நண்பனுக்கு வேண்டி மூன்று அப்பங்கள் (எபேசியர் 3:20)
தேவனுக்கு மகிமை
நண்பனுக்கு வேண்டி மூன்று அப்பங்கள்
"நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு" - எபேசியர் 3:20
நமது தேவன் நமக்காக வேண்டி கிரியை செய்வதற்கு வல்லமையுள்ள தேவன். அதற்கு வேண்டி அவருடைய வல்லமை நமக்குள் செயல்படுகிறது. ஆதலால் தேவன் நமக்காகச் செய்யும் காரியங்கள் நாம் கேட்பதற்கும் நினைப்பதற்கும் மிகவும் அதிகம் என்று இந்த தேவ வசனம் நமக்கு நினைவூட்டுகிறது. ஆதலால், இதை நாம் அனுபவிக்க சில விஷயங்களுக்கு கவனம் செலுத்த வேண்டும். ஒன்றை மட்டும் கேட்டு, அதையே நாடவேண்டும் என்றதான பழக்கம் நம்மக்குள் வர வேண்டும் (சங்கீதம் 27:4). கர்த்தர் இதைப் பற்றிப் பேசும்போது, அநேக காரியங்களை குறித்து கவலைப்பட்டு கலங்குவதை விட தேவையானது ஒன்று அது மட்டும் போதும் என்று கூறுகிறார் (லூக்கா 10:41–42). சாலொமோன் ராஜாவும் தனது வாழ்க்கையில் தேவன் அவரை வைத்த பதவிக்கு ஏற்ற ஒரு காரியத்தை மட்டும் கேட்டபடியால் ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. அது மட்டுமல்ல அவர் கேட்டதை விட அதிகமான பலவற்றையும் தேவன் அவருக்கு வழங்கினார் (1 இராஜாக்கள் 3:10–13). நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் சிந்தித்து ஆசைப்பட வேண்டியதும் ஜெபித்து பெற்றுக்கொள்ள வேண்டியதுமான ஒரே காரியம் பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கி பொறுமையோடு ஓடி அதைப் பெற்றுக் கொள்வோம் என்பதே. ஆகையால், நாமும் தேவ சமூகத்தில் தேவனுடைய பரம அழைப்பின் பந்தயப் பொருளின் மீது மட்டும் ஆசை வைத்து ஜெபிப்போம் (பிலிப்பியர் 3:14-15). இயேசுவின் இரண்டாம் வருகையில் அவர் இருக்கிற இடத்திலே நாமும் இருப்பதற்காக நம்மை அவரிடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் (யோவான் 14:2-3). இது மட்டுமே நமது ஜெப விண்ணப்பமாக இருக்கட்டும். இந்த ஒரு விருப்பத்துடன் நாம் தேவனிடம் கூக்குரலிட்டால், நிச்சயமாக தேவன் நமக்கு அந்த நித்திய இரட்சிப்பைத் தருவார் ( சங்கீதம் 145:19 ).
இதுவே தாவீதின் வேண்டுதலும் விருப்பமும் ஆகும். கர்த்தருடைய மகிமையைப் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அவருடைய ஆலயத்தில் ஜீவனுள்ள நாளெல்லாம் தங்கி இருப்பதே (சங்கீதம் 27:4). இந்த ஒரு விஷயத்தை நாம் கவனிக்கும்போது, தாவீது அதை தனது ஜெபத்தில் மூன்று வகையில் அதைப் பிரித்து ஜெபிப்பதாக நாம் காண்கிறோம். மகிமையைப் பார்க்க வேண்டும், ஆலயத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டும், ஆலயத்தில் தங்கி இருக்க வேண்டும். இந்த விஷயங்களை நாம் ஆவிக்குரிய நிலையில் மற்றொரு வழியாக சிந்தித்தால் தன் நண்பனுக்காக அப்பம் என்ற ஒரு காரியத்தைக் கேட்கச் சென்ற போது, மூன்று அப்பங்களைக் கேட்டதைப் போல, ஒரு காரியத்தின் மூன்று அனுபவங்களாக நாம் சிந்திக்க முடியும் (லூக்கா 11:5–8). அப்பம் என்ற ஒரு காரியம் மட்டுமே கேட்கிறான் ஆனால் அது மூன்று தேவை என்று கூறுகிறான்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நண்பர்களை குறித்து நாம் சிந்திக்கும் போது தேவனும் நாமும் நமது சரீரமும் என்ற மூன்று நபர்களை காணலாம். தேவன் ஆபிரகாமை தனது சிநேகிதன் என்று அழைக்கிறார் (ஏசாயா 41:8). இயேசுவும் நம்மை சிநேகிதர்கள் என்று கூறுகிறார். இயேசுவும் தன் பிதாவினிடத்தில் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் நமக்கு அறிவித்தபடியால் இயேசுவும் தேவனும் நம்முடைய சிநேகிதர்கள் என்று சொல்ல முடியும் (யோவான் 15:15). மேலும் நம் சரீரத்தைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, மனுஷனுக்கு ஏற்றத் துணையை உண்டாக்கி கொடுத்த தேவன் மனுஷியை மனுஷனிடத்தில் கொண்டு வந்த போது புருஷன் மனைவியோடு இசைந்திருந்து ஒரே மாம்சமாக ஒன்றாக்கப்படுகிறார்கள் (ஆதியாகமம் 2:18, 22-24 ). புருஷன் ஸ்திரிக்கு தலையாகவும் ஸ்த்ரீ புருஷனுடைய சரீரமாகவும் ஒன்றாகக் காணப்பட வேண்டும் (1 கொரிந்தியர் 11:3). எனவே, இந்த பூமியில் நாம் என்ற புருஷனுக்கு ஏற்ற துணையாக குடியிருக்க தேவன் நல்கிய நண்பன் நமது சரீரம். ஸ்த்ரீ புருஷனுடைய மகிமை என்று கூறப்படும்போது (1 கொரிந்தியர் 11:7) தேவன் தம்முடைய வல்லமையான செயலின்படி இந்த சரீரத்தை தான் மகிமையான சரீரமாக மறுரூபப்படுத்துகிறார் (பிலிப்பியர் 3:21). இருப்பினும், தெய்வீக ஒழுங்கின்படி, நாம் தலையாகவும், சரீரம் கீழாக காணப்பட்டு சரீரம் நமக்குக் கீழ்ப்படிந்து இருந்தால் மட்டுமே சரீரம் நமக்கு நண்பனாக இருக்க முடியும். சரீரம் நமக்கு தலையாகவும் நாம் சரீரத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால் சரீரம் நமக்கு சத்துருவாகிறது. ஏனென்றால் நாம் மாம்சத்தின்படி பிழைத்தால் நாம் நித்தியமான மரணத்திற்கு அடிமைப்படுவோம் (ரோமர் 8:12-13 ).இப்படி சம்பவிக்காமல் இருப்பதற்கு நாம் நம் சரீரத்தை ஒடுக்கி கீழ்ப்படுத்த வேண்டும் (1கொரிந்தியர் 9:27). சரீரமாகிய சபை கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போல (எபேசியர் 5:24) நம் சரீரம் நமக்குக் கீழ்ப்படிந்து நம்முடன் சேர்ந்து வாழ்ந்தால், நிச்சயமாக அந்த சரீரம் ஏற்ற துணையாக நல்ல நண்பனாக இருக்கும். எனவே, நம் நண்பனாகிய சரீரத்திற்கு வேண்டி தேவனிடம் மூன்று அப்பம் கேட்டு வாங்க வேண்டியதாயிருக்கிறது.
ஒன்றாவதாக அப்பத்தைப் பற்றிநாம் சிந்திக்கும் போது இந்த உலகத்தில் நாம் சுகமாக வாழ்வதற்கு நமக்கு ஆரோக்கியமுள்ள ஒரு சரீரம் தேவை (3 யோவான் 1:2). இளமைப் பருவத்தில் இருந்த பெலன் போல இந்நாள் வரைக்கும் இருக்கிறது என்று காலேபினுடன் சேர்ந்து நாம் கூற வேண்டும் (யோசுவா 14:11). முதுமையிலும் நாம் இன்னும் கனி கொடுத்து புத்துணர்ச்சியுடனும் செழிப்புடனும் இருக்க வேண்டும் (மலையாளம் வேதாகமம்) (சங்கீதம் 92:13). பலவீனப்படுத்தும் வியாதியின் ஆவியினாலோ (லூக்கா 13:11) அல்லது தீய ஆவிகளாலோ நாம் வியாதிஸ்தராக பிணியாளியாகவும் மாறக்கூடாது (மத்தேயு 8:16). அத்தகைய மக்களை குணப்படுத்தும் அனுபவத்தைப் பற்றி இயேசு கூறும்போது, பிள்ளைகளின் அப்பம் என்று கூறுகிறார் (மத்தேயு 15:26). ஆதலால் தேவ மக்களாகிய நாம் தேவனில் நின்று நமது சரீரத்திற்கு வேண்டி இந்த அப்பத்தை கேட்டு பெறவேண்டும். நாம் நமது தேவனாகிய கர்த்தரை மட்டுமே சேவித்து தேவன் நம்முடைய அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதித்து, வியாதியை நம் நடுவிலிருந்து நீக்குவார் (யாத்திராகமம் 23:25). ஆனபடியால் நாம் ஆரோக்கியமுள்ள ஒரு சரீரத்துடன் சுகமாக வாழ்வோம். முதல் அப்பமாகிய பிள்ளைகளின் அப்பம் என்ற சௌக்கியமும் ஆரோக்கியமும் தேவனில் நின்று பெற்று பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் அதிகமாக அனுபவித்து வாழ வேண்டும் (எரேமியா 33:6).
இரண்டாம் அப்பத்தைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, நம் ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் அவரவர் கிரியைகளுக்கு ஏற்ற பலன் கொடுக்க விரைவாக வருகிறார் (வெளிப்படுத்துதல் 22:12). எனவே, நமது ஆரோக்கியமான சரீரத்துடன் நாம் பலனுக்குத் தகுதியான நற்செயல்களைச் செய்ய வேண்டும். நமது வாழ்வாதாரத்திற்காக நாம் கடினமாக உழைத்தாலும் அது வீண் என்று வேதவாக்கியம் கூறுகிறது (சங்கீதம் 127:3). எனவே, கர்த்தருக்குள் நாம் படுகிற பிரயாசம் விருதாவாயிராது என்று அறிந்து கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெறுகிறவர்களாய் இருப்போம் (1கொரிந்தியர் 15:58). இந்த நிலையில் கர்த்தரைச் சேவிப்பதன் மூலம் நாம் சுதந்தரத்தின் பலனைப் பெறுவோம் (கொலோசெயர் 3:24). கர்த்தருக்குள் அதிகமாக பிரயாசப்பட்டவர்கள் என்று சிலரைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது (ரோமர் 16:12).நாமும் மற்றவர்களை விட அதிகமாக பிரயாசப்பட கர்த்தருடைய கிருபை இருந்தால் மட்டுமே முடியும் (1 கொரிந்தியர் 15:10). காரணம் கிறிஸ்து இயேசுவிலுள்ள இந்த கிருபை நம்மைப் பலப்படுத்துகிறது (2 தீமோத்தேயு 2:1). அதாவது நம்மைப் பலப்படுத்தும் கிறிஸ்துவின் மூலம் நாம் எல்லாவற்றையும் செய்வதற்கு பெலன் உள்ளவர்களாவோம் (பிலிப்பியர் 4:13).ஆகையால், தேவன் இஸ்ரவேலுக்குக் கொடுத்த பரலோக தானியமான தூதர்களின் அப்பத்தை (வல்லவருடைய அப்பம் - மலையாளம் வேதாகமம்) நமக்கும் தர வேண்டும் (சங்கீதம் 78:24-25). நமது நண்பனாகிய சரீரத்திற்காக, நாம் இந்த இரண்டாவது அப்பமாகிய, வல்லமையுள்ளவரின் அப்பத்தை, தேவனிடமிருந்து பெற வேண்டும். இதற்காக நமது தேவனாகிய கர்த்தரின் மேல் நம்பிக்கை வைத்தால் தேவன் நம்மை பலப்படுத்தி நாம் தேவனில் நின்று பரிபூரண பலனை பெறுவதற்காக தேவனுக்கு பிரியமான கிரியைகளைச் செய்ய முடியும் (ரூத் 2:12).
மூன்றாவது அப்பத்தைப் பார்க்கும்போது, இயேசுவோடு இருக்க விரும்பும் நமது வாழ்க்கையில் நாம் ஜெயங்கொள்பவர்களாக இருக்க வேண்டும் (வெளிப்படுத்துதல் 3:21). இந்த சரீரத்தில் வாழும்போதுதானே நாம் உலகத்தையும், மாம்சத்தையும், பாவத்தையும் போராடி ஜெயிக்க வேண்டும். நாம் கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்பட்டு பிசாசின் தந்திரங்களோடும் அவனுடைய பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் தீங்கு நாளில் எதிர்த்து நிற்பதற்காக தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை எடுத்துக் கொள்பவர்களாக வேண்டும் (எபேசியர் 6:10–13). அப்படி நாம் நல்ல போராட்டத்தைப் போராடும் நமது வாழ்க்கையில் (2தீமோத்தேயு 4:7) ஜெயம் தேவனுக்கு உரியதானது ஆதலால் தேவன் நமக்கு ஜெயம் தர வேண்டும் (நீதிமொழிகள் 21:31). மீதியானியர்கள் மீது வெற்றியைத் தருவதாக தேவன் கிதியோனுக்கு வெளிப்படுத்தியபோது, அதை ஒரு வாற்கோதுமை அப்பம் மூலம் காட்டினார். இந்த வாற்கோதுமை அப்பம் வெற்றியின் அப்பமாய் தேவன் எதிரியை அவர்களின் கையில் ஒப்படைப்பதாக காட்டுகிறது (நியாயாதிபதிகள் 7:13–14). நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு வெற்றியைத் தரும் தேவன் நமக்கு இருப்பதால் (1 கொரிந்தியர் 15:57) நம் நண்பனான சரீரத்திற்காக இந்த ஜெயத்தின் அப்பத்தை நாம் தேவனிடம் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். அதனால் நாமும் ஜெயங்கொண்டவர்களாக, ஜெயம் பெற்ற இயேசுவுடன் (வெளிப்படுத்துதல் 3:21) தேவனுடைய சிங்காசனத்தின் வலது பக்கத்தில் வீற்றிருப்போம் (எபிரெயர் 12:2). இது கர்த்தர் நமக்காக ஆயத்தம் பண்ணுகிற ஸ்தலமும் (யோவான் 14:3) மேலும் இது ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டிக்கு, ராஜஸ்த்ரீக்கு உள்ள நிலையும் (சங்கீதம் 45:9). ஆனப்படியல், இதை மட்டுமே விரும்பி நாம் ஜெபிப்போம்.
இனியும், நாம் அப்பத்தைப் பெறுவதன் அனுபவத்தைப் புரிந்துகொள்ளும்போது, நாம் தேவனின் நண்பர்கள் என்று சொன்னாலும் அல்லது வேறு தகுதிகளைக் கூறினாலும், அப்பம் கொடுக்கப்படாது, மாறாக, விடாமுயற்சியுடன், வருந்திக் கேட்பவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்படுகிறது (லூக்கா 11:8). நாம் அப்பத்தைக் கேட்கும்போது கல்லைக் கொடுக்காத பிதாவானாலும், தம்மிடம் கேட்பவர்களுக்காக அவர் மிகுதியாக, வேண்டுமட்டும் கொடுக்கிறார் (மத்தேயு 7:9–11). ஆகையால், இயேசுவைப் போல பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் செலுத்தினால் (எபிரெயர் 5:7) நாம் கேட்பதற்கும் நினைப்பதற்கும் அதிகமாக தேவன் நமக்கு செய்வார் (எபேசியர் 3:20). அவர் நம் அற்பமான சரீரத்தை அவருடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்தி (பிலிப்பியர் 3:21) நம் சரீரத்தின் மீட்பாகிய புத்திர சுவிகாரம் பெற முடியும். அதற்காக காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறவர்களாவோம் (ரோமர் 8:23 ). நாம் எப்போதும் விழித்திருந்து ஜெபிப்போம். நம் தேவனாகிய கர்த்தர் அவ்வாறு செய்ய நமக்கு உதவுவாராக.