பரலோகத்திற்குரியவர்களின் பரலோக அனுபவங்கள் (யோவான் 17:16)
தேவனுக்கு மகிமை
பரலோகத்திற்குரியவர்களின் பரலோக அனுபவங்கள்
"நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல." யோவான் 17:16.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகத்தானல்லாததினால் நாமும் உலகத்தாரல்ல. இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு அறிக்கையிடும் ஒருவர் பரம அழைப்புக்குப் பங்குள்ளவனாவான் (எபிரெயர் 3:1). ஆகையால், அந்த நபர் உலகத்தானல்லாதவனாய் இருக்கும்படிக்கு இயேசு தன்னை உலகத்திலிருந்து தெரிந்தெடுத்தார் (யோவான் 15:19). மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு உலகத்தில் இல்லாதவைகளை விசேஷமான பரலோகத்திற்குரியவர்களாக மாற்றுவதற்கு உலகத்திலிருந்து தேவன் தெரிந்தெடுத்தார் (1 கொரிந்தியர் 1:26-28) ஆகையால், நமது அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதிப்படுத்தி கொண்டு வாழ்ந்தால், நமக்கு இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்கு, பரலோகத்திற்கு பிரவேசம் பரிபூரணமாய் அளிக்கப்படும் (2 பேதுரு 1:10-11). ஏனென்றால் இயேசுவின் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல பரலோகத்திற்குரியது (யோவான் 18:36). அதுமட்டுமல்ல முந்தின ஆதாம் பூமியிலிருந்து உண்டானவன். ஆனால் இரண்டாம் மனுஷனாகிய கிறிஸ்து வானத்திலிருந்து வந்தவர். ஆதலால் நாம் பூமியிலிருந்து உண்டானவனை போல உலகத்தாராகாமல் பரலோகத்திலுள்ள இயேசுவைப் போல பரலோகத்திற்குரியவர்களாவோம் (1 கொரிந்தியர் 15:47-48). ஏனென்றால் நமது குடியிருப்பு பரலோகத்தில் இருக்கிறது (பிலிப்பியர் 3:20). ஆதலால் எந்த வகையிலும் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் பரலோகத்திற்குரியவர்களாக வாழ வேண்டும் (ரோமர் 12:2). அப்படியே பரலோகத்திற்குரியவர்களாக வாழ்பவர்களின் சில ஆவிக்குரிய அனுபவங்களை நமக்கு தேவ வசனத்தில் பார்க்க முடியும்.
முதலாவதாக, நாம் சிந்திக்கும்போது கிறிஸ்து இயேசுவுக்குள் அவரோடுகூட எழுப்பி அவரை உன்னதங்களிலே உட்காரவும் செய்தார் (எபேசியர் 2:7). ஏனென்றால், அவர்கள் உலகத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டவர்களானபடியால் அவர்கள் இனி உலகத்திற்குரியவர்களாகாமல் இருப்பதற்கே. ஆகையால் கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்தில், அவர் வீற்றிருக்கப்பண்ணின இடத்திலுள்ள மேலானவைகளை தேடுகிறவர்கள் ஆகுவோம். பூமியில் உள்ளவைகளை அல்ல, மேலானவைகளையே நாடுபவர்களாக வாழ வேண்டும் (கொலோசெயர் 3:1-2). அப்படிப்பட்டவர்கள் இனிவரும் உலகத்தின் பலன்களையும் அனுபவங்களையும் ருசி பார்த்தவர்கள் ஆகும் (எபிரெயர் 6:5). தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்பும் அல்ல, பரிசுத்த ஆவியில் உண்டாகும் நீதியும் சமாதானமும் சந்தோஷமும் ஆகும் (ஆங்கிலம் ). இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவர்கள் தேவனைப் பிரியப்படுத்துவார்கள் (ரோமர் 14:17-18). அதுமட்டுமல்ல ஆபிரகாமைப் போலவே, குடும்பமாக பூமியில் அவர்கள் அந்நியர்களாகவும், பரதேசிகள் என்று அறிக்கையிட்டும் வாழ உற்சாகம் உள்ளவர்களாகும். (எபிரெயர் 11:13). அவர்களைப் போலவே, தங்கள் இந்த பூமிக்குரிய வீடுகளை வெறும் கூடாரங்களாகக் கருதி, இந்த உலகத்தைப் பார்க்கிலும் மேன்மையான பரம தேசத்தையே விரும்பி கொண்டு தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு காத்திருப்பார்கள் (எபிரெயர் 11:9-10,16). எனவே, தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்த விசேஷித்த நன்மையானதொன்றையே, பரலோகத்திற்கு உரியவைக்காகவே காத்திருந்து நமக்கு பரலோகத்திற்குரியவர்களாக வாழ்வோமாக (எபிரெயர் 11:40).
இரண்டாவதாக, பரலோகத்திற்குரியவர்கள் தங்கள் தேவனை தேவன் என்று அழைப்பதில்லை, பிதா என்று அழைப்பார்கள். ஏனென்றால், இயேசு பிதாவாகிய தேவனை மனுஷர்களுக்கு வெளிப்படுத்தும்படியாக விரும்பி இந்த உலகத்திற்கு வந்தபோது (மத்தேயு 11:27) தனது உபதேசங்களைக் கேட்டவர்களுக்கு தேவனை பிதா என்று அறிமுகப்படுத்தினார் (மத்தேயு 6:9-26). உலகத்திற்குரியவர்களிலிருந்து தன்னுடையவர்களை வேறுபடுத்தி காண்பித்து அவர்களுடைய பரம பிதா என்று அவர்களோடு கூறினார் (மத்தேயு 6:32). அதுமட்டுமல்ல இயேசு பூமியில் வாழ்ந்த காலமெல்லாம் தேவனை பிதா என்று அழைத்தார். இயேசு பாவநிவாரண பலியாக சிலுவையில் மரித்தபோது ஒரு முறை மட்டுமே இயேசு பிதாவை தேவனே என்று அழைத்தார் (மத்தேயு 27:45-50) ஏனென்றால் இயேசு நமக்காக தேவனால் பாவமாக்கப்பட்டு (2 கொரிந்தியர் 5:21) சிலுவையில் நம் பாவங்களைச் சுமந்து (1 பேதுரு 2:24). பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை ஏற்றுக்கொண்டு ஒரு பாவியாக மரித்த போது, தேவனை பிதா என்று அழைக்க முடியாததினால் தேவனே என்று அழைத்தார். ஆனபடியால் புறஜாதிகளாக, உலகத்திற்குரியவர்களாக, பாவிகளாக வாழ்பவர்கள் தேவனை தேவன் என்று அழைக்கிறார்கள். உண்மையான பரலோகத்திற்குரிய ஒரு தேவ பிள்ளை தேவனை எப்பொழுதும் பிதாவே என்று அழைக்கிறான். குறிப்பாக ஜெபங்களில், எப்போதும் இயேசு கற்பித்தபடி, அவர் அவர்களை பரலோகத்திலிருக்கிற பிதாவே என்று அழைத்து ஜெபிப்பார்கள் (மத்தேயு 6:9, லூக்கா 11:2). நாமும் பரலோகத்திலிருக்கிற பிதாவே என்று தைரியமாக அழைக்கும்படிக்கு பரலோகத்திற்குரியவர்களாக வாழ வேண்டும்.
மூன்றாவதாக, பரலோகத்திற்குரியவர்கள் தாங்கள் தேவனின் பிள்ளைகள் என்ற எண்ணத்துடன் வாழ்பவர்கள். ஏனென்றால் நமது பரலோகத்தில் இருக்கிற பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல நாமும் பூரண சற்குணராக வேண்டுமென்று இயேசு வேண்டிக்கொள்ளுகிறார் (மத்தேயு 5:48). ஆதலால் இந்த உலகத்தில் நமது பரலோக பிதாவினுடைய அன்பை இழந்து போகாதபடிக்கு உலகத்திலும் உலகத்தில் உள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள் (1 யோவான் 2:15-17). மாறாக, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்ய சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாகக்கடவோம் (2 பேதுரு 1:4). இயேசு உதாரணம் கூறுவது போல், நம்மை சிநேகிப்பவர்களை மட்டும் சிநேகிக்காமல் சத்துருக்களையும் சிநேகிப்பவர்களாகவும் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்கவும் வேண்டும். அது அவர்கள் பரலோகத்தில் இருக்கிற பிதாவுக்கு புத்திரர்களாகுவதற்கே (மத்தேயு 5:44-45). லூக்கா சுவிசேஷத்தில் இயேசு கூறுவது போல் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்து, சபிக்கிறவர்களை ஆசீர்வதித்து, உன் அங்கேயே எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாமல், ஒன்றும் திரும்ப விரும்பாமல் கடன் கொடுப்பவர்களாக, சுருக்கமாக மனுஷர் தங்களுக்கு எப்படி செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவர்களுக்கு அப்படியே செய்பவர்களாக வேண்டும். பரலோகத்தில் இருக்கிற பிதா இரக்கமுள்ளவரும் கருணையுள்ளவராயும் இருக்கிறது போல பரலோகத்திற்குரியவர்களும் இருக்க வேண்டும் (லூக்கா 6:27-36). ஆகையால், மனுஷனுடைய இச்சைகளின் படி பாவிகளாக புறஜாதிகளைப் போல அந்நிய சுபாவங்களுக்கு பிழைக்காமல் (1 பேதுரு 4.2-3), மேலும் நாம் உலகத்தால் கறைபடாமல் நம்மைக் காத்துக்கொண்டு பூரண சற்குணராய் பரலோகத்திற்குரியவர்களாக வாழ வேண்டும் (யாக்கோபு 1:27).
நான்காவதாக, பரலோகத்திற்குரியவர்கள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் கிறிஸ்துவுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவார்கள் ஆவார் (எபேசியர் 1:3). பரமண்டல பிதாவினுடைய பரலோக ஆசிர்வாதங்கள் மூத்த குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக நாம் பெற்றுக்கொள்கிறோம். பிதாவாகிய ஈசாக்கின் ஆசிர்வாதங்களை பெறுவதற்காக இளைய மகனாகிய யாக்கோபு மூத்த மகனாகிய ஏசாவின் வஸ்திரங்களை அணிந்து கொண்டு அந்த வஸ்திரத்தின் வாசனையால் ஆசீர்வதிக்கப்பட்டான் (ஆதியாகமம் 27:15-27). அதைபோல், கிறிஸ்துவினோடுகூட சேருவதற்கு ஞானஸ்தானம் பெற்ற நாம் கிறிஸ்துவை தரித்திருக்கிறோம் (கலாத்தியர் 3:27).
இவ்வாறு, நாம் தேவனுக்கு கிறிஸ்துவின் நற்கந்தமாக இருப்பதினால் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார் (2 கொரிந்தியர் 2:15). அந்த ஆசீர்வாதம் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாகும் (எபேசியர் 1:3). பொருளாதாரமான பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் அல்ல. உலக ஆசீர்வாதங்கள் அனைத்தும் தேவனின் பிள்ளைகளை விட உலக மக்கள் அதிகமாக பெறுகிறார்கள். எனவே, ஒரு பரலோகத்திற்குரிய மனிதனின் ஆசீர்வாதங்கள் ஒருபோதும் பொருளாதாரமான ஆசிர்வாதங்கள் அல்ல உன்னதங்களிலே ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாகும். தேவனுடைய ராஜ்யத்தை தேடுகிறவர்களாகையால் தேவன் அவர்களுக்கு பூமிக்குரிய நன்மைகள் எல்லாம் தருவது மட்டுமல்ல தேவனுடைய ராஜ்ஜியமும் அவருக்கு கொடுப்பதற்கு தேவன் பிரியப்படுகிறார் (லூக்கா 12:31-32). எனவே, அவர்கள் யாக்கோபைப் போல பூமிக்குரிய ஆசீர்வாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பரலோக ஆசீர்வாதங்களுக்காக தேவனிடம் போராடி ஜெபிப்பார்கள் (ஆதியாகமம் 32:26). உன்னதங்களிலே சகல ஆவிக்குரிய ஆசிர்வாதங்களும் ஜெபத்தினால் பெற்றுக் கொண்டு நாமும் பரலோகத்திற்குரியவர்களாக வாழ்வோமாக.
ஐந்தாவது, பரலோகத்திற்குரியவர்கள் மற்ற உலக மனுஷர்களைப் போல மாம்சத்துக்குரியவர்களாயிராமல் உன்னதங்களிலே சகல ஆவிக்குரிய அனுகிரகங்களை அனுபவித்து ஆவிக்குரியவர்களாக இருப்பாற்கள் (1 கொரிந்தியர் 3:1-3). ஜென்ம சபாவமுள்ள உலக மனிதர்களுக்கு தேவனின் உபதேசம் பைத்தியமாக தோன்றுகையால் அவர்களுக்கு அது கடைபிடிக்க முடிவதில்லை, ஆவிக்குரியதாக பகுத்தறிய வேண்டியதாகையால் அதை புரிந்து கொள்ள இயலுவதுமி ல்லை. ஆனால் தேவன் நமக்கு தருகிறதை அறிந்து கொள்ளும்படியாக தேவனிடத்தில் இருந்து ஆவியை பெற்றவர்கள் மனுஷிகஞானம் போதிக்கிற வார்த்தைகளினாலல்ல பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளால் ஆவிக்குரியவைகளை காண்பிக்கிறோம். அப்படியாக ஆவிக்குரியவைகள் ஆவிக்குரியவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதினால் ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானித்து அறிகிறான். அவ்வாறு ஆவிக்குரியவர்கள் தேவ ஆவியினால் போதிக்கப்பட்டவராய் ஆவிக்குரியவைகளை புரிந்து கொண்டு வளருகிறார்கள் (1கொரிந்தியர் 2:13). இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திர பிரயாணத்தில் மன்னாவை புசித்துக்கொண்டு ஜீவித்தது போல தேவன் அவர்களுக்கு வானத்தின் தானியமாகிய ஆவியின் உபதேசங்கள் நல்கி போஷிப்பிக்கிறார் (சங்கீதம் 78:24). இந்த ஆவிக்குரிய உபதேசங்கள் எல்லாம் உன்னதமானவைகள் என்பதால் பரலோகத்திற்குரியவர்களாக நாம் வாழ முடியும்.
ஆறாவது, பரலோகத்திற்குரியவர்கள் ஒருநாளும் இந்த பூமியில் தங்களுக்காக பொக்கிஷங்களை சேர்த்து வைப்பதில்லை. மாறாக பரலோகத்தில் தங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைப்பார்கள் (மத்தேயு 6:19-20). அதற்கு இயேசு கூறுகிற வழி தங்களுக்கு உண்டானவைகளை எல்லாம் விற்று தரித்திரருக்கு கொடுக்க வேண்டும் என்பதே. அப்படிப்பட்டவர்களுக்கே பரலோகத்தில் பொக்கிஷங்கள் உண்டாகும் (மாற்கு 10:21, லூக்கா 12:33). இயேசுவும் தம்முடைய சீஷர்களின் மூலம் தரித்திரருக்கு கொடுத்து உதவி பண்ணினார் (யோவான் 13:29). ஆகையால், அவர்களுக்கிடையில் இருக்கும் தரித்திரரை நினைத்துக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய பரலோகத்திற்குரியவர்கள் எப்பொழுதும் உற்சாகம் உள்ளவர்களாய் இருப்பார்கள் (கலாத்தியர் 2:10). அது பரலோகத்தில் அவர்களுக்கு ஒரு பொக்கிஷமாக மாறும். அதுமட்டுமல்ல பரலோகத்தில் தங்களுக்கு அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உண்டென்று அறிந்து பூமியில் தங்கள் ஆஸ்திகளையும் கொள்ளையிடக் கொடுப்பதும் சந்தோஷமாய் சகிப்பவர்களாக இருக்க வேண்டும் (எபிரெயர் 10:34). மேலும் இந்த உலகத்தில் தங்களுக்காக சேர்த்து வைத்ததை அனுபவிக்க முடியாமல் திடீரென்று உலகத்தை விட்டு பிரிந்து போகிற மதிகட்டவராயிராமல் தேவனிடத்தில் ஐசுவரியவானாய் இருப்பதற்கு உற்சாகம் உள்ளவர்களாகக் கிரியை செய்கிறார்கள் (லூக்கா 12:20-21). ஆகையால், கர்த்தருடைய வருகையில் அவரிடமிருந்து பலனும் பிரதிபலனும் பெறுவதற்காக (ஏசாயா 40:10) கிரியைகளில் உற்சாகம் உள்ளவர்களாக நாமும் பரலோகத்திற்குரியவர்களாக வாழ்வோம்.
ஏழாவதாக, பரலோகத்தில் குடியிருப்பு இருக்கிற பரலோகத்திற்குரியவர்கள் வானத்திலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரட்சகராக வருவார் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள் (பிலிப்பியர் 3:20). வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பரலோகத்துக்கு எழுந்தருளிபோன இயேசு வானத்திற்கு போனது போல மறுபடியும் வருவார் என்பது நமது நம்பிக்கையும் தைரியமும் ஆகும் (அப்போஸ்தலர் 1:11). இந்த உலகத்தை விட்டு பிரிந்து பரலோகத்தில் கிறிஸ்துவுடனேகூட இருப்பதற்கு ஆசையுண்டு அது அதிக நன்மையாயிருக்கும் (பிலிப்பியர் 1:23) என்பதால் பரலோகத்திற்குரியவர்கள், கிறிஸ்து மீண்டும் வந்து தங்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்ளுகிற அந்த நல்ல தினத்திற்காக ஆசையோடு காத்திருப்பார்கள். தமக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இயேசு இரண்டாந்தரம் தரிசனமாவார் (எபிரெயர் 9:28). இயேசு வெளிப்படும்போது நாம் இயேசுவுக்கு ஒப்பாயிருப்போம் (1 யோவான் 3:2). அல்லது பரலோகவாசிகளைப் போல வாழ்கிற, பரலோகத்திற்குரியவர்கள் வானவருடைய சாயலை அணிந்து கொள்வார்கள் (1 கொரிந்தியர் 15:28-49)). ஆவிக்குரிய சரீரமுள்ளவர்களாக மகிமைப்படுத்தப்பட்டு பரலோகத்தில் இயேசுவுடன்கூட நித்ய நித்தியமாக வசிப்பார்கள் (1 கொரிந்தியர் 15:40)). ஆகையால், நாம் இயேசுவைப் போல உலகத்தானல்லாததினால் இந்த அனுபவங்களோடு பரலோகத்திற்குரியவர்களாக வாழ்வதற்கு தேவன் நமக்கு உதவி செய்து ஆயத்தம் செய்வாராக.