நித்தியத்திலுள்ள ஆறுதல் (ஏசாயா 66:13)

நித்தியத்திலுள்ள ஆறுதல் (ஏசாயா 66:13)
: :

தேவனுக்கு மகிமை

நித்தியத்திலுள்ள ஆறுதல்

"
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்." ஏசாயா 66:13.

கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் நித்தியத்தை அதாவது மேலான எருசலேமைக் குறித்து சொல்லும்போது அவள் நம் எல்லாருக்கும் தாயானவள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது (கலாத்தியர் 4:26). ஆகவே நித்தியத்தில் நமக்கு கிடைக்கும் ஆறுதலை பற்றி அது தேவனால் கிடைக்கக்கூடியதாக இருந்தாலும் ஒரு தாய் தேற்றுவதைப் போல என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள்  ஆனந்த களிப்புடன் பாடி சீயோனுக்கு திரும்பும்போது நித்திய மகிழ்ச்சி அவர்கள்மேல் வந்து சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள். அதுமாத்திரமல்ல, அவர்களுடைய சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் (ஏசாயா 35:10). இப்படி அவர்கள் அங்கே ஆறுதலை பெற்றுக் கொள்வதைப் பற்றி நாம் கவனிக்கும்போது அது நித்தியத்தில் புதிய எருசலேமின் அனுபவமாக நமக்குப் பார்க்க முடியும். (வெளிப்படுத்தல் 21:2-5).  கர்த்தருக்குள் மரிக்கிறவர்களுடைய ஆத்துமாவுக்கு நித்தியத்தில் அவர்களுடைய பிரயாசங்களிலிருந்து கிடைப்பது ஓய்வு  என்று சொல்லப்பட்டு இருக்கிறது. (வெளிப்படுத்தல் 14:13). இது இந்த உலகத்தை விட்டு போன பின்பு இளைப்பாறும் அனுபவமாயிருப்பதால் (தானியேல் 12:13) நம்முடைய நாட்களின் முடிவிலே நாமும் எருசலேமில் சென்று ஒரு தாய் தேற்றுவதைப் போலுள்ள இளைப்பாறுதலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த ஆறுதல் நித்தியத்திலே அனுபவமாகும் அதாவது மரணத்துக்கு பின்புள்ள அனுபவமாகும் என்பது ஐசுவரியவான் மற்றும் லாசரு என்பவர்களின் சம்பவங்களிலிருந்து இயேசுவும் நம்மை அறிவுறுத்துகிறார். இது ஒரு வெறும் கதையல்ல உண்மையான ஒரு சம்பவமாக இயேசு கூறினார். காரணம் தன்னுடைய மற்ற உவமைகளில் எல்லாம் இயேசு ஒருவருடைய பெயரை சொல்லாமல் இருக்கும்போது இந்த சம்பவத்தில் மட்டும் நபரின் பெயரெ  உறுதிப்படுத்தி இருக்கிறார். ஐசுவரியவானும் லாசருவும் மரித்து அடக்கம் பண்ணபட்ட பின்பு அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு கிடைத்த அனுபவமாகவே இந்த சம்பவத்தை நாம் காண முடிகிறது. ஆபிரகாம்பிதாவின் வார்த்தைகளில் ஐசுவரியவான் பாதாளத்தில் வேதனை அனுபவிக்கும் போது லாசரு ஆபிரகாமின் மடியில் தேற்றப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அது அவர்கள் இந்த பூமியில் பெற்றுக் கொண்ட அனுபவங்களுக்கு ஏற்ற பிரகாரமாக என்றும் நமக்கு காணமுடிகிறது (லூக்கா 16:25). ஆகையால் நாம் நித்தியத்தில் சென்று இளைப்பாறுதல் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் இந்த பூமியில் அதற்கேற்ற அனுபவங்களை பெற்று வாழவேண்டும்.

ஐசுவரியவான் லாசரு இவர்களுடைய அனுபவம் நாம் படிக்கும்போது இவர்கள் இரண்டு நபர்கள் என்பதை விட நம்முடைய ஜீவியத்தின் இரண்டு அனுபவங்களை காண்பிக்கிறதாக நாம் புரிந்துகொள்ளலாம். நம்மில் புறம்பான மனிதன் என்றும் உள்ளான மனிதன் என்றும் இரண்டு அனுபவம் அதாவது இரண்டு ஆள்தத்துவம் உண்டு. (2 கொரிந்தியர் 4:16). அப்படியானால் ஒரு தேவனுடைய பிள்ளையின் புறம்பான மனிதனை ஐசுவரியவானின் அனுபவத்திற்கும் உள்ளான மனிதனை லாசருவின் அனுபவத்திற்கும் நாம் ஒப்பிடலாம். ஐசுவரியவானை நாம் கவனிக்கும்போது அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து சம்பிரமாக வாழ்ந்ததாக காணலாம். இது அவன் பெற்றுக்கொண்ட நன்மை என்று இருபத்தைந்தாம் வசனத்தில் ஆபிரகாம் பிதா கூறுகிறார். எந்த மனிதனும் புசித்துக் குடித்து தன்னுடைய சகல பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது தேவனுடைய வரமாகிய நன்மையாகும். (பிரசங்கி 3:12-13).

நம்முடைய பிதாக்களுடைய காலத்தை பார்க்கிலும் இன்று தேவன் நம்மையும் நம்முடைய சபையையும் மிகவும் அதிகமாக ஆசீர்வதித்து தேவனுடைய பிள்ளைகளுக்கும் ஊழியக்காரர்களுக்கும் தாராளமாய் நன்மைகளை தேவன் நல்கியிருக்கிறார். ஆகவேதான் நாம் இன்று விலையேறிய வஸ்திரங்கள் தரிக்கின்றவர்களாகவும் சுகபோகத்தோடு ஆடம்பரமாக ஜீவிக்க்கிறவர்களாகவும் மாறிப்போயிருக்கிறோமே?. இன்று ஜெபிப்பதற்கும் உபவாசமெடுப்பதற்கும் தேவனுடைய வசனத்தை படிப்பதற்க்கும்  நேரமில்லாமல் நாம் மாற்றப்பட்டு, ஆராதனையை கூட ஒரு சடங்காசாரமாக நாம் மாற்றி இருக்கிறோம். இயேசு கூறும் போது நாம் உலகப் பொருள்களை (மாமோன்- மலையாள வேதாகமம்) சேவிக்கிறவர்களாக, இந்த உலகப் பொருட்களை மிகவும் விரும்புகிறவர்களாக மாற்றப்பட்டார்கள் (மத்தேயு 6:24) பொருளாசைக்காரர்களாக நம்முடைய ஜீவியம் மாறி போயிருக்கிறது (எபேசியர் 5:5). பெருந்தின்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் நிறைந்து எண்ணத்தை திண்போம் எண்ணத்தை குடிப்போம் என்றும் மிகவும் ஆடம்பரமாக சுகபோகமாக வாழ்வதற்கு கவலைப்படுகிறவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம் (லூக்கா 21:34). அதோடுகூட பட்டு இரத்தாம்பரம் போன்ற விலையேறப்பெற்ற வஸ்திரங்களை தரித்துக்கொள்ள விரும்பியும் என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படுகிறவர்களாகவும் நாம் காணப்படுகிறோம் (மத்தேயு 6:31). கர்வமும் ஆகாரத்திரட்சியும் நிர்விசாரமான சாங்கோபாங்கமும் அக்கிரமம் என்று சொல்லப்பட்டுள்ளது (எசேக்கியேல் 16:49). உலக ஆஸ்தி அதிகமானதினாலும் சுகபோகத்தோடு நிம்மதியாக ஜீவிப்பதினாலும் தேவனை மறுதலிக்கிறவர்களாக மாற்றப்பட்டு (யோபு 21:7-15). தேவனுக்குரிய பயமில்லாமல் போன நம்முடைய இப்பிரகாரமான ஜீவியம் நம்மில் அக்கிரமமாக மாறுகிறது.

இப்படி நாம் அக்கிரமத்தில் வாழ்கிறவர்களாக இருந்தால் நம்முடைய உள்ளான மனிதனின் நிலைமை லாசருவின் வாழ்க்கையை போல மாற்றப்படுகிறது. அக்கிரமங்கள் தலைக்கு மேலாக பெருகினதினால் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை. மதிகேட்டினிமித்தம் புண்கள் அழுகி நாற்றமெடுத்த நிலைமையானது (சங்கீதம் 38:35). உலகப் பிரகாரமான ஆஸ்தியும் சுக சவுகரியங்களும் நம்மை ஆவிக்குரிய பின் மாற்றத்தில் கொண்டு போகிறது. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் சுகமே இல்லை, தலை அதாவது மனது முழுவதும் வியாதியும் இருதயம் முழுவதும் பலட்சியமும் ஒரு பின்மாற்றக்காரனின் அனுபவம் ஆகும். (ஏசாயா 1:5-6). ஆவிக்குரிய வாழ்க்கையில் முழுவதுமாக தேவனை விட்டு பின்மாற்றப்பட்ட நிலைமை. உதவி செய்வதற்கு தேவபிள்ளைகள் இல்லாமலும் தெய்வீக பரிபாலனம் இல்லாமலும் நாய்கள் புண்களை நக்குகிறதான வாழ்க்கை. அதாவது பின்மாற்றக்காரர்களோடு சேர்ந்து அவர்களுடைய உதவியோடுகூட அவர்களைப் போன்று இருக்கிற வாழ்க்கை. லாசரு  ஐசுவரியவானின் மேசையில் இருந்து விழுகிறதை தின்று பசியை அடக்க ஆசையாயிருந்தான். (லூக்கா16:21). எஜமானின் மேசையிலிருந்து விழுகிற அப்பத் துணிக்கைகள்  தின்ன பந்தியை சுற்றிலுமுள்ள நாய்க்குட்டிகளுடைய அனுபவம் (மத்தேயு 15:27). தேவ பிள்ளைகளாக தேவனுடைய அனுபவங்களாகிய மிருதுவான போஜனங்களை அனுபவித்து ஜீவிக்க வேண்டியவர்கள் இவர்கள். ஆனால் இரத்தாம்பரம் தரித்து சுகபோகத்தோடு வளர்ந்ததினால் பின்மாற்றக்காரராக நாய்களைப் போல குப்பையை தழுவுகிற நிலவரமாய் மாறினது. (புலம்பல் 4:5). மேசையிலிருந்து விழுவதை தின்று பசியை அடக்க விரும்பிய லாசருவைப் போல இவர்களும் விரும்புகிறார்கள் (லூக்கா16:21). லாசருவுக்கு கிடைத்ததோ இல்லையோ என்று அறியாமல் போனது போல இவர்களுக்கும் கிடைக்குமா என்று நமக்கு தெரியாது. பிதாவின் வீட்டை விட்டுப் போய் துன்மார்க்கமாக வாழ்ந்த இளைய புத்திரனுக்கு ஒருவரும் ஒன்றும் கொடுக்காமல் இருந்தது போல இவர்களுக்கும் கிடைக்காமல் போவதற்கே  அதிக வாய்ப்பாக இருக்கும் அல்லவா? (லூக்கா 15:16).

இப்பொழுது நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் இந்த நிலவரத்தில் இருந்தாலும் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. லாசரு மரித்த பின்னரே தேவதூதர்கள் ஆபிரகாமின் மடிக்கு கொண்டு சென்றார்கள். (லூக்கா 16:22). அந்த தரித்திரன் மரித்த பின்பு என்றுதான் நாம் இங்கே காண்கிறோம். இவ்வுலகத்தில் தரித்திரராக இருந்தாலும் விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும் தன்னிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்ஜியத்தை சுதந்தரிக்கிறவர்களாக மாற்றப்பட்டு நாம் மரிக்க வேண்டியதாக இருக்கிறது (யாக்கோபு 2:5). ஆகவே நாமும் மரணம் மூலமாக இவ்வுலகத்தை விட்டுப் போகும் முன்பே நம்முடைய ஜீவியத்தில் இப்போதே மனந்திரும்பி வருவோமாக. சோரமார்க்கமாய் நடந்தும் தேவனுடைய சத்தத்திற்கு செவி கொடாமல் போன அக்கிரமத்தை நாம் ஒத்துக்கொண்டால் தேவனிடத்தில் திரும்பி வரமுடியும். (எரேமியா 3:13-14). அப்போழுது தான் தேவன் சீயோனில் தேவனுடைய சமூகத்தில் நம்மைக் கொண்டு வரமுடியும் (சங்கீதம் 84:7). அப்படியானால்  தேவனுடைய சமூகத்தில் எருசலேமில் சென்று ஆறுதல் அடையமுடியும். நம்முடைய துரோகங்களையும் பாவங்களையும் ஒத்துக்கொண்டு நம்முடைய பின்மாற்றத்தின் வழிகளை விட்டு திரும்பி பிழைப்பதையே தேவனுடைய சித்தமாக தேவன் விரும்புகிறார் என்றுள்ளது (எசேக்கியல் 33:10-11). ஆகவே நாம் கர்த்தாவே கர்த்தாவே என்று அழைப்பவர்களாக மட்டும் ஜீவிக்கிறவர்களாக அல்ல நம்முடைய பின்மாற்றத்தின் நிலவரங்களை விட்டுவிட்டு ஜீவியத்தை சுத்திகரித்துக் கொண்டு தேவ சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து வாழ்ந்தால் நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசித்து ஆறுதல் அடையலாம் (மத்தேயு 7:21).

மறுபடியும் ஐஸ்வர்யவானையும் லாசருவையும் வேறு கோணத்தில் நாம் தியானித்தால் விசேஷமான ஒரு நிலைமையில் நமக்கு படிக்கமுடியும். ஐஸ்வர்யவானின் பெயர் கொடுக்கப்படவில்லை (லூக்கா16:19). இது நம்முடைய உலகப்பிரகாரமான ஜீவியத்திற்கு தேவ சமூகத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால் நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து உலகப்பிரகாரமாக வாழ்ந்தால் ஐஸ்வர்யவானைப் போல வேதனையுள்ள இடத்திற்கு, நரகத்திற்கு போக நேரிடும். ஏனென்றால் ஐஸ்வர்யவான் இம்மையில் மாத்திரம் நன்மையை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டு உற்சாகத்தோடு அதை அடைந்து கொள்கிறான் (லூக்கா 16:25). அதைப்போலவே நாமும் இமைக்காகமாத்திரம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை உள்ளவர்களாக ஆசைப்பட்டு வாழ்ந்தால் சகல மனிதர்களை பார்க்கிலும் பரிதபிக்கப்பட்டவர்களாய் மாற்றப்படுவோம்  (1 கொரிந்தியர் 15:19). இரட்டிப்பாக நரகத்திற்கு பாத்திரவான்களுமாவோம் (மத்தேயு 23:15). ஆனால் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் லாசருவைப் போல பெயர் கொடுக்கப்பட்டதான ஜீவியம் ஆகும். தேவன் நம்மை பெயர் சொல்லி அழைத்து மீட்டுக் கொண்டு தனக்குள்ளவர்களாக மாட்டியிருக்கிற ஆவிக்குரிய ஜீவியமே நமக்குள்ளது. (ஏசாயா 43:1) மனந்திரும்பதலின் ஞானஸ்நானத்தினால் பாவங்களிலிருந்து  மீட்டெடுக்கப்பட்டவர்களாக சுதந்திரம் பெற்று தேவனுடைய தாசர்களாக நித்திய ஜீவன் என்ற முடிவை பெற்றுக் கொள்ளுகிற ஒரு ஜீவியம் (ரோமர் 6:3-5, 22). அப்படிப்பட்டவர்கள் யோபுவை போல தேவதாசர்களாக உத்தமர்களும் சன்மார்க்கரும் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகி ஜீவிக்கிறவர்கள் என்று தேவனாலே சாட்சியைப் பெற்றவர்கள் (யோபு 1:8). பரலோகத்தில் பேரெழுதப்பட்டிருக்கிறவர்களின் சபையில் உட்படுத்தப்பட்டவர்களாக காணப்படுகிறவர்கள் (எபிரேயர் 12:23). இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்களாக இருப்பதால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க தகுதி உள்ளவர்களாகிறார்கள் (வெளிப்படுத்தல் 21:27). ஆனால் ஜீவ புத்தகத்தில் பேரெழுதப்படாத ஏவரும் ஐஸ்வர்யவானை போல பரலோகத்திலும் பேர் இல்லாதவர்கள் ஆனபடியால் அக்கினி கடலிலே தள்ளப்பட நேரிடும் (வெளிப்படுதல் 20:15).

அது மாத்திரமல்ல லாசரு இந்த பூமியில் தீமையை அனுபவித்தது போல தீமை அனுபவிக்க நாம் ஆயத்தம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் (லூக்கா 16:25). யோபுவும் தன் ஜீவியத்தில் தேவனுடைய கரத்திலிருந்து தீமையை அனுபவிக்க சந்தோஷமுள்ளவனாய் இருந்தான் (யோபு 2:10). அதன் நிமித்தமாக யோபுவின் சரீரத்திலும் லாசருவைப் போல உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை வரைக்கும் பருக்களால் நிறைந்திருந்தான் (யோபு 2:7). எல்லோரும் அவனை கைவிட்ட பின்பு உதவி செய்ய யாருமில்லாத நிலவரம் ஆனது. இப்போது கவனித்தால் யோபுவை ஆறுதல்படுத்தும்படிக்கு வந்த சிநேகிதர்கள் சொன்னது யோபு தங்களை மிருகங்களாக எண்ணுகிறார் என்றே (யோபு 18:3). இது லாசருவை சுற்றி இருந்த நாய்களைப் போல அல்லவா? அவர்கள் யோபுவின் அனுபவத்தில் துக்கப்படுத்துகிற, வேதனைப்படுத்துகிற, அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர் என்கிறார் (யோபு 16:2). ஆனால் தேவனுடைய கையில் இருந்து அதாவது தேவனால் அனுமதிக்கப்பட்டு வருகிற தீமைகள் எல்லாம் தேவனை நேசிக்கிறவர்களுக்கு அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு எதுவாக நடக்கிறது என்பதுதான் உண்மை (ரோமர் 16:28). தேவன் நம்மை தாழ்த்துவதும்  சோதனை தீமைகளின் வழியாக நடத்துவதும் பிற்காலங்களில் நமக்கு நன்மை செய்யும்படியாகவே (உபாகமம் 8:16). ஒருவேளை நாம் உபத்திரவங்கள் வருவதற்கு முன்பே வழி தவறிப் போயிருக்கலாம். ஆனால் தேவன் நல்லவரும் நன்மை செய்கிறவருமாய் இருப்பதால் தேவனுடைய பிரமாணங்களை எனக்கு போதித்தருள வேண்டுமே என்று உபத்திரவத்தில் நாம் ஜெபிக்க வேண்டியதாக இருக்கிறது. அப்போது நாம் உபத்திரவப்படுவது நமக்கு நன்மையாக மாறும். ஆகவே தேவனுடைய பிரமாணங்களை படித்து நாம் தேவனுடைய வசனங்களை கைக்கொள்கிறவர்களாவோம் (சங்கீதம் 119:67-68, 71).

இந்த நிலவரத்தை நாம் ஆவிக்குரிய பிரகாரமாக படிக்கும் போது இந்த உலகமாகிய வனாந்திர பிரயாணத்தில் தேவன் நம்மை தாழ்த்தவும் தம்முடைய கற்பனைகளை கைக்கொள்ளுவோமோ இல்லையோ என்று நம்மை சோதித்து நமது இருதயத்திலிருக்கிற காரியங்களை அறிந்து கொள்ளும்படிக்கு தேவன் நம்மை நடத்தும் பாதைகள் ஆகிறது (உபாகமம் 8:2). மன்னாவினால் இஸ்ரவேல் ஜனத்தை போஷிபித்தது போல தேவனுடைய கற்பனைகளும் பிரமாணங்களுமாகிய பரலோகத்தின் வசனங்களை நமக்கும் தேவன் தருகிறார். அது நாம் அப்பத்தினால் மாத்திரம் அல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற சகல வசனங்களினாலும் ஜீவிக்கும்படியாகவே (உபாகமம் 8:3). ஆகவே நம்மை தாழ்த்தி சோதனையில் நாம் தேவனுடைய வழிகளை கைக்கொள்ளுகிறோமா என்று அறிந்து பிற்காலங்களில் நமக்கு நன்மை தரும்படியாக (உபாகமம் 8:16) இந்த உலகத்தில் நமக்கு அனுமதிக்கப்படுகிற தீமைகள் சோதனைகள் நாம் சந்தோஷத்தோடு சகிக்க வேண்டும். அப்போது சோதனை சகிக்கிறவர்களாக, பிரயோஜனமுள்ளவர்களாக, பாக்கியமுள்ளவர்களாக மாறுகிறோம். அதாவது நாம் தேவனை நேசிக்கிறவர்களாக, தேவனுடைய வசனத்தை கைக்கொள்ளுகிறவர்களாக காணப்பட்டு (யோவான் 14:15) அதினால் பிற்காலங்களில் நித்தியத்தில் தேவன் நமக்கு ஜீவகிரீடமாகிய நன்மையை தருவார் (யாக்கோபு 1:12). ஆகவே நாம் சோதனைகளின் வழியாக கடந்து போகும்போது யோபுவைப்போல தேவனை, தம்முடைய வசனத்தை அதிகமாக அறிந்து நம்மை நாமே மிக அதிகமாக  சுத்திகரிக்கிறவர்கள் ஆவோமாக (யோபு 42:5-6).

இயேசு தம்மிடத்தில் நம்மை அழைத்து இரண்டு விதங்களில் நமக்கு இளைப்பாறுதலை தருகிறேன் என்று சொல்லுகிறார் (மத்தேயு 11:28-29). முதலாவது நம்முடைய உலகப் பிரகாரமான வாழ்க்கையில் கஷ்டங்களும் சோதனைகளும் மூலம் நாம் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களாக மாற்றப்படும்போது அவரிடத்தில் செல்ல நமக்கும் நேரிட வேண்டும். அப்போது தான் அவர் நம்மை விசாரிக்கிறவராக நம்முடைய சகல கவலைகளையும் பாரங்களையும் அவர் மேல் வைத்துவிட்டு இந்த உலகத்தில் நாம் இயேசுவிலிருந்து ஆறுதலை பெற முடியும் (1 பேதுரு 5:7). இரண்டாவது இயேசு நம்முடைய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் தருகிறேன் என்றார். லாசரு மரணத்திற்குப் பின்பு ஆபிரகாமின் மடியில் ஆறுதல் அடைந்தது போல நம்முடைய ஆத்துமாவுக்கு நித்தியத்தில் தாய் நம்மை தேற்றுவதைப்போல இயேசுவினால் ஆறுதல் பெற முடியும். அதற்கு இயேசுவின் நுகத்தை ஏற்றுக் கொண்டு அவரோடு கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயேசு கூறுகிறார். யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாததான மரியாள் தெரிந்தெடுத்த நல்ல பங்கு இயேசுவின் பாதத்தில் உட்கார்ந்து தம்முடைய வசனத்தை கேட்கும் அந்த ஒன்றே தேவையானது என்று நம்மாலும் சொல்ல முடிய வேண்டும். பல காரியங்களை சொல்லி கவலைப்பட்டும் மனம்கலங்கியும் ஐஸ்வர்யவானை போல் வாழ வாஞ்சிக்கும் ஜீவியத்தை விட்டு விடுவோமாக. (லூக்கா 10:38-42). நாம் இயேசுவின் வசனங்களை மனம் வைத்து கேட்டு கீழ்படிகிறவர்களாவோமாக. அப்போது நாம் தேசத்தின் நன்மையை அனுபவிக்க முடியும் அதாவது தேவன்  மறுமையில் நித்தியத்தில் நன்மை செய்வார் (ஏசாயா 1:19). ஆகவே நம்முடைய இந்த உலகத்தின் வாழ்க்கையில் இந்த வசனங்களை சொல்லி ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்திக்கொண்டு செல்ல நமக்குநேரிடட்டும். (1 தெசலோனிகேயர் 4:18). தேவனாகிய கர்த்தர் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக.