இயேசுவின் பாடுகளுடைய நாட்கள்
தேவனுக்கு மகிமை
இயேசுவின் பாடுகளுடைய நாட்கள்
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் பாடுபடுதலின் அன்றாடப் பதிவுகள் இன்று நமக்கு பலவிதமான மற்றும் வித்தியாசமான வழிகளில் தெரியவருகின்றன. அந்த நாட்களில் தெளிவான விளக்கங்களை நாம் தேடும்போது, சில விசேஷமான காரியங்களுக்கு நாம் தூண்டப்படுகிறோம். அதற்கு முன்பாக, இஸ்ரவேலின் சில தேதி மற்றும் நேர அட்டவணைகளுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் ஒரு நாளைக் கணக்கிடும்போது, ஒரு நாளின் மாலையிலிருந்து அடுத்த நாளின் மாலை வரை ஒரு நாளாகக் கணக்கிடுகிறார்கள். புளிப்பில்லாத அப்பம் புசிக்கும் நாட்களைக் குறித்து அவர்கள் சொல்லும்போது, முதல் மாதத்தின் பதினான்காம் நாளின் சாயங்காலம் தொடங்கி இருபத்தொன்றாம் நாளின் சாயங்காலம் வரைக்கும் ஏழு நாட்களாய் எண்ணினார்கள் (யாத்திராகமம் 12:18-19). இந்த நாட்கள் தேவனுடைய ஏற்பாட்டின்படி கணக்கிடப்படுகின்றன. ஆதியாகம புத்தகத்தில் தேவனுடைய கிரியைகளின் நாட்கள் கணக்கிடப்பட்டபோது, சாயங்காலமும் விடியற்காலமுமாகி என்று கூறி ஒரு நாள் கணக்கிடப்படுகிறது (ஆதியாகமம் 1:5,8,13). ராஜஸ்திரீயாகிய எஸ்தர் தனக்காக உபவாசம் இருக்கச் சொன்னபோது, இரவும் பகலும் என மூன்று நாட்கள் என்று சொல்லுகிறார் (எஸ்தர் 4:16). அப்போஸ்தலனாகிய பவுலும் ஒரு இரவும் ஒரு பகலும் என்று கூறுகிறார் (2 கொரிந்தியர் 11:25). ஆனால், நாட்காட்டியின்படி நாம் நாட்களைக் கணக்கிடும் அதே முறையில்தான் அவர்களும் கணக்கிடுகிறார்கள். அதனால்தான், பதினான்காம் நாள், இருபத்தியோராம் நாள் என்று சொல்லப்பட்ட பிறகு, சாயங்காலம் என்று சொல்லப்படுகிறது. ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதற்காக, ஏழாம் மாதத்தின் பத்தாம் நாள் பாவநிவாரண நாளாக இருக்க வேண்டும். ஆனால், நாம் ஓய்வுநாளின் கால அட்டவணையைக் கூறும்போது, அந்த மாதத்தின் ஒன்பதாம் நாள் சாயங்காலம் துவக்கி மறுநாள் சாயங்காலம் மட்டும் உள்ள ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டும் (லேவியராகமம் 23:27,32). இதைப் புரிந்துகொள்ள, நாம் மற்றொரு விஷயத்தைக் கருத்தில் கொள்வோம். பூமியின் இருதயத்தில் இயேசு மூன்று நாட்கள் இருந்த அனுபவத்தை யோனாவின் அனுபவத்தோடு ஒப்பிட்டு கூறும்போது மூன்று இரவும் மூன்று பகலும் என்று சொல்லப்பட்டுள்ளது (மத்தேயு 12:40). நாம் வழக்கமாகச் சொல்வது போல், பகலும் இரவும் அல்ல, இரவும் பகலும் ஆகும். இருப்பினும், பரிசேயர்களும் பிரதான ஆசாரியர்களும் இந்த விஷயத்தைப் பிலாத்துவிடம் சொன்னபோது, மூன்று நாட்கள் என்று சொன்னார்கள் (மத்தேயு 27:62-63). எனவே, இந்த விஷயம் நமது ஆய்வில் மிகவும் முக்கியமானது.
நேரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அவர்களுடைய ஒரு பகல் என்பது காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை ஆகும். அவர்களைப் பொறுத்தவரை, பகலின் விடியற்காலை என்பது அவர்களுடைய முதல் மணி நேரமாகும் (மத்தேயு 20:1). அவர்களைப் பொறுத்தவரை, நமது மாலை ஆறு மணி என்பது பன்னிரண்டாம் மணி நேரமாகும். ஒரு நாள் வேலைக்குப் பிறகு, அவர்கள் பன்னிரண்டு மணிக்கு மேல் தங்கள் கூலியைப் பெறுகிறார்கள். பதினோராம் மணி நேரத்தில் வருபவர்கள், ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்து, பன்னிரண்டாம் மணிக்கு மேல் தங்கள் கூலியைப் பெறுகிறார்கள் (மத்தேயு 20:12). நாமும் இந்த நேர அட்டவணையில் கவனம் செலுத்த வேண்டும்.
தொடர்ந்து, நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் இஸ்ரவேலரின் ஓய்வுநாள் ஆசரிப்பதைப் பற்றியாகும். தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதைப் பரிசுத்தப்படுத்தினார், ஏனென்றால் அவர் ஆறு நாட்களில் சிருஷ்டிப்பின் வேலையை முடித்து, ஏழாம் நாளில் நிறைவேற்றி ஓய்ந்திருந்தார் (ஆதியாகமம் 2:2-3). தேவன் இஸ்ரவேலருக்குப் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தபோது, அவர் ஏழாம் நாளை இளைப்பாறுத்தளுக்கான ஓய்வுநாள் ஆக்கினார் (யாத்திராகமம் 20:8-11). எனவே, வாரத்தின் கடைசி நாளாகிய ஏழாம் நாளான சனிக்கிழமை, இஸ்ரவேலர் ஓய்வுநாளாகக் ஆசரித்தனர் (லேவியராகமம் 23:3). மேலும், பண்டிகை நாட்களோடு சேர்ந்து வழக்கமான வேலைகள் எதுவும் செய்யப்படக் கூடாமல், பரிசுத்த நாளாக ஆசரிக்க வேண்டிய நாட்களை ஒழுங்குப்படுத்தினர். பஸ்கா பண்டிகை (எண்ணாகமம் 28:16,25), வாரங்களின் பண்டிகையின் முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாள் (எண்ணாகமம் 28:26), மற்றும் எக்காள மூதும் நாள் (எண்ணாகமம் 29:1) ஆகியவற்றுடன் தொடர்புடைய பரிசுத்த சபையாரும் கூடும் நாட்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன; அத்தகைய நாட்களில் அவர்கள் எந்தவொரு சாதாரண வேலையையும் செய்யக்கூடாது. இந்த நாட்கள் ஓய்வுநாட்கள் என்றும் அழைக்கப்படுகின்றன (லேவியராகமம் 16:31, 23:24,39). மேலும் இந்த நாட்களை சாதாரண ஓய்வுநாட்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, அவை பெரிய ஓய்வுநாள் என்றும் அழைக்கப்படுகின்றன (யோவான் 19:31). நாம் மேலும் பார்த்தால், முதல் மாதத்தின் பதினைந்தாம் மற்றும் இருபத்தியோராம் நாட்களும், ஏழாம் மாதத்தின் முதலாம் நாள், பத்தாம் நாள் மற்றும் பதினைந்தாம் நாட்களும், மற்றும் வேறு சில நாட்களும் ஓய்வுநாட்கள் என்று அழைக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது (லேவியராகமம் 23:6-8, 24-34). இந்த நாட்கள் சனிக்கிழமைகளில் மட்டுமே வராததால், மற்ற நாட்களும் இஸ்ரவேலருக்கு ஓய்வுநாட்களாக வருகின்றன. இயேசுவின் பாடுகளுடைய நாட்களைக் கணக்கிடும்போது, இந்த ஓய்வுநாட்களுக்கும் பெரும் முக்கியத்துவம் இருக்கின்றன.
நாம் தேவனுடைய வார்த்தைகளை கவனித்தால், அது ஒரு மறைவான இரகசியம் என்பதை நாம் காண்போம். அது முத்திரையிடப்பட்ட புத்தகம் போல் தோன்றினாலும், அதை ஆராய்கிறவர்களுக்கு அறிவும் பெருகிப்போம் (தானியேல் 12:4). நாம் கர்த்தருடைய புத்தகத்தை தேடி வாசித்தால், தெளிவான ஜோடி வசனங்களும் இணை வசனங்களும் நமக்கு கிடைக்கும் என்பதே உண்மை (ஏசாயா 34:16). அது மட்டுமல்ல, தேவனுடைய வார்த்தையானது, அழிந்துபோகிறவர்களுக்குப் பைத்தியக்காரத்தனமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு தேவனுடைய வல்லமையாக காணப்படுகிறது (1 கொரிந்தியர் 1:18). தேவனுடைய வார்த்தை நமது தேவபயத்தை அதிகரிக்கிறது (சங்கீதம் 119:38). ஆதலால், இந்த மனநிலையோடு நாம் வேதவாக்கியங்களை ஆராயும்போது, தேவன் நமக்கு வெளிப்படுத்தும் காரியங்கள் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் உரியவைகளாகயால் அது நமக்குத் தீமையாகத் தோன்றாமல், ஆசீர்வாதமாகட்டும். (உபாகமம் 29:29).
உதாரணமாக, மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷங்களிலும், மற்ற பகுதிகளிலும் (மத்தேயு 16:21, 17:23, 20:19; லூக்கா 9:22, 18:33, 24:7, 21, 46; அப்போஸ்தலர் 10:40; 1 கொரிந்தியர் 15:4), இயேசுவும், தேவதூதர்களும், அப்போஸ்தலர்களும், இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்று கூறுகிறார்கள். ஆனால், மத்தேயு சுவிசேஷத்தில், யோனா மூன்று இரவும் மூன்று பகலும் பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் மூன்று இரவுகளும் மூன்று பகலும் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்று இயேசு தமது மரணம் மற்றும் அடக்கம் குறித்துக் கூறுகிறார் (மத்தேயு 12:40). மூன்று நாட்கள் பூமியின் இருதயத்தில் இருந்து நான்காம் நாளில் உயிர்த்தெழும்புகிற அனுபவத்தை மூன்றாம் நாள் என்று கூறப்பட்ட இரகசியத்தைப் புரிந்துகொள்ள, நாம் சில வேதவசனங்களைக் கவனிக்க வேண்டும்.
மூன்று இரவும் மூன்று பகலும் இப்படி மூன்று நாள் தனக்காக உபவாசம் பண்ணுங்கள் என்று சொன்ன எஸ்தர் நான்காம் நாளுக்கு பதிலாக ராஜாவினிடத்தில் செல்வது மூன்றாம் நாள் என்று கூறப்படுகிறது (எஸ்தர் 4:16, 5:1). மூன்று நாட்களுக்குப் பிறகு தன்னிடம் வரும்படி ரெகொபெயாம் சொன்னதைக் கேட்டவர்கள், நான்காம் நாளில் தன்னிடம் வருவதை மூன்றாம் நாள் என்று கூறி வருகிறார்கள் (2 நாளாகமம் 10:5, 12). இயேசுவும் (லூக்கா 4:25) யாக்கோபும் (யாக்கோபு 5:17) தேசத்தில் மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் மழை பெய்யவில்லை என்று சொல்லும்போது, நான்காம் வருடத்தில் மழையை கட்டளையிடுவேன் என்று சொல்வதற்குப் பதிலாக, மூன்றாம் வருடத்தில் என்று கூறபட்டிக்கிறத்தை முதலாம் இராஜாக்கள் பதினெட்டாம் அதிகாரத்தில் காண்கிறோம் (1 இராஜாக்கள் 18:1). இவ்வாறாக, வேதாகமம் நான்காம் நாளுக்குப் பதிலாக மூன்றாம் நாளைக் குறிப்பிடுவதை நாம் கவனிப்போம். மாற்கு சுவிசேஷத்தில் தாம் மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுவேன் என்று இயேசுவே கூறுகிறார் (மாற்கு 8:31). ஆகவே, அவர் நான்காம் நாளில் அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு பதிலாக மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்பதை கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் கூறப்பட்டிருகிறது போல் வேதவாக்கியங்களின்படி என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதா? (1 கொரிந்தியர் 15:3-4).
மத்தேயு சுவிசேஷத்தின் இருபத்தாறாம் அதிகாரத்தில், இரண்டு நாட்களுக்குப் பிறகு வரும் பஸ்கா பண்டிகை நாளில் தாம் சிலுவையில் அறையப்படுவதற்காக ஒப்புக்கொடுக்கப்படுவேன் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 26:2). மாற்கு சுவிசேஷத்தின் பதினான்காம் அதிகாரமும் பஸ்கா பண்டிகைக்கு முந்தைய இரண்டு நாட்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது (மாற்கு 14:1). லூக்கா சுவிசேஷம் இருபத்திரண்டாம் அதிகாரத்திலும் புளிப்பில்லாத அப்பப் பண்டிகையாகிய பஸ்கா பண்டிகை சமீபமாயிருந்தது என்று கூறபட்டிருக்கிறது (லூக்கா 22:1). இந்த பஸ்கா பண்டிகைக்கு முன்பாக இயேசு இவ்வுலகை விட்டு போகும்படியான தம்முடைய வேளை வந்தது என்று அறிந்து இயேசு, தம் சீடர்களின் பாதங்களைக் கழுவி, அவர்களுடன் கடைசி போஜனம் புசித்தார் (யோவான் 13:1). இது பஸ்கா பண்டிகைக்கு முன்பாக நடந்தபடியாலும், மற்ற சுவிசேஷங்களில் இரண்டு நாட்கள் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்பதாலும், இயேசு கடைசி போஜனத்தை புசித்தது இந்த பஸ்கா பண்டிகைக்கு முந்தைய இரண்டு நாட்களில் முதல் நாளில் ஆகும். அந்த நாளில்தான் பிரதான ஆசாரியர்களும் வேதசாஸ்திரிகளும் இயேசுவைக் கொல்ல ஆலோசனை செய்தார்கள் (மத்தேயு 26:3-5, மாற்கு 14:1-2, லூக்கா 22:1-2). அந்த நாளில்தான் யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்து, பணத்தையும் பெற்றுக்கொண்டான் (மத்தேயு 26:14-16, மாற்கு 14:10-11, லூக்கா 22:3-6). அந்தக் கடைசிப்போஜனத்தின் போதுதான், இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படி சாத்தான் யூதாஸின் இருதயத்தில் தூண்டினான் என்று நாம் வாசிக்கிறோம் (யோவான் 13:2). மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய சுவிஷேங்களில் பஸ்கா ஆட்டுக்குட்டியை பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளில் இயேசு கடைசி போஜனத்தை புசித்தார் என்று காணலாம் (மத்தேயு 26:17, மாற்கு 14:12, லூக்கா 22:7). ஆனால், அது பஸ்காவிற்கு முன்பு நடந்தது என்று அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார் (யோவான் 13:1). மேலும், இயேசுவை பிலாத்தின் அரமனைக்குக் கொண்டு வரும்பொழுது தீட்டுப்படாமல் பஸ்காவை புசிக்கத்தக்கதாக பிரதான ஆசாரியர்களும் வேதசாஸ்திரிகளும் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள் என்று காண்கிறோம் (யோவான் 18:28). பஸ்காவை ஆயத்தம் செய்யும் நாளில், ஏறக்குறைய ஆறாம் மணி நேரத்தில், இயேசு விசாரிக்கப்பட்டு நியாயந்தீர்க்கப்பட்டார் என்று சொல்லப்படுகிறது (யோவான் 19:14). எனவே, இயேசு பஸ்கா நாளன்று கடைசி போஜனத்தை புசிக்கவில்லை, மாறாக அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புசித்தார். இயேசு பஸ்கா
நாளன்றே பஸ்காவைக் ஆசாரித்திருந்தால், அவர் அன்று இரவு கைது செய்யப்பட்டு மறுநாள் சிலுவையில் அறையப்பட்டார் என்று நாம் கூறினால், அது ஒரு ஓய்வுநாள் அல்லவா? பஸ்காவை ஆயத்தம் செய்யும் நாளில் இயேசு விசாரிக்கப்பட்டார் அது ஏறக்குறைய ஆறாம் மணி நேரமாக இருந்தது (யோவான் 19:14). இயேசு மூன்றாம் மணி நேரத்தில் சிலுவையில் அறையப்பட்டார் என்று சொல்லப்படுகிறது (மாற்கு 15:25). எனவே, இயேசு பஸ்காவின் மூன்றாம் மணி நேரத்தில் அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள் சிலுவையில் அறையப்பட்டார். ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம் வரை பூமியெங்கும் அந்தகாரம் சூழ்ந்திருந்தது, ஒன்பதாம் மணியில் இயேசு மரித்தார் (மத்தேயு 27:46-50, மாற்கு 15:33-37, லூக்கா 23:44-46). சுருக்கமாக இயேசுவின் அந்த நாட்களை நாம் கவனித்தால் சில விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
பஸ்கா பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, திங்கட்கிழமை காலையில், பிரதான ஆசாரியர்கள் இயேசுவைக் கொல்ல ஆலோசனை செய்கிறார்கள் (மத்தேயு 26:3-5, மாற்கு 14:1-2, லூக்கா 22:1-2). அன்று மதியம், இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோனின் வீட்டில் உணவருந்தினார் (மத்தேயு 26:6-13, மாற்கு 14:3-9). அந்த நேரத்தில் தான் சீடர்கள் உணவைத் தயாரிப்பதற்காக நகரத்திற்குள் சென்றிருக்கலாம். அன்றுதான் யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்து, பணத்தையும் பெற்றுக்கொள்கிறான் (மத்தேயு 26:14-16, மாற்கு 14:10-11, லூக்கா 22:3-6). அன்று சாயங்காலம், இயேசு தம் சீடர்களுடன் கடைசி போஜனத்தை புசித்தார் (மத்தேயு 26:20, மாற்கு 14:17, லூக்கா 22:14, யோவான் 13:4). அந்த நாளில் தான் இயேசு ராபோஜனப் பந்தியை நிலைநாட்டினர், அது பஸ்காவின் நாளில் அல்ல. ஆனால் அது பஸ்காவின் பூர்த்தியாகும். பின்பு இயேசு தம் சீடர்களுடன் ஒலிவ மலையிலுள்ள கெத்செமனே தோட்டத்திற்குச் சென்றார் (மத்தேயு 26:30,36, மாற்கு 14:26,32, லூக்கா 22:39, யோவான் 18:1). இயேசு அடிக்கடி தம் சீடர்களுடன் அங்கு போயிருந்தபடியினால், யூதாசும் அந்த இடத்தை நன்கு அறிந்திருந்தான். இயேசு தோட்டத்திற்கு வந்த பின்பு, அன்று இரவு யூதாஸ் போர்ச்சேவகர்களுடன் வந்தான் (யோவான் 18:1-2). மேலும், அன்று இரவு இயேசுவினிமித்தம் எல்லாரும் இடறலடைவார்கள் என்று இயேசு கூறினார் (மத்தேயு 26:31). இயேசுவைக் கைது செய்ய வந்தவர்கள் தீப்பந்தங்களுடன் வந்தனர் (யோவான் 18:3). எனவே, இயேசு திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டார் என்பதை நாம் காண்கிறோம்.
திங்கட்கிழமை இரவு, இயேசு கைது செய்யப்பட்டு முதலில் அன்னாவிடம் கொண்டு செல்லப்படுகிறார் (யோவான் 18:12-13). அன்னா இயேசுவை விசாரித்த பிறகு அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அனுப்புகிறார் (யோவான் 18:19-24). அன்றிரவு காய்பாவும் சனாஹெரின் சங்கத்தினரும் இயேசுவை விசாரிக்கிறார்கள் (மத்தேயு 26:57-66, மாற்கு 14:53-64, யோவான் 18:24). ஆலோசனை சங்கத்தின் இந்த விசாரணை விடியற்காலையில் நடந்ததாக லூக்காவின் சுவிசேஷம் மட்டுமே கூறுகிறது (லூக்கா 22:66). விசாரணைக்குப் பிறகு, சங்கத்தினரும் சேவகர்களும் இயேசுவைத் துன்புறுத்தவும் பரிகசிக்கவும் தொடங்குகிறார்கள். இயேசு அந்த இரவில் சேவகர்களால் அடிக்கப்பட்டும் பரிகசிக்கப்பட்டும் காய்ப்பாவின் அரண்மனையில் கழிக்கிறார் (மத்தேயு 26:67-68, மாற்கு 14:65, லூக்கா 22:63-65). இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை, அதிகாலை முதலாம் மணி நேரத்திலே, அவர்கள் இயேசுவைப் பிலாத்துவின் அரண்மனைக்குக் கொண்டு செல்கிறார்கள் (மத்தேயு 27:1-2, மாற்கு 15:1, லூக்கா 23:1, யோவான் 18:28). பிலாத்து தனது முதல் விசாரணையின்போது, இயேசு ஒரு கலிலேயர் என்பதை அறிந்து, அவரை ஏரோதுவிடம் அனுப்புகிறான். (லூக்கா 23:6-7) ஏரோது இயேசுவை விசாரித்து, அவரிடம் எந்தக் குற்றத்தையும் காணாததால், அவரை மீண்டும் பிலாத்துவிடம் அனுப்புகிறான் (லூக்கா 23:8-12). மீண்டும் பிலாத்து பிரதான ஆசாரியர்களையும், அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடி வரச்செய்து தனது விசாரணையைத் தொடர்கிறான் (லூக்கா 23:13-15). பின்னர் அவன் இயேசுவை விசாரணை செய்ய அரமனைக்குள் நுழைந்தான் (யோவான் 18:33). பின்பு பிலாத்து இயேசுவைச் வாரினால் அடிப்பித்தான். அவன் இயேசுவைப் பரிகாசப் பொருளாக்கி, மக்களுக்கு முன்பாக வெளியே கொண்டு வருகிறான் (யோவான் 19:1-5). இயேசு அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்ததால், அவன் மீண்டும் உள்ளே சென்று இயேசுவிடம் பேசுகிறான் (யோவான் 19:9). மீண்டும், அவன் இயேசுவை வெளியே கபத்தா என்ற இடத்தில் பிலாத்துவின் நியாயாசனத்திற்கு கொண்டு வந்து சிலுவையில் அறையப்படுவதற்காக அவரை ஒப்படைத்தான் (யோவான் 19:13-16). காலை முதலாம் மணி நேரத்தில் தொடங்கிய அந்த விசாரணை ஆறாம் மணி நேரம் வரை தொடர்ந்தது (யோவான் 19:14). நம்முடைய நேரம்ப்படி காலை ஆறு மணிக்குத் தொடங்கிய அந்த விசாரணை பிற்பகல் பன்னிரண்டு மணி வரை தொடர்ந்தது. ஆறாம் மணி நேரத்தில் இயேசு சிலுவையில் அறையப்படத் தீர்ப்பிடப்பட்டபோது இயேசுவை வாரினால் அடித்த பின்பு அவரை சிலுவையில் அறையவேண்டும் என்று தான் தீர்ப்பிடப்பட்டது (மத்தேயு 27:26, மாற்கு 15:15). எனவே ஆறாம் மணி நேரத்திற்குப் பிறகு இயேசுவை போர்ச்சேவகர் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டு போய் அவரை வாரினால் அடிப்பித்து, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியை பின்னி அவருக்கு சூட்டி பரியாசம் பண்ணினார்கள், கோலால் அவர் சிரசின் முள்முடியில் அடித்தார்கள் (மத்தேயு 27:27-30, மாற்கு 15:16-19). மூன்றாம் மணி நேரத்தில், அதாவது நமது நேரம் காலை ஒன்பது மணிக்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்று சொல்லப்பட்டிருகிறது (மாற்கு 15:25). எனவே, இயேசு சிலுவையில் அறையப்பட்டது அன்று அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஒருவேளை, மதியானத்திற்குப் பிறகு தண்டனையை நிறைவேற்றுவது தகுதியற்றதாக இருந்தபடியால் இயேசு அந்த இரவை போர்ச் சேவகர்களின் கட்டுப்பாட்டில் அரண்மனையில் கழித்தார்.
புதன்கிழமை அதிகாலையில் இயேசுவைச் சிலுவையில் அறைவதற்காக கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கோல்கொத்தாவுக்கு அவர்கள் சென்றார்கள். ஒருவேளை நீண்ட பயணத்தின் காரணமாகவோ அல்லது இயேசு களைப்பாக இருந்ததாலோ, சீமோன் இயேசுவினுடைய சிலுவையைச் சுமக்க வைக்கப்பட்டார் (மத்தேயு 27:32-33, மாற்கு 15:21, லூக்கா 23:26). இயேசு புதன்கிழமையன்று, பஸ்கா பண்டிகை நாளில் சிலுவையில் அறையப்பட்டார். (மத்தேயு 27:35, மாற்கு 15:24-25, லூக்கா 23:33, யோவான் 19:18) ஏறக்குறைய ஆறாம் மணி நேரமான பொழுது சூரியன் இருள் அடைந்தபடியால் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று (மத்தேயு 27:45, மாற்கு 15:33, லூக்கா 23:44-45). மூன்றாம் மணி நேரத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு, ஒன்பதாம் மணி நேரத்தில் மரித்தார் (மத்தேயு 27:46-50, மாற்கு 15:34-37, லூக்கா 23:45-46, யோவான் 19:30). நமது நேரத்தில், அவர் காலை ஒன்பது மணிக்கு சிலுவையில் அறையப்பட்டார். நண்பகல் பன்னிரண்டு மணிக்கு சூரியன் இருண்டது. அது மூன்று மணி வரை தொடர்ந்து, இயேசு பிற்பகல் மூன்று மணிக்கு மரித்தார். பின்பு, அவர்களுடைய நேரம்ப்படி ஒன்பதாம் மணி நேரத்திற்குப் பிறகு, இயேசுவின் மரணத்திற்குப் பின்பு, யூதர்களின் வேண்டுகோளின்படி படைவீரர்கள் வந்து, இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தி, மற்ற இருவரின் கால்களையும் முறித்தார்கள் (யோவான் 19:31-37). இவ்வாறு, ஒன்பதாம் மணி நேரம் முதல் பன்னிரண்டாம் மணி நேரம் வரை, அதாவது பகலுக்குப் பிறகு சாயங்காலம் வரை இயேசு சிலுவையில் கிடந்தார் (மத்தேயு 27:57). பஸ்கா பண்டிகை நாளில், பஸ்கா ஆட்டுக்குட்டி சாயங்காலத்தில் பலியிடப்படுகிறது (யாத்திராகமம் 12:6). நமது பஸ்கா ஆட்டுக்குட்டியான இயேசுவும், பஸ்கா பண்டிகை நாளான புதன்கிழமையன்று கொல்லப்பட்டு, சாயங்காலம் வரை சிலுவையில் இருந்தார் (1 கொரிந்தியர் 5:7). சாயங்காலமானபோது, அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும் நிக்கொதேமுவும் இயேசுவை ஒரு கல்லறையில் அடக்கம் செய்தனர் (மத்தேயு 27:57-60, மாற்கு 15:42-46, லூக்கா 23:50-53, யோவான் 19:38-42). இயேசு மரித்த நாள், ஓய்வுநாளுக்கான ஆயத்த நாளாகவும் இருந்தது (மத்தேயு 27:62, மாற்கு 15:42, லூக்கா 23:54, யோவான் 19:42). பஸ்கா நாள் முதல் மாதத்தின் பதினான்காம் நாள் சாயங்காலத்தில் முடிவடைந்தது. அன்று சாயங்காலத்தில் பஸ்கா ஆசரிப்பார்கள் (லேவியராகமம் 23:5-6). அந்த பதினான்காம் நாள் சாயங்காலம் தொடங்கி பதினைந்தம் நாள் சாயங்காலம் வரை பரிசுத்த சபை கூடுதலின் ஓய்வு நாளாகும் (யாத்திராகமம் 12:16-18). இயேசு மரித்த நாள் பஸ்கா பண்டிகையின் நாளாக மட்டுமல்லாமல், தொடர்ந்து வரும் புளிப்பில்லாத அப்பத்தின் முதலாம் நாளாகிய பெரிய ஓய்வுநாளுக்கான ஆயத்த நாளாகவும் இருந்தது (யோவான் 19:31). இயேசு அடக்கம் செய்யப்பட்டபோது, ஆயத்தங்கள் நிறைவடைந்து ஓய்வுநாள் ஆரம்பமாயிற்று என்று காண்கிறோம் (லூக்கா 23:54). இயேசு மரித்த ஆயத்த நாளுக்கு மறுநாளாகிய ஓய்வுநாளில், காவல் சேவகர்கள் கல்லறையை முத்திரையிட்டு பத்திரப்படுத்தினார்கள் (மத்தேயு 27:62-66). புதன்கிழமை சாயங்காலத்தில் தொடங்கிய பெரிய ஓய்வுநாள், வியாழக்கிழமை சாயங்காலம் முடிவடைகிறது. ஓய்வுநாளுக்குப் பிறகு ஸ்த்ரீகள் வெள்ளிக்கிழமை காலையில் வெளியே சென்று சுகந்தவர்க்கம் வாங்கினார்கள் (மாற்கு 16:1). அன்றே கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம் பண்ணினார்கள். அன்றைய சாயங்காலம் முதல் சனிக்கிழமை சாயங்காலம் வரை வார இறுதி ஓய்வுநாள் ஆனபடியால் அவர்கள் ஓய்ந்திருந்தார்கள் (லூக்கா 23:56). ஓய்வு நாள் முடிந்து வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில் ஸ்த்ரீகள் கல்லறைக்கு வந்தபோது, கல்லறை திறந்திருந்தது (மத்தேயு 28:1, மாற்கு 16:2-4, லூக்கா 24:1-2, யோவான் 20:1). ஸ்த்ரீகள் வந்த பிறகு, பூமி அதிர்ச்சி உண்டானது என்றும் ஒரு தூதர் வந்து கல்லை புரட்டி தள்ளினான் என்றும் மத்தேயுவின் சுவிசேஷத்தில் மட்டுமே கூறுகிறது (மத்தேயு 28:2-7). இயேசு அங்கே இல்லை உயிர்த்தெழுந்துவிட்டார் என்று தேவதூதன் கூறினார். அங்கே அந்த வேளையில் இயேசுவின் உயிர்த்தெழுதல் காணப்படவில்லை. எல்லா சுவிசேஷங்களிலும் இயேசு உயிர்த்தெழுந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது எப்பொழுது என்று தெளிவாக கூறப்படவில்லை (மத்தேயு 28:5-7, மாற்கு 16:5-6, லூக்கா 24:4-6). நாம் இயேசுவின் வார்த்தைகளைக் கவனித்தால் யோனா மூன்று இரவும் மூன்று பகலும் பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, இயேசுவும் மூன்று இரவும் மூன்று பகலும் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்று அவர் கூறினார் (மத்தேயு 12:40). பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும், இயேசு மரித்த மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுவேன் என்று கூறியிருந்ததை (மாற்கு 8:31) பிலாத்துவுக்கு நினைவூட்டி, கல்லறையை முத்திரையிட்டுப் பாதுகாப்பாக வைக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டார்கள் (மத்தேயு 27:63). எனவே, இந்த மூன்று நாட்களுக்குப் பிறகு என்ற கணக்கின்படி தான் இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இயேசு புதன்கிழமை சிலுவையில் அறையப்பட்டு அன்றைய தினம் சாயங்காலத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இயேசு புதன்கிழமை இரவு, வியாழக்கிழமை பகல், வியாழக்கிழமை இரவு, வெள்ளிக்கிழமை பகல், வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை பகல் என மூன்று நாட்கள் கல்லறையில் இருந்தார். இயேசு சொன்னபடியே இரவும் பகலமாக மூன்று நாட்கள். பின்னர், சனிக்கிழமை இரவில் இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். மகதலேனா மரியாள் இரவு முடிவதற்கு முன்பே அதிக இருட்டோடே கல்லறைக்கு வந்தபோது, கல்லறை திறந்திருப்பதைக் கண்டாள் (யோவான் 20:1). எனவே, சனிக்கிழமை பகல் முடிந்த பிறகு இரவு ஆரம்பிக்கும் பொழுது இயேசு உயிர்த்தெழுந்திருக்கலாம். ஆனால் வாரத்தின் முதலாம் நாளிலே இயேசு அனைவருக்கும் தோன்றி, தம்மை வெளிப்படுத்தினார் (மத்தேயு 28:9-10, மாற்கு 16:9,12, லூக்கா 24:13-15, யோவான் 20:1,16-17,19). இவ்வாறு, இயேசுவின் கடைசி நாட்கள் திங்கள் முதல் ஞாயிறு வரை ஒரு வாரம் முழுவதும் நீடித்த பல நிகழ்வுகள் நிறைந்ததாக இருந்தன. ஏழு நாட்களின் நிறைவில் நிகழ்ந்த இயேசுவின் இரட்சிப்பின் கிரியைகளால் தம் மூலமாக தேவனிடம் நெருங்கி வருபவர்களை இயேசு முழுமையாக இரட்சிக்க வல்லவராக இருக்கிறார் மேலும் அவர் இன்றும் தேவனுக்கு முன்பாக நமக்காகப் பரிந்து பேசுகிறார் (எபிரேயர் 7:25). இந்த சத்தியங்களை உணர்ந்தவர்களாக தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று தங்கள் இருதயங்களில் விசுவாசிக்கிறவர்கள் இரட்சிப்பு அடைவார்கள் (ரோமர் 10:9-10). சகல கிருபைகளுக்கும் அதிபதியான தேவன், தமது கிருபையின் மிகுதியின்படி நம்மை இரட்சித்து ஆசீர்வதிப்பாராக.