேவ மகிமையின் அறிவாகிய ஒளியை பெற்றவர்களான நம்மை தேவன் சத்தியத்தின் ஆவியால் இந்த தெய்வீகமான சத்தியத்திற்குள் வழிநடத்துகிறார் (யோவான் 16:13). அப்படி நாம் எல்லாவரும் திறந்த முகமாய் கர்த்தருடைய மகிமையை கண்ணாடியில் காண்கிறதுபோல கண்டு நாம் எல்லோரும் ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்த சாயலாகதானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம் (2 கொரிந்தியர் 3:18). ஆகையால் கர்த்தரை நோக்கி பிரகாசிக்கிற நாம் கர்த்தர் வெளிப்படும்ப்போது அவர் முன்பாக நமது முகம் வெட்கப்பட்டு போகாமல் (1 யோவான் 2:28) தைரியமுள்ளவர்களாக இருந்து இயேசுவுக்கு ஒப்பானவர்களாக நித்தியத்தில் சேர்க்கப்படுவார்கள் (1 யோவான் 3:2). அன்று நாம் நமது கர்த்தரைப்போல மாறி  நம்முடைய முகம் சூரியனைப்போல பிரகாசித்து நமது வஸ்திரம் வெளிச்சம்போல வெண்மையாகி  பிரகாசிப்பவர்களாகுவார்கள் (மத்தேயு 17:2). தேவனாகிய கர்த்தர் இந்த சிறந்த மகிமையைப் பெற்றுக்கொள்ள உதவி செய்து ஆயத்தப்படுத்துவராக.